மழைக்கு ஒதுங்கிய நேரம்

சென்னை ஒரு வித்யாசமான ஒரு நகரம்.
வெயில் வாட்டினால் வெந்து போய்க் கிடக்கும்.
மழையடித்தால் தண்ணீரில் தத்தளிக்கும்.
பேய்ந்தும் கெடுக்கும், ஓய்ந்தும் கெடுக்கும் வானம்.
அன்று நல்ல மழை
தார்ச்சாலை எங்கும் மழை குளிக்கும் வாகனங்கள். பெய்யும் மழையைச் சபித்துக் கொண்டு ஓடும் மக்கள் கூட்டம் என நகரம் மழையால் முடங்கி நின்றது.
‘ச்சே… ஏன் தான் இப்பிடி மழ பேயுதோ?’
‘ஏங்க பேஞ்சுட்டு போகட்டுமே’
‘நீங்க சொல்லிட்டு மாடி மேல ஏறி ஒக்காந்துக்கிருவீங்க… பாவம்ங்க இந்த மக்கள் தண்ணில என்ன பாடு படுறாங்கன்னு பாருங்க’ ரொம்ப கஷ்டங்க. அங்க பாருங்க என்ன பாடு படுறாங்கன்னு’ என்று ஒருவர் காட்ட சீனிவாசன் மழை விழும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தலையில் கோணிப்பையைப் போட்டுக் கொண்டு தண்ணீரில் சலக் …  சலக்கென நடந்து கொண்டிருந்தாள்.
‘பாவம்ங்க’
‘ம்’
‘‘ தமிழ்நாட்டுல தாங்க இவ்வளவு அநியாயம்,’’ மழைக்கு ஒதுங்கிய ஓர் இடத்தில் கூடி நின்ற கூட்டத்தில் ஒரு பெருசு பேசினார்.
இங்க எங்க பாத்தாலும் சிமெண்ட் ரோடு .பெறகு எப்பிடி பேயுற மழத் தண்ணி பூமிக்குள்ள போகும். நாம வசதியாக வாழ பூமியக் கொடுத்துட்டு, பூமிய குத்தம் சொல்றது கொடுமைங்க’ என்று வக்காலத்து வாங்கினார் ஒருவர்.
மணி என்னாச்சு? என்றாள் ஒரு பெண்
‘பத்தய முக்கா?’
‘என்னது பத்தய முக்காவா’
‘ஆமா’
‘ம்க்கும்…, அஞ்சு நிமிசம் லேட்டா போனாலே அந்த மேனேசரு காட்டு கத்து கத்துவான். இதுல இப்பவே பத்தே முக்காவாச்சே?
மழ விடுதான்னு பாரு’’ சலித்தாள் ஒரு பெண்.
‘அங்க பாருங்க வானத்துக்கும் பூமிக்கும் கரேர்ன்னு இருக்கு.
ம்ஹுக்கும்… எப்பிடியும் இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல மழ பெய்யும் போல’ என்று ஒருவர் சொல்ல ‘அட சும்மா இருக்க, ஆபிஸ் போக வேணாமா?
‘ஏங்க, இவரு என்ன ஜோசியமா சொல்றாரு. அதுவா மழ பெய்யும் நிக்கும். அது எப்ப விடுதோ அப்பத்தான் நிக்கும் என்றார் சீனிவாசன்.
‘சாமி மழ நிக்கணும். நான் ஸ்கூலுக்கு போக நேரமாச்சு.
கண்மூடி மன்றாடினாள் ஒரு மாணவி.
மழை வலுக்க வலுக்க அங்கிருந்த ஓட்டல் வாசலில் மழைக்கு ஒதுங்கியிருந்த ஆட்கள் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள் .அவர்களை ஓட்டலுக்குள் அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்  ஓட்டல் ஊழியர்கள்.
இது தாங்க பிஸினஸ் டெக்னிக், மழையில இருந்து ஆளுகள எவ்வளவு அழகா பத்ரமாக கூட்டிட்டு போறானுகன்னு பாரு’ ஏவாரத்துக்கு ஏவாரமாச்சு, மனுசங்க மழையில இருந்து தப்பிச்சது மாதிரியும் ஆகியிருச்சே.
‘ஆமாங்க… எல்லாம் பிஸினஸ்’
மழை வலுத்துக் கொண்டிருந்தது.
‘மழ நிக்குதான்னு பாரு. இப்பிடியே பேஞ்சிட்டு இருந்தா இங்கனயே நிக்க வேண்டியது தான்’ மழையைச் சபித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
அப்போது அந்த சிறிய கூட்டத்திலிருந்து ஒருவன் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
‘டேய் இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்குடா.
நல்லா மழ அடிக்கட்டும். இன்னும் ரெண்டு நாளைக்கு இப்பிடி மழ பேஞ்சா ரொம்ப நல்லது,
‘ஆமா… நல்லா பெய்யட்டும் எனப் பேசிக் கொண்டிருந்தவரை அங்கு நின்றிருந்த கூட்டம் கொலை வெறியோடு பார்த்தது. அவன் யாரையும் சட்டை செய்யாமல் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தான்.
‘பரவாயில்ல மச்சி, இப்பிடி மழ பேயலன்னா நாம அஞ்சு ரோலர் தண்ணி, அதாவது இருவத்தஞ்சு லிட்டர் தண்ணி கஷ்டத்துக்கு அடிச்சிருக்கணும். கட்டடம் கட்டி முடிக்க கரைக்டா மழையும் பேஞ்சிட்டு இருக்கு. இப்ப கட்டடம் ரொம்ப கெட்டி பட்டிருக்கும். நல்லா பேயட்டும். நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கும் நாள மறுநாளும் நல்ல மழ பெய்யும். நமக்கு தண்ணி ரொம்ப மிச்சம்’ என்று பேசிக் கொண்டிருந்தவனை கோபமாகப் பார்த்தது கூட்டம்.
இது தாங்க ஒலகம். ஒருத்தங்களுக்கு நஷ்டம். இன்னொருத்தனுக்கு லாபம், ஒருத்தனுக்கு துன்பம். வேறொருத்தனுக்கு இன்பம். மழைனால நாம எவ்வளவு கஷ்டப்பட்டு நிக்கிறோம். ஆனா, இதே மழ இன்னொருத்தனுக்கு சந்தோசத்த தருது பாருங்க. அதுனால எதுவும் இங்க பிரச்சனை இல்ல. தப்பில்ல நாம கஷ்டப்படுறோம். இன்னொருத்தன் சந்தோசப்படுறான் என்று சீனிவாசன் சொல்ல செல்போனில் பேசிக் கொண்டிருந்தவன் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யவேண்டுமென்று எதிர் திசையில் உள்ளவரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
மழை கொஞ்சம் வலுவிழந்திருந்தது.

 ராஜா செல்லமுத்து