மழை

கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
பேஞ்சா பேஞ்சும் கெடுக்குது; காஞ்சா காஞ்சும் கெடுக்குது. இந்த மழய நம்பி எந்த பிரயோசனமும் இல்ல. அதிலயும் மெட்ராஸ்ல மழ பேஞ்சு ஊரே தண்ணிக்காடா ஆகிருது. காஞ்சா தரிசாப்போயிருது. பருவம் தப்பிப்போயி எப்பப்ப மழ பேயுது. எப்பப்ப மழ பேயமாட்டீங்குதுன்னு தெரியல எனப் புலம்பிக் கொண்டிருந்தான் ஜீவதுரை அவனுடன் அந்த வழியாகப் போகும் ஆட்கள் குழுமியிருந்தார்கள். மழை சோவெனப் பெய்துகொண்டிருந்தது. கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாய் ஆட்கள் நின்றிருந்தார்கள்.
தார்ச்சாலை நீர்ச்சாலையாய் மாறியிருந்தது. விர்விர்ரென விரைந்த கொண்டிருந்தன வாகனங்கள். அதன் சக்கரங்கள் ஜலப்பிரயத்தில் சிக்கி சகதியை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.
நின்னு போறானுகளான்று பாரு. ரோட்டுல போகும் போதே  ஏராபிளான்ல போறதா நெனப்பு எப்படி தண்ணிய அடிச்சிட்டுப் போறானுகன்னு பாரு. புலம்பியபடியே சாலையின் ஓரம் ஆட்கள் நின்றிருந்தார்கள்.
மழை விடுவதாக இல்லை சோ வெனப் பெய்து கொண்டே இருந்தது.
இப்பவே மணி பத்தரை ஆகப்போச்சு என்னைக்கு இந்த பஸ்ஸு வந்து ஆபிஸ் போறது ஜீவதுரை புலம்பிய படியே நின்றிருந்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கண்ணாடியில் வழியும் தண்ணீரைத் துடைத்த படியே வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
ம்ஹுகும் நாம போற 12 B இன்னைக்கு வராது . அதென்னமோ நம்ம ராசியோ என்னமோ நாம எங்க போகனும்னு நிக்கிறமோ அதுக்கு ஆப்போசிட்டாதான் பஸ் வரும்.  புலம்பியடியே நின்றிருந்தான் ஜீவதுரை
“தம்பி என்ன நீங்களா பேசிட்டு இருக்கீங்க?”
“இல்லங்க, பஸ்ஸு வரல”
“அதான்” நாங்களும் அந்த பஸ்ஸுக்குத்தான் காத்திட்டு இருக்கோம். வந்தபாடில்லையே மழ பெய்யலன்னா தார்ரோடு பூராம் காருவண்டின்னு இருக்கும் மழ பேஞ்சா மெட்ராஸ் புல்லா தண்ணியா இருக்கும் . நல்ல ஊருய்யா இது மழபேயுறதுக்கு ரோட்டுல பஸ் வாரதுக்கும் என்னங்க சம்மந்தமடிருக்கு. நாமதான் மழ தண்ணியில நனஞ்சிட்டு இருக்கோம். இவனுக சொகுசா நனையாமதான இருக்கானுக . பேசாம வர வேண்டியது தான. ஒரு வண்டியாவது வருதான்னு பாருங்க . இவனுகள நம்பி இன்னைக்கு ஆபிஸ் போன மாதிரி தான் இதுல மக்கள் சேவைன்னு போர்டு வேற போட்டுர்றானுக என்று ஜீவதுரையோடு பொன்னையா என்ற பெரியவரும் பேசிக் கொண்டிருந்தார்.
“தம்பி …. நான் இப்பதான் வட பழனியிலிருறந்து வர்றேன்.
“அங்க மழ இல்லையே என்றார் ஒருவர்
என்ன சொல்றீங்க இங்கனக் குள்ள இருக்கிற வடபழனியில மழ இல்லயா?
“ஆமாங்க பொய்யா சொல்றேன். அங்க பப்பரப்பான்னு வெயிலடிச்சிட்டு இருக்கு. பவர் அவுஸ் தாண்டுனதுமே மழ பேயுது . எனக்சகு ஆச்சர்யமா இருக்குங்க என்று கண்களை அகலத்திறந்து பேசினார். அவர் இதை ஜீவதுரையும் பொன்னையாவும் கூர்ந்து கவனித்தார்கள்.
என்னங்க அப்படிப் பாக்குறீங்க?
அவரு சொல்றது நெசம் தான்
வடபழனியில மழ இல்லதான்.  நானும் அங்க இருந்து தானே வாரேன் என்ற உண்மையை இன்னொருவரும் சொன்னார்.
இது ஏங்க நான் கே. கே. நகர்ல இருந்து வாரேன் .அங்கேயும் மழ இல்லையே என்றார்  மழைக்கு ஒதுங்கி நின்ற இன்னொருவர்‘‘ என்னங்கடா இது . அப்ப கோடம்பாக்கத்தில் மட்டும் தான் மழ கொட்டுதா? ’’ ஜீவதுரை ஆச்சரியமாகக் கேட்டான்.
தம்பி இவங்க சொன்னது மாதிரி தேனாம்பேட்டையில மழ இல்லையே. நானும் இப்ப தான் அங்க இருந்து வாரேன். அங்கயும் ஒரு பொட்டு மழ இல்ல. கோடம்பாக்கத்தில் ஏறங்கவும் இங்கன தான் மழ . ஆபிஸ் போக விடாம கெடுக்குது
முன்னையெல்லாம் மழ ஆறுமாசம் வெயில் ;ஆறுமாசம்னு நாட்டுல எங்க போனாலும் ஒரே மாதிரி மழை
பெய்யும் ; இப்ப இயற்கை எல்லாம் மாறிப் போச்சு .எப்ப எங்க மழ வருது, வெள்ளம் வருதுன்னு தெரியல. புலம்பினாள் ஒரு பெண்.
மாட்டோட ஒரு கொம்புல மட்டுமே மழை பெய்யும்ன்ஙற காலம் சீக்கிரம் வரும்னு எங்கயோ படிச்சிருக்கேன் .
அப்படி ஆகிருமோ என்னமோ? எனப் புலம்பினாள் இன்னுமொரு பெண்.
இப்பவெல்லாம் நாட்டுல என்ன ஏது நடக்குதுன்னு தெரியலீங்க. எல்லாத்தையும் கூறு போட்டு வித்துப்
புட்டானுக .நீங்க இன்னைக்கு எழுதி வச்சுக்கங்க. நான் சொல்றது நடந்தே தீரும் என்று பூடகம் போட்டார் ஒருவர்
என்ன சொல்றீங்க? என்று முன்னால் வந்தான் ஜீவதுரை
ஆமாங்க நெசம் தான். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுபாருங்க .மழ பேயிறத லீசுக்கு எடுப்பாங்க; இந்த ஏரியாவுவில இந்த எடத்தில தான் மழ பெய்யனும்னு சொல்லுவாங்க .அது பெய்யும் ;அப்படியே மழ எங்கள கேட்டுட்டு தான் வரும்னு கண்டிசன் போடுவாங்க; அதுவும் நடக்கும்; மழ பெய்ய வைக்கிற உரிமைய ஒரு குறிப்பிட்ட ஆளுக்கிட்ட குடுப்பாங்க. அவங்க கன்ட்ரோல்ல தான் மழ பெய்யும் ;மழ நிக்கும். ஏரியா ஏரியாவுக்கு குடிநீர் விடுற மாதிரி ஒவ்வொரு ஏரியாவுலயும் மழ பேய வைக்கிறதுக்கு அந்த ஏரியா மக்கள் பணம் வசூல் பண்ணிக் குடுக்கனும். இல்ல அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைய மழ பெய்ய வைக்கிற ஆளுகளுக்கு கட்டணமா செலுத்தனும் . ஒடனே நீங்க சொல்ற ஏரியாவுக்கு நீங்க  எவ்வளவு நேரத்துக்கு பணம் கட்டுறீங்களோ அவ்வளவு நேரத்துக்கு மழ பேய வைப்பாங்க. இது மழைக்கு மட்டுமில்ல நானைக்கு இதே நெலம காத்துக்கும் வரும் காத்தையும் அடச்சு வச்சு விப்பாங்க . நான் சொல்றது வேடிக்கையா இருக்கும்.  ஆனா எதிர்காலத்தில் இது கண்டிப்பா நடக்கும் பாருங்க என்றார் அந்த பழத்த கிழவன்
ஜீவதுரை முதற்கொண்டு அவர் பேசுவதை எல்லோரும் ஆவலாய்க் கேட்டார்கள் . இவருசொல்றது ஒரு வேள நடந்தாலும் நடக்கலாம் எனப் பேசியது கூட்டம் . மழைலேசாக ஓயந்திருந்தது .அது சமயம் பார்த்து 12B யும் வந்து சேர்ந்தது. முண்டியத்துக் கொண்டு ஆட்கள் ஏறினார்கள்.
கோடம்பாக்கம் பாலத்தில் ஏறிய பேருந்து மெல்ல மெல்ல நகர்ந்து பாண்டி பஜாரைத் தாண்டி தேனாம் பேட்டையைத் தொட்ட போது பொட்டு மழையில்லாமல் இருந்தது. ஜீவதுரை ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனான்.
கோடம்பாக்கத்தில் மழ கொட்டித் தீர்க்குது தேனாம்பேட்டையில இல்லையே. ஒரு வேள அந்த பழுத்த கெழவன் சொன்னது உண்மையாகுமோ? சிந்தித்தான் ஜீவதுரை
தேனாம்பேட்டையைக் கடந்த பேருந்து பட்டினப் பாக்கத்தை எட்டியபோது மழை கொட்டோ கொட்டென கொட்டி ஆரம்பித்தது.
ஜீவதுரைகக்கு உணர்வு சில்லிட்டது.

ராஜா செல்லமுத்து