அழகு

‘ஏங்க நான் உண்மையிலேயே அசிங்கமாத் தான இருக்கேன்’
‘இல்ல பிரியா’
நீங்க பொய் சொல்றீங்க?
‘‘உண்மையத் தான் சொல்றேன்– நீ உண்மையிலேயே அழகு தான்’’. மனைவி பிரியாவின் வார்த்தைகளுக்கு ஆறுதலாய் பதில் சொன்னான் தினகர்.
‘ஒங்க அளவுக்கு அழகு இல்லைன்னாலும் ஒடம்பு முழுசும் வெள்ளவெள்ளயா இல்லாம இருந்திருக்கலாம்… அதுவே என்னைய ஒரு மாதிரி படுத்துது.
‘இதெல்லாம் பெரிய விசயமே இல்ல பிரியா’ விட்டுரு’
‘இல்லங்க, நாம ரெண்டு பேரும் வெளிய நடந்து போனா. ஒங்களோட பொண்டாட்டி இவங்கதான்னு யாராவது கேட்டா சொல்றதுக்கே எனக்கு என்னமோ மாதிரி இருக்குல’
ஐயோ பிரியா, இதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்ல. நீ தான் அதப் பற்றி பேசிட்டே இருக்க’
‘மனசு தாங்கலங்க. ரொம்ப வேதனையா இருக்கு. இது எடையில வந்தது தான’. அதுதான். பேசாம நீங்க வேறொரு கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?
லூசு மாதிரி பேசுற? கொஞ்சம் கோபப்பட்டான் தினகர்.
பிரியா விடுவதாகவே தெரியவில்லை.
‘இல்லம்மா, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல’ கண்ணீர் விட்டபடியே இருந்தாள்.
‘பிரியா’
‘ம்’
‘வெளிய போவமா?’
‘நான் வரல’
‘ஏன்?’
‘வரலன்னா வரல’
‘ஒடம்புக்கு ஏதும் முடியலயா?’
‘இல்லையே?’
அப்பெறம் ஏன்?
‘நீங்க போய்ட்டு வாங்க’
‘இந்தா பாத்தியா. மறுபடியும் நீ… அதே எடத்தில தான் இருக்க’
‘வேணாங்க, இனிமே ஒங்கக் கூட நான் வரவே மாட்டேன்.’
‘ம்… சரி நான் போய்ட்டு வாரேன்’ தினகர் வெளியே சென்றான். அன்று வழக்கம் போல் இரவு அவன் வீடு திரும்பவே இல்லை.
‘என்ன இவ்வளவு நேரமாகியும் ஆளக்காணமே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த போது அவளின் செல்போன் அலறியது.
‘ஹலோ பிரியாவா?
‘ஆமா’ நீங்க?
எதிர்திசையிலிருந்து பதில் வர கொஞ்சம் தாமதமானது.
‘சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு’ ஒங்க ஹஸ்பண்டுக்கு ஆக்சிடண்ட் ஆயிருக்சு…’
‘ஐயோ’ என்ன ஆக்சிடண்டா? அழுது புலம்பினாள்.
‘ஒண்ணும் பயப்படாதீங்க. உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல… இப்ப ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். நீங்க சீக்கிரமா வாங்க.
சிறிது நேரத்திற்கெல்லாம் பஞ்சாய் பறந்தாள் பிரியா.
‘அங்கே படுக்கையில் கிடந்தான்…’
‘ஐயோ  என்னங்க… வாய் விட்டு ‘ஓ’ வென அழுதாள்.
‘மேடம் அழுது பிரயோசனமில்ல. மேற்க்கொண்டு நடக்க வேண்டியத பாருங்க’
‘இனி என்னங்க நடக்கணும். அதான் எல்லாம் போச்சே கூவி அழுதாள்.
‘மேடம் ஏதும் ஆபத்தில்ல. என்ன எங்களால அவரோட கண்ணத்தான் காப்பாத்த முடியல.ரெண்டு கண்ணும் பார்வைய எழந்திருச்சு,’’ பதில் சொன்னார் டாக்டர்.
பிரியாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
டாக்டர் இதுக்கு வேற தீர்வு இருக்கா?
‘இல்லையேம்மா’
‘ஒரு வாரம் ட்ரீட்மெண்ட் எடுத்திட்டு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்.’
சமாதானம் சொல்லி அனுப்பினார் டாக்டர்.
இரவும் பகலுமென நாட்கள் நகர்ந்தன. ஒருவாரம். அன்றிலிருந்து பிரியாவின் கைப்பிடிக்குள் கிடந்தான் தினகர்.
‘பிரியா’
‘ம்’
‘இப்ப நீ எப்படி இருக்க?
எப்பவும் போல அசிங்கமாத்தான்’
இருக்கேன்’
‘‘போ பிரியா…இது நிரந்தர மில்லாதது. ஆனா மனசு தான் நிரந்தரமானது. இப்ப பாரு. எனக்கு எல்லாமே இருட்டுதான். அழகு, அசிங்கம். இப்படி எதுவுமே எனக்கு தெரியாது.
நான் இப்ப ஏன் உசுரோட இருக்கணும்னு வருத்தப்படுறேன்.’
‘ச்சே, அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஒங்களுக்கு நானிருக்கேன்.’
பிரியா பிரியமாக ஒப்பித்தாள்.
அன்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்கள்.
என்ன தினகர் எப்பிடி இருக்கீங்க?
‘நல்லாயிருக்கேன் சார்’
‘பிரியா எப்பிடியிருக்காங்க’
‘‘ம்… நல்லா இருக்காங்க’’
இப்பவெல்லாம் ஒங்கக் கூட வாராங்களா?
‘ஆமா சார் என்னைய விட்டுட்டு ஒரு நிமிசம் கூட பிரியிறதில்ல.
‘குட்’ உச்சுக் கொட்டினார் டாக்டர்.
‘டாக்டர்’
‘சொல்லுங்க தினகர்’
‘‘என் மனைவிக்கு இதெல்லாம் தெரிய வேணாம்.’ சொல்ல மாட்டீங்களே’’
நிச்சயமா சொல்லமாட்டேன் தினகர்.
‘ஒங்களுக்கு நல்லா கண்ணு தெரியும்னு எனக்கு நல்லா தெரியும்… ஒங்க வொய்ப்போட இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ உடைக்கத் தான் இந்த ஏற்பாடு.’
‘ஆமா டாக்டர்’
‘குட்… தினகர். நான் இதையே மெய்ன்ட்டென் பண்றேன். நீங்களும்… கண்டிப்பா டாக்டர் நான் சொல்லவே மாட்டேன். போறது வரைக்கும் போகட்டுமே’ என்றான் தினகர்.
தினகரைக் கையோடு கூட்டிப் போக வாசலில் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள் பிரியா.

ராஜா செல்லமுத்து