வீடு வீடாகச் சென்று அமைச்சர் டெங்கு ஒழிப்பு பணி

மதுரை, அக். 12–
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு பணி புயல்வேகத்தில் நடைபெற்று வருகிறது என்று டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.
மதுரை சோலைஅழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் இன்று டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர். ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ நிலவேம்பு கசாயத்தினை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். சோலையழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் கொசு புகை பரப்பும் இயந்திரங்கள் மூலமும், கை தெளிப்பான் மூலமும் கொசு புகை மருந்து பரப்பப்பட்டது. டெங்கு குறித்த சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சரால் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அமைச்சர்கள் அங்குள்ள அலுவலர்களையும் மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறினார். அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு சுகாதாரமான, வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசு சுகாதார துறையின் மூலம் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு பணி புயல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகளும், வசதிகளும் உள்ளன.
மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலத்திலும் சேர்த்து 49 மருத்துவர்கள், 89 செவிலியர்கள், 36 சுகாதார பணியாளர்கள், 525 டெங்கு தடுப்பு பணியாளர்கள், 2010 ஒப்பந்த மஸ்தூர் பணியாளர்கள், 1507 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 3517 பணியாளர்கள் மதுரை மாநகராட்சியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதுடன் இந்த டெங்கு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோக பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள், துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு என்பது சாதாரண கட்டுப்படுத்த கூடிய நோய்தான் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. நம்முடைய கவனகுறைவால்தான் இந்த டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காய்ச்சல் வந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ உடனடியாக செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசு இதற்கு தேவையான அனைத்து மருந்துகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நிலவேம்பு குடிநீரும் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டெங்கு கொசு நன்னீரில் மட்டுமே உருவாகக் கூடியது எனவே பொதுமக்கள் தமது வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் டெங்குவை தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் கொசு மருந்து தெளிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும். வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதுடன், வீட்டில் பிடித்து வைத்துள்ள குடிநீரினை மூடி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசு டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இந்த சிறப்பு முகாமில் நகர்நல அலுவலர் சதிஷ் ராகவன், உதவி கமிஷனர் கௌசலாம்பிகை, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், முகமது ரசூல், செயற்பொறியாளர் சேகர், பூச்சியியல் வல்லுனர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார், வீரன் மதுரை நகர் மாவட்ட அவை தலைவர் துரைபாண்டியன், துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் ராஜா, ஒலிம்பிக் சங்கத் தலைவர் சோலை ராஜா, பகுதிச் செயலாளர் அண்ணா நகர் முருகன், மாரிச்சாமி, முத்துருளாண்டி, கருப்புசாமி, பூமிபாலகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.