அவரவர் கவலை அவரவருக்கு

ஒருவாரமாக கொட்டித் தீர்த்தது மழை.
தலைநகரம் சென்னை மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் எல்லாம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது.
தண்ணீர் புகுந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடி ஓடி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
தெருவே தண்ணீரில் மூழ்கிய போதும் வீட்டை விட்டு வெளியே செல்ல மனம் இல்லாத சிலர் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தனர்.
மழை நின்றது. வானத்தில் சூரியன் வெளியே தெரிவதும் மறைவதுமாக இருந்தது.
மழையால் தங்கள் பகுதியே தண்ணீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்டவர்களும்,  வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்களும், அருகில் உள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் மழை பெய்தால் தங்களது பகுதியே தண்ணீரில் மூழ்கிவிடுமே என்ற கவலையில் இருப்பவர்களும் இதுவரை பெய்த மழையே போதும், இனி மழையே பெய்ய வேண்டாம் என கடவுளை வேண்டிக்கொண்டிருந்தனர்.
மழை நன்றாக பெய்யட்டும், இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் தான் வரும் நாட்களில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கமுடியும் என்று மழையால் பாதிக்கப்படாமல் இருக்கும் ஒருசிலரும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
தாம்பரம் ரகுவின் வீட்டை சுற்றி நான்கு நாட்களாக இருந்த மழை தண்ணீர் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது.
இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மிகவும் அவதியில் தத்தளித்துக் கொண்டிருந்ததாலும் வெளியே செல்ல முடியாததாலும் டி.வி., செல்போன் போன்ற எந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் வேலை செய்யாததால் வெளி உலகில் என்ன நடக்கிறதே என்று தெரியாமல் இருந்தனர் ரகுவின் குடும்பத்தினர்.
வீட்டை சுற்றிய தண்ணீர் கொஞ்சம் வடிய தொடங்கியதால் வெளியே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தார் ரகு.
இரவு 7 மணி மின்சாரம் வந்தது.
உடனே பரபரப்பான ரகு தனது மனைவி வாணியை வேக வேகமாக அழைத்து உடனே மோட்டார் போட்டு தண்ணீர் டேங்கில் தண்ணீர் நிரப்பு, பக்கெட், குடம் எல்லாவற்றிலும் தண்ணீரை பிடித்து வை என்று அடுக்கடுக்கான வேலைகளை சொல்லிக்கொண்டே வீட்டில் இருந்த எமர்ஜென்சி லைட்டை சார்ஜரில் மாட்டிவிட்டு, வீட்டிலிருந்த 3 செல்போனையும் சர்ஜரில் போட்டு ஆன் செய்தார்.
ரகுவை போலவே அவரது மனைவி வாணியும் பரபரப்பாக மோட்டார் போட்டு, வீட்டில் இருந்த குடம், வாளி ஆகியவற்றில் தண்ணீரை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
வீடே பரபரப்பாக காணப்பட்டது.
அந்த நேரத்தில் எதை பற்றியும் கவலைபடாத 7ம் வகுப்பு படிக்கும் ரகுவின் மகன் ராஜா வேக வேகமாக ஓடி போய் டி.வி.யை ஆன் செய்தான்.
ஆனால் டி.வி. எடுக்கவில்லை.
அவங்க வீட்டில் கேபிள் கனெக்சன் என்பதால் கேபிள் டி.வி. எடுக்கவில்லை.
உடனே ராஜா தனது தந்தையிடம் அப்பா… டி.வி. தெரியலை. கேபிள் டி.வி. போடும் அண்ணனுக்கு போன் செய்து கேபிள் வரலைன்னு சொல்லுங்க என்றான்.
அட போட உனக்கு வேற வேலையில்லை.
கேபிள் டி.வி. காரர் ஏரியாவில் கரெண்ட் வந்திருக்காது. அதனால் டி.வி. தெரியலை. அந்த பகுதியில் கரெண்ட் வந்ததும் டி.வி. தெரியும், கொஞ்சம் நேரம் அமைதியா இரு… என் வேலை எல்லாம் முடிச்சிட்டு வறேன்னு சொல்லிக்கொண்டே தனது அடுத்த வேலைக்கு சென்றார் ரகு.
ராஜாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.
அங்கும்  இங்கும் ஓடிக்கொண்டே இருந்தான்.
பக்கத்துவீட்டுக்கு சென்ற அவன் அங்கு டி.வி. வருகிறதா? என்று கேட்டான். அவர்களும் டி.வி. வரவில்லைன்னு சொல்லிட்டாங்க.
அந்த நேரத்தில் வாணியின் செல்போன் ஒலித்தது.
வாணி செல்போனை எடுத்து பேசினார்.
எதிர் முனையில் கோவையில் இருந்து வாணியின் அம்மா… என்ன அம்மா சொல்லுங்க…
எப்படி இருக்க வாணி, உன் போனே கிடைக்கலை…. சுவிட்ஜ் ஆப்னு வந்தது.
அங்க மழை எப்படி இருக்கு, ஏரியாவில் தண்ணீர் எப்படி இருக்கு, டி.வி.யில் எல்லாம் பயங்கரமா காட்டிக்கிட்டு இருங்காங்க, இங்கு கிளம்பி வரவேண்டியது தானே என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
அம்மா இப்ப கொஞ்சம் மழை இல்லாம இருக்கு, இப்பதான் கரெண்ட் வந்தது. அது தான் வேகம் வேகமா வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று அவசர அவசரமாக பேசினார்.
அப்போது அங்கு வந்த ராஜா, செல்போனை தன்னிடம் கொடுக்கும்படி தனது தாய் வாணியிடம் கூறினான்.
அட இருடா… உனக்கு வேற வேலையில்லை நாளு நாளைக்கு அப்புறம் இப்பதான் எங்க அம்மாகிட்ட பேசுறேன். அதுக்குள்ள இவன் ஒருத்தேன் என்று கூறிவிட்டு, தனது அம்மாவிடம் பேசத்தொடங்கினாள் வாணி.
அங்கு வந்த ரகு… வாணி போனை வைத்திட்டு வேலையை பாரு அப்புறம் பேசலாம் என்று கூறினார்.
உடனே தனது தாயிடமிருந்து போனை வாங்கிய ராஜா, ‘‘பாட்டி உங்கவீட்டில் டி.வி. தெரியுதா?’’ என்று முதல் கேள்வியை கேட்டான்.
ஆமாம் ராஜா… டி.வி. தெரியுது என்ன… சொல்லு…. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறைன்னு போடுறாங்களான்னு பாத்து சொல்லுங்க.
இன்னும் மழை பெய்யும்னு வானிலை அறிக்கை சொல்றாங்கன்னு கொஞ்சம்பார்த்து சொல்லுங்க என்று கேட்டான்.
உடனே அவனது பாட்டி… சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறைன்னு வருது… காஞ்சிபுரத்துக்கு வரலைன்னு சொன்னாங்க…
இதை கேட்ட ராஜா சோர்வடைந்து செல்போனை துண்டித்தான்.
தனது தந்தை ரகுவிடம், அப்பா… இந்த வானிலை மைய பாலசந்தர் சரியில்லை அப்பா…
திரும்ப ரமணனே வந்தா நல்லா இருக்கும். அவர் தன் அடிக்கடி நல்ல மழை பெய்யும்னு சொல்வாரு… பள்ளிக்கு விடுமுறை விடுவாங்க.
அதே மாதிரி இந்த கலெக்டரும் சரியில்லை. அவரையும் மாற்றனும்…
சென்னை, திருவள்ளூர் கலெக்டர் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறைன்னு அறிவித்த பிறகும் காஞ்சிபுரத்துக்கு விடுமுறைன்னு சொல்லமாட்டேங்கிறாரு.. என்று தனது மன குறையை கூறத் தொடங்கினான் சிறுவன் ராஜா.
இதை கேட்ட ரகுவுக்கு சிரிப்பு வந்தது…
இங்கு ஊரே தண்ணீரில் தத்தளித்து இப்பதான் கொஞ்சம் மழையில்லாம மக்கள் நிம்மதியா இருக்காங்க.
நீ என்னடானா உனக்கு பள்ளிக்கு விடுமுறை விடுவாங்களான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்க.
மழைக்காக ஒருவாரம் லீவு விட்டு வீட்டில் இருந்தாயே உனக்கு இன்னும் லீவு வேண்டுமா?
மக்கள் எல்லாம் மழைன்னு வானிலை ஆய்வு மையம் சொன்னால் வயிற்றில் புளியை கரைச்சமாதிரி இருக்குன்னு சொல்றாங்க.
நீ என்னடானா? வானிலை மையம் மழை பெய்யும்னு சொல்லமாட்டாங்களா? பள்ளிக்கு விடுமுறை விடமாட்டாங்களான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்க.
அவன்… அவன்…. கவலை அவன் அவனுக்குடா….  என்று கூறிய ரகு  தனது மற்ற வேலையை தொடர்ந்தார்.