தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா விழா

சென்னை, அக். 17–
சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் (தேசப்பிதா மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது) விழாவில் இன்று காலை (செவ்வாய்) துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
‘இளைய தலை முறையினர் தாய்மொழிக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். என்ன தான் பிறமொழியைக் கற்றாலும், எக்காரணத்தைக் கொண்டும் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது’ என்று அறிவுறுத்தினார்.
1932ம் ஆண்டில் தி.நகரில் தேசப்பிதா மகாத்மா காந்தி நிறுவிய நிறுவனம் – அரிசன சேவா சங்கம். இதே போல காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது – தக்கர் பாபா வித்யாலயா சமிதி. காந்திக்கு வலது கரமாக இருந்து சேவா சங்கம் மற்றும் சமிதியின் வளர்ச்சிக்கு பல்வேறு விதங்களிலும் தன்னை ஈடுபடுத்தி அளப்பரிய சேவையாற்றியவர் திதி நிர்மலா தேஷ்பாண்டேயின் பிறந்தநாள் விழா, புதுப்பிக்கப்பட்ட தக்கர் பாபா – சிலை திறப்பு விழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதோடு நிர்மலாதேஷ் பாண்டே நிலையம் மகளிர் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா, சமிதி – சேவா சங்கம் இரண்டின் நலப்பணிகளுக்கு பொருளுதவி, பண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்திருக்கும் பல்வேறு அமைப்புகளுக்கு மனிதநேய விருது வழங்கும் விழாவும் நடந்தது.
ஸ்ரீகீதா பவன் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், ரோட்டரி கிளப் மெட்ராஸ் ஈஸ்ட் நிர்வாகி பி.எஸ்.புருஷோத்தமன், நியூஸ்மென் அசோசியேட்ஸ் (மக்கள் குரல்) ஆர்.முத்துக்குமார், காக்னிசென்ட்  துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பாலசரஸ்வதி, ஸ்ரீ வித்யாசாகர் எஜுகேஷனல் டிரஸ்ட் ராமச்சந்திரன், வி.கே.ஸ்தாதுநாதன், டாக்டர் எம்.சேஷன், மெடி ஹாக்ஸ் இன்டர்நேரஷனல் பிரைவேட் லிமிடெட் மஞ்சுநாத் கே.அடிகா, சுகேஷ் மேனன், டெமின் பவுண்டேஷன் எம்.சிவகுமார், பெல் ஏ.கே.முக்கோ பாத்யாய், ராமகிருஷ்ண சேவாஷ்ரம் (எலெக்ட்ரீசியன் ஒர்க்ஷாப் மெஷினரி) சுவாமி ஜபானந்தா ஜி, இன்போசிஸ் பவுண்டேஷன் சுதா, பேங்க் ஆப் டோக்கியா கம்ப்யூட்டர்ஸ் ஏவி லேப் டாட்சு மட்சுதா, லார்சன் அண்டு ட்யூப்ரோ இன்போடெக் லிமிடெட் காந்தி பிளாக் சுக்கீர் ஷெனாய், சேவாலயா வி.முரளிதரன், எம்.எஸ்.சங்கீதா, எஸ்.ரோஹிணி, டபுள்யூ.சி.சரோஜா, புரோபஸ் கிளப் ஆர்.டி.நமசிவாயம், அசோக் சீதா லால்வானி, அலுமினி ஆப் 77 பேட்ச் கவர்மெண்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆர்.ஜெ.வீரராகவன், பாபுராஜ், வரதன், ஐசிசிஎல் விஷ்ணு வர்தன், ஆர்கிடெக்சர் எஸ்.எல். சிட்டாலி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் (ஓய்வு) எம்.ராஜாராம், ஜி.சந்தானம், டி.ராஜேந்திரன், எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு மனிதநேய விருதுகளை வெங்கய்யா நாயுடு வழங்கி வாழ்த்தினார்.
தக்கர் பாபா வித்யாலயம் வந்த வெங்கய்யா நாயுடுவை மாருதி (தலைவர், அரிசன சேவா சங்கம்), பேராசிரியர் சங்கர்குமார் சன்யால் (டெல்லி அரிசன சேவா சங்), டாக்டர் எஸ்.பாண்டியன் தலைவர் (தக்கர் பாபா வித்யாலயா) ஆகியோர் வரவேற்றார்கள்.
ஆரம்பத்தில் டாக்டர் எஸ். பாண்டியன் வரவேற்புரையாற்றினார். வித்யா லயாவின் செயல்பாடுகளை விளக்க மாக எடுத்துரைத்தார்.
கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்டு – பெயர்ந்து விழுந்த தக்கர் பாபா சிலையின் பெயர்ப் பலகை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்ந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆரம்பத்தில் தொழிற் பயிற்சி பள்ளியாகத் துவங்கிய கட்டிடத்தில் இன்று தொடக்கப் பள்ளி, மாணவியர் விடுதி, காந்தி நினைவக நூலகம் ஆகியவை இடம்பெற்று வித்யாலயா சிறப்பாக செயல்படுவதற்கு தனது இதயப்பூர்வமான பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் வெங்கய்யா நாயுடு.
தொண்டு நிறுவனங்கள்
சமிதிக்கும், அதன் வளர்ச்சிக்கும் பொருளுதவி – நிதி உதவி – உடலுழைப்பு அளித்து உயர்த்தி வரும் ஒவ்வொருவரின் பெயரையும், நிறு வனத்தின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெங்கய்யா நாயுடு, தனி ஒரு மனிதன் உழைப்புக்கு ஊர்கூடி ஒத்துழைக்கும் மனித நேயம் மகத்தானது, பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். சமூக – பொருளாதார முன்னேற்றத்துக்கு இது மாதிரி தொண்டு நிறுவனங்கள் – ஆர்வளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார்.
காந்தி – தேசப்பற்று
இளையதலைமுறை உணர…
சென்னையில் நடைபெறும் சிறிய அளவிலான ஒரு விழா என்று சொல்லித் தான் என்னை அழைத்தார்கள். சிறிய விழா என்று சொல்லமாட்டேன். இந்த விழா உன்னதமான விழா. இந்திய திருநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்தி உடல் – பொருள் – ஆவி என்று சர்வபரி தியாகங்களை செய்திருக்கும் உயர்ந்த உள்ளங்கள் சம்பந்தப்பட்ட விழா என்பது தான் உண்மை. இந்திய சுதந்திரத்தின் அருமை – பெருமை – தியாகிகளின் அளப்பரிய தியாகம் – நாட்டுப் பற்றை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லி இளைய தலைமுறை மத்தியில் பதிய வைக்க ஒரு விழா என்பதாலும், மகாத்மா காந்தியோடு இணைந்த ஒரு நிறுவனம் என்பதால் மட்டற்ற மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் பங்கேற்கிறேன் என்றார் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு.
‘தாய்மொழியில் பேசுவது தான் அழகு. அம்மா, அம்மா என்று அழைக்கச் சொல்லிக் கொடுங்கள். மம்மி, டாடீ, லேடி, பீடீ வேண்டவே வேண்டாம்’ என்று அறிவுறுத்தியவர், ‘அம்மா…’ என்று அடிவயிற்றிலிருந்து அழைக்கும்போது வரும் ஆனந்தமே தனி என்று சொல்லி, அம்மா…. என்று அழைத்துக் காட்டினார்.
ரூ.5 லட்சம் உதவி
இந்த தக்கர் பாபா வித்யாலயா சமீக நலப்பணி – கல்விப் பணிகளுக்காக தனிப்பட்ட முறையில் என் சம்பளத்திலிருந்து ரூ.5 லட்சம் நிதி அளிக்கிறேன் என்றும் அவர் அறிவித்தார். முடிவில் மாருதி நன்றி தெரிவித்தார்.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயகுமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.