நல்ல உள்ளங்கள்

என்னங்க 2 செட் டிரஸ் கூடுதலா எடுத்து வைத்துக்கோங்க. போகும் இடத்தில் வேலை முடிய கால தாமதம் ஆகும் என்று சென்னை செல்ல கிளம்பிக் கொண்டிருந்த தனது கணவர் சுந்தரத்திடம் கூறினாள் சாந்தி.
மதுரையில் சிறிய அளவில் வீடியோ கடை நடத்தி வரும் சுந்தரம் தனது தொழிலை விரிவுப்படுத்துவற்காக கேமிரா மற்றும் நவீன கருவிகள் வாங்குவதற்காக சென்னைக்கு போய்வர முடிவு செய்தார்.
அதற்காக ரெயிலில் டிக்கெட் எடுத்திருந்த சுந்தர் தனது துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
ஒரே நாளில் தனது வேலையை முடித்து விட்டு திரும்பி விடலாம் என்ற நோக்கத்தில் ஒரு செட் துணி மட்டும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த தன கணவர் சுந்தரிடம் அவரது மனைவி, வேலை முடிய கால தாமதம் ஏற்படலாம் . அதனால் கூடுதலா ஒரு செட் துணிகளை எடுத்து வைக்கும்படி கூறினார்.
இல்ல சாந்தி ஒரே நாளில் வேலை முடிந்திடும்.
சென்னையில் இருக்கும் எனது நண்பர் முத்துவிடம் போனில் பேசினேன். அவர்தான் சொன்னார் நாளை சென்னையில் நடக்கும் புகைப்பட கண்காட்சியில் பெரிய பெரிய நிறுவனத்தின் கேமிராக்கள் மற்றும் இதர சாதனங்கள் இடம் பெற்றிருக்கும் அவற்றை அங்கேயே பரிசோதித்து குறைந்த விலையில் வாங்கலாம் என்று கூறினார்.
அதனால் நான் எங்கேயும் அலையப் போவதில்லை. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் புகைப்பட கண்காட்சி அரங்குக்கு மட்டும் செல்லப் போறேன்.
வேலை முடிந்ததும் மாலையிலே ரெயில் மூலம் மதுரைக்கு திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிய சுந்தர், தனது கழுத்தில் மாட்டியிருந்த தங்க செயினையும் கை விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை கழற்றி தனது மனைவியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கும்படி கூறினார்.
உடனே அவரது மனைவி சாந்தி என்னங்க எதுக்கு இந்த செயினையும்  மோதிரத்தையும் கழற்றி கொடுக்கிறேங்க.
சாந்தி சென்னை ரொம்ப மோசமான ஊருன்னு என் நண்பன் முத்து சொல்லியிருக்கான்.
பர்சில் பணம் இருந்தால்  நம் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்று விடுவார்களாம்.
கொஞ்சம் அசந்தா ஆளையே தூக்கிட்டு போய் வித்துடுவாங்களாம். அந்த அளவுக்கு மோசமான ஊராம். அதுதான் எதுக்கு இந்த விஷப்பரீட்சைனும் நகை எல்லாம் கழற்றிட்டேன்.
ஏங்க… சென்னையில் எத்தனை லட்சம் பேர் இருக்காங்க . அவங்க யாரும் நகையே போடுவது இல்லையா. அவ்வளவு திருட்டு பயமான ஊரா அது.
எங்க மாமா கூட அங்க தாங்க இருக்காரு. அவரு இப்படி எல்லாம் சொல்லவே இல்லையேங்க. ஏதோ ஒரு சில திருடர்கள் இருக்கதான் செய்வாங்க. நம்ம ஜாக்கிரதையா இருந்தா போதும்.
அதுக்கு போய் இப்படி நகை எல்லாம் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் இல்லங்க என்றார் சாந்தி.
இல்ல சாந்தி உனக்கு ஒண்ணும் தெரியாது.
என் நண்பர் ஒருவர் சொன்னார். சென்னைக்கு போகும் போது ரொம்ப கவனமா இரு என்றார். மேலும் கையில் பெரிய தொகை எடுத்து வருவதால் ரெயிலில் யார் கிட்டேயும் அவசியல் இல்லாமல் பேசக்கூடாது என்றும்  ரெயிலில் ஏமாத்துக்காரங்க வாருவாங்களாம். அவங்க நம்ம பக்கத்தில் உட்கார்ந்து ஏதாவது சப்பிட கொடுப்பாங்களாம் அந்த உணவை சாப்பிட்டா நம்ம அப்படியே மயங்கி விழுந்துடுவோமாம். அவங்க நம்மிடமிருந்து நகை, பணம் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போயிட்டுவாங்களாம்.
அதனால ரெயில் போகம் போது நகை, பணம் எதுவும் எடுத்துட்டு போகாதேன்னு சொன்னார்.
இருந்தாலும் கேமிரா வாங்க பணம் தேவைப்படுவதால் பணத்தை மட்டும் கைபையில் வைத்திருக்கேன். நகை எதுவும் எனக்கு வேண்டாம். அது வீட்டிலே இருக்கட்டும் என்றார் சுந்தர்.
ஏங்க நம்ம கவனமா இருக்க வேண்டியது உண்மை தான். அதுக்காக இப்படி எல்லாம் தேவையில்லை.
சரி இருந்தாலும் பராவயில்லை என்று கூறிய சாந்தி சுந்தரிடமிருந்து நகைகளை வாங்கி வீட்டு பீரோவில் வைத்துக் கொண்டார்.
அதன்பின்னர் வீட்டிலிருந்து கிளம்பி ரெயில் நிலையம் வந்த சுந்தர் ரெயில் மூலம் சென்னை வந்து இறங்கினார்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் தனது நண்பர் முத்து வீட்டு வந்தார்.
அங்கு குளித்து முடித்து, முத்துவுடன் அமர்ந்து காலை உணவை முடித்தார் சுந்தர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து கிளம்பி நந்தம்பாக்கம் செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
சுந்தர் தான் கேமிரா வாங்குவதற்காக கொண்டு வந்த பணத்தை ஒரு கைபையில் வைத்து தனது கையில் வைத்துக் கொண்டார்.
அப்போது சுந்தர், தன் கைபையில் பணம் அதிகமாக இருப்பதால் மாநகர பஸ்சில் செல்ல வேண்டாம். ஆட்டோவில் சென்று விடலாம் என்று தனது நண்பர் முத்துவிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்த முத்து நந்தம்பாக்கம் செல்ல வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டார்.
அந்த ஆட்டோகாரர் 200 ரூபாய் கேட்டார்.
என்னப்ப இந்த இருக்கிற நந்தம்பாக்கத்திற்காக 200 ரூபாய் வேண்டாம் என்று கூறினார்.
உடனே சுந்தர் ‘‘ என்னங்க இது பகல் கொள்ளையா இருக்கு. நான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரெயில் வருவதற்கே 300 ரூபாய் தான் டிக்கெட். சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல 200 ரூபாயா வேண்டாம் முத்து என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொரு ஆட்டோ வந்தது… அந்த ஆட்டோ டிரைவர் 120 ரூபாய் கேட்டார்.
அந்த தொகை சரியானதாக தோன்றியது…
அவர்கள் 2 பேரும் ஆட்டோவில் ஏறினர். சுந்தர் தான் வைத்திருந்த கைப்பையை ஆட்டோவின் சீட்டுக்கு பின்னால் பத்திரமாக வைத்தார்.
அவர்கள் 2 பேரும் தங்களது பழைய நினைவுகளை பேசிக்கொண்டே வந்தனர்.
அவர்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
அந்த நேரத்தில் நந்தம்பாக்கம் வந்ததும் ஆட்டோகாரர் வாகனத்தை வர்த்தக மையத்தில் வாசலில் நிறுத்தினார்.
அப்போது அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த போலீசார் ஆட்டோக்காரரை வண்டியை அங்கிருந்த எடுக்கும்படி திட்டினார்.
உடனே ஆட்டோக்காரர்…. சார் கொஞ்சம் சீக்கிரம் இறங்குகள் என்று முத்துவிடம் கூறினார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் அவசர அவரசமாக கீழே இறங்கி ஆட்டோகாரரிடம் ரூ. 120 கொடுத்து அனுப்பி வைத்தனர்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தை பார்த்தவுடன் சுந்தர், அந்த கட்டிடத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார். அந்த கட்டிடத்தின் விபரத்தை கேட்டப்படி உள்ள கண்காட்சி நடக்கும் அரங்கிற்குள் செல்ல முயன்றனர்.
அங்கு வாசலில் இருப்பவர்கள் அனைவரின் விபத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
உடனே சுந்தர் தனது கடையில் விசிட்டிங் கார்டை எடுப்பதற்காக கைப்பையை  தேடினார். அவரது கையில் இல்லை.
உடனே முத்துவிடம் எனது கைபை எங்கே என்று முத்துவை பார்த்தார் அவரது கையிலும் பையில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தருக்கு கைப்பையை ஆட்டோவில் வைத்தது ஞாபகம் வந்தது.
அய்யய்யோ… பையை ஆட்டோவிலே விட்டுட்டு வந்துட்டோமோ…. ஆட்டோ… ஆட்டோ… என்று வேகமாக வாசலுக்கு ஓடினார் சுந்தர். முத்துவும் அவருடன் ஓடினார்.
அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் நடந்த விபரத்தை கூறினார்.
உடனே அந்த போலீஸ்காரர் ஆட்டோ நம்பர் தெரியுமா… உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று கூறினார்.
சுந்தரும்  முத்துவும் பரபரப்பானார்கள். ஆட்டோவின் நம்பரும் தெரியாது. இதனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே இவர்களை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் போரூர் வழியாக சென்றார்.
அப்போது அங்குள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் அந்த ஆட்டோவில் ஏறினார்.
அந்த பயணி சீட்டின் பின்னால் கைபை இருப்பதை பார்த்து, டிரைவரிடம் இங்கு ஒரு பை இருக்குதே உங்களுடையதா என்று ஆட்டோ காரரிடம் கேட்டார்.
இல்லையே என்று கூறிய ஆட்டோகாரருக்கு… திடீரென ஞாபகம் வந்தது… தனது ஆட்டோவில் நந்தம்பாக்கம் வந்தவர்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
உடனே அந்த பயணியை கீழே இறங்கும்படி கூறிவிட்டு ஆட்டோவை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தை நோக்கி திருப்பினார்.
இதற்கிடையே சுந்தரும்  முத்துவும் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர்.
நந்தம்பாக்கம் வந்த ஆட்டோ டிரைவர் வாசலில் நின்று கொண்டிருந்த காவலரிடம்  நடந்த விபத்தை கூறி உள்ளே செல்ல வேண்டும் என்று கூறினார்.
உடனே அந்த காவலர் அந்த பயணிகள் 2 பேரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றிருப்பதாகவும், உடனே அங்கு போ என்று கூறி  அருகில் இருந்து மற்றொரு காவலரை உடன் அனுப்பி வைத்தார்.
அந்த ஆட்டோ டிரைவரும் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு சுந்தரும்  முத்துவும் புகார் மனு எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஆட்டோ டிரைவர் அங்கு வருவதை பார்த்ததும்  சுந்தருக்கு கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது.
வேகமாக வாசலுக்கு ஓடிய சுந்தர், அந்த ஆட்டோ டிரைவரின் கையில் தனது கைப்பை இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்.
உடனே அந்த காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் அந்த கைபையை ஆட்டோ டிரைவரிடமிருந்து வாங்கி சுந்தரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து சுந்தர் அந்த ஆட்டோ டிரைவரின் கையை பிடித்து நன்றி… நன்றி… நன்றி… என்று கூறிக் கொண்டே… சென்னையில் இருக்கும் எல்லோருமே கெட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருதேன்.
ஆனால் உங்களை போல் நல்லவர்களும் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டேன் என்று தன் தவற்றை உணர்ந்து வருந்தினார்.

 துரை. சக்திவேல்