ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் `கேப்சர்’ கார் அறிமுகம்

சென்னை, அக். 12–
ரெனால்ட் இந்தியா நிறுவனம் `கேப்சர்’ எஸ்யுவி காரை சென்னையில் அறிமுகம் செய்தது. ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமித் சஹானி, விற்பனை மற்றும் சந்தையிடல் துணைத் தலைவர் ரபேல் ட்ரிகெர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சஹானி பேசியதாவது:–
‘இந்திய பிரீமியம் எஸ்யுவி பிரிவில் இதர மாடல்களை விடவும் கேப்சர் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டது. ஆச்சர்யமளிக்கும் வடிவமைப்பு, அதிக வசதிகள் மற்றும் புத்தாக்கமான தீம்கள் அடிப்படையில் இந்த காருக்கான சந்தையை உருவாக்க உள்ளோம். 4 மீட்டருக்கும் அதிகமாக எஸ்யுவி பிரிவில் கேப்சர் கார் அதிக அகலத்தையும், நீளத்தையும் கொண்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் புதுமையான வகையில் வெளிப்புற முகப்பு விளக்குகள் மற்றும் பக்கவாட்டு இண்டிகேட்டர்கள் உள்ளன.
இந்தியாவில் எஸ்யுவி கார்களுக்கான சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது கட்டமைப்புகளை அதிகரிக்க உள்ளோம். தற்போதைய எங்களது உற்பத்தி திறனில் 60 சதவீதத்தை எட்டியுள்ளோம். சந்தையின் தேவையை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கவும் தயாராக உள்ளோம்.
பெட்ரோல், டீசல் இரண்டு மாடலில் வெளிவந்துள்ளது. இந்த மாத இறுதியில் காருக்கான விலையை அறிவிக்க உள்ளோம்.’
இவ்வாறு சஹானி கூறினார்.