மழைக்கால விடுமுறை

‘அம்மா இன்னைக்கு லீவு விடுவாங்களா?’
இல்லையே எதுக்கு லீவு? கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டாள் பொன்னி.
‘மழ வருதே’ கொஞ்சலோடு சொன்னாள் அஞ்சலி.
‘ம்ஹுகும். இன்னைக்கு லீவெல்லாம் கெடையாது. ஸ்கூல் கண்டிப்பா இருக்கும்.
‘அம்மா’
‘மழ வரப்போகுதும்மா’
‘இங்க பாரு அஞ்சலி நீ ஸ்கூலுக்கு போகாம லீவு போடுறதுக்கு மழ பெய்யணுமா? மழயெல்லாம் எதுவும் பெய்யாது. பேசாம ஸ்கூலுக்கு கௌம்புற வழியப் பாரு.
‘நேத்துக் கூட ஸ்கூல்ல பேசிட்டு இருந்தாங்கம்மா’
‘எப்பிடி? எரிச்சல் கலந்த முகத்தோடு அடுப்படியில் காலை டிபனைத் தயார் செய்து கொண்டிருந்தாள் பொன்னி.
‘ஏங்க… ஏங்க… காலை நாளிதழில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சரவணன் சட்டென என்ன? என்று கேட்டான்.
‘ஒங்க பொண்ணு என்ன சொல்றான்னு பாருங்க’
‘என்ன அஞ்சலி’
‘அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவாம்பா’
‘யாரு சொன்னா?’ பேப்பரிலிருந்து முகத்தை எடுக்காமலேயே கேட்டான் சரவணன்.
‘இன்னைக்கு மழ வருமாம் அதுனால லீவுன்னு பேசிட்டாங்கப்பா’
யாரு?
‘என்னோட பிரண்ட்ஸ்ப்பா’
‘லீவெல்லாம் இருக்காது’ சீக்கிரம் கௌம்பு’ அதட்டியபடியே மகளைத் திட்டிக் கொண்டிருந்தாள் பொன்னி.
‘அம்மா’
‘ம்ஹுக்கும் நீ வீட்ல இருந்தா என்னோட அசுர வாங்குருவே’
நீ ஸ்கூலுக்கு போனா தான் எனக்கு நிம்மதி. இல்லன்னா வீட்ல இருந்து பெரிய தொந்தரவு பண்ணுவ. ம்… சீக்கிரம்… சீக்கிரம்…. அஞ்சலியை விரட்டிக் கொண்டே இருந்தாள்.
‘அஞ்சலி… பட்டும்படாமல் அழுதுகொண்டே குளிக்கச் சென்றாள்.
‘ரெண்டாவது படிக்கும் போதே என்ன பொய் சொல்றா பாருங்க. அப்பிடியே அப்பன் புத்தி’
‘யாரு … என்னோட புத்தியா என்ன?’
‘ஆமா… நீங்களும் ஒங்க பொண்ணும் ஒண்ணு.
‘என்னடி சொல்ற?’
‘ஆமா …. பொய்யா சொன்னேன் . எங்கயாவது வெளிய இருந்துட்டு ஆபிஸ்ல இருக்கேன்னு பொய் சொல்றது. வேற எங்கயாவது போய்ட்டு, ஆபீஸ் வேலையா வந்திருக்கேன்னு சொல்றது. இப்பிடி பொய் சொல்ற ஒங்கள மாதிரி தான இருக்கும் ஒங்களோட புள்ள இருக்கும் .’
‘ஏய். ஏண்டி காலங்காத்தால கொல்ற’
‘ஆமா உண்மைய சொன்னா கோபம் பொத்திட்டு வந்திருமே’
‘காலங்காத்தால ஒன்னோட பேச முடியாது’
‘ஆமா … நீங்க பேசுனா மட்டும் எல்லாம் சரியா இருக்குமாக்கும்’
‘ஆரம்பிச்சிட்டயா?’
‘நான் பேசுனா மட்டும் கோபம் பொத்திட்டு வந்திருமே’
‘ஆமா … இல்லாதத சொன்னியின்னா
‘றகு எப்பிடி இருக்கும்?’
‘சரி சரி பேசாதீங்க. புள்ளைய ஸ்கூலுக்கு கிளப்பி விடுங்க.
‘இல்ல நீ  கிளப்பி விடு’
‘எனக்கு வேல இருக்கு’
‘எனக்கு மட்டும் வேல இல்லையா?’
‘நான் ஆபிஸ் கௌம்பணும்’
‘எனக்கு வீட்டுல நெறய வேலையிருக்கு’
‘எனக்கு மட்டும் தான் புள்ளையா? ஒங்களுக்கும் புள்ள தான போய் ரெடி பண்ணுங்க’
‘முடியாது’
‘என்னாலயும் முடியாது’
‘ஏண்டி நான் ஆபீஸ் போகணுமா வேணாமா?’
‘நீங்க போனா போங்க, இல்ல என்னமோ செய்யுங்க கொழந்தய  கிளப்பி விடுற வழியப் பாருங்க’
‘முடியாது’
‘என்னாலயும் முடியாது’
‘ஒன்னால எனக்கு தெனந்தோறும் இதே ரோதன’
‘ரோதன, கீதனன்னு பேசுனீங்க அம்புட்டு தான்’
‘என்னடி ரொம்ப பேசுற?’
‘ஒன்னைய என்னைக்கு கட்டிட்டு வந்தனோ அன்னைக்கு இருந்து ரோதனை தான’
‘இந்தா பாருங்க. ரோதன அப்பிடி இப்பிடின்னு பேசுனீங்க அம்புட்டுதான்’
‘என்னடி பண்ணுவ?’
‘எங்க வீட்டுக்கு போயிடுவேன்’
‘மொதல்ல அதச் செய்யி’
‘ஓ கோ, அப்பிடி போகுதோ’
எனக்கு தெரியும்ங்க. ஒங்க கூட வேல பாக்குற அருணாவ இங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போதே எனக்கு தெரியும். ஒங்களுக்கும் அவளுக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு,
‘ஏய் … கூட வேல பாக்குறவங்கள எல்லாம் அப்பிடி பேசாத… தப்பு…
‘ஓகோ… ஐயாவோட கேர்ள் பிரண்ட சொன்னதும் கோவம் பொத்திட்டு வருதோ?’
‘பண்றது எல்லாம் அயோக்கியத் தனம். இதுல சமாளிப்பு வேற.
கணவனுக்கும் மனைவிக்குமான வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
‘ஏய் நீ தேவையில்லாதத எல்லாம் பேசிட்டு இருக்க… என்னால கொழந்தய கூட்டிட்டு போக முடியாது. ஆபிஸுகு டைம் ஆச்சு…’
என்னால போக முடியாது. நீ கூட்டிட்டு போய்ட்டு வா’
‘எனக்கு என்ன வந்திருச்சு. போனா போகட்டும், இல்ல வீட்டுலயே கெடக்கட்டும்.
‘ஏய்… நீ ரொம்ப பேசுற?’
‘பளார்’ என பொன்னியின் கன்னத்தில் அறைந்தான் சரவணன்.
‘ஓ’வென அழ ஆரம்பித்தாள் பொன்னி.
‘குளித்துவிட்டு வெளியே வந்தாள் அஞ்சலி.
‘அம்மா’ ஸ்கூலுக்கு  கிளப்பி விடு’
‘போ… நீ ஸ்கூலுக்கு போனா எனகென்ன. போகாட்டி என்ன? அழ ஆரம்பித்தாள் பொன்னி.
‘அப்போது, அவள் படிக்கும் பள்ளியிலிருந்து போன் வந்தது.
‘ஹலோ பொன்னி மேடமா?
‘ம்’
‘இன்னைக்கு மழை வர்ற மாதிரி இருக்கு. இன்னைக்கு ஸ்கூல் லீவ். கொழந்தைய ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்’ என்று தகவல் வந்தது.
நாக்கை கடித்துக்கொண்ட பொன்னி  குழந்தை , கணவனைப் பார்த்து ,
‘‘ ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க . அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிட்டேன் ’’என்றாள் பொன்னி.
குழந்தையும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
மன்னிச்சர்றோம் . நீயும் எங்களை மன்னிச்சுடு.’’ என்றார்கள்.
அவ்வளவுதான். மூன்று பேரும் மகிழ்ச்சியாகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

ராஜா செல்லமுத்து