ரூ.86 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள்:

சென்னை, அக்.12–
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 11–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், திருச்சி மாவட்டம், நவல்பட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில் 61கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்புமையம், கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் – கங்கைகொண்டான் மற்றும் மதுரை மாவட்டம் – இலந்தைகுளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 24கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடம், கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம், உணவருந்தும் கூடம் மற்றும் குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023-ல் குறிப்பிட்டபடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் தழைத்து வளர தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) நிறுவியுள்ளது.
தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் பரிமாற்ற தரவுகளை பாதுகாத்திடவும், தங்குதடையற்ற தொடர் சேவை வழங்கிடவும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் அமைந்துள்ள எல்கோசெஸ்சின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் 59 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்பு மையம், 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
தகவல் தொழில்நுட்ப கட்டிடம்
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், விஸ்வநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்கோசெஸ்சில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடம்;
திருநெல்வேலி மாவட்டம் – கங்கைகொண்டானில் அமைந்துள்ள எல்கோசெஸ்சில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சேகரிப்புதொட்டி, மேல்நிலை தொட்டி மற்றும் குழாய் அமைப்பு வசதிகள் உள்ளிட்ட குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகள்;
மதுரைமாவட்டம் – இலந்தைகுளம் எல்கோசெஸ்சின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம்;
என மொத்தம் 85கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்,  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம். மணி கண்டன்,  பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.  வளர்மதி, தலைமை ச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல்  துறை முதன்மைச்செயலாளர்   தா.கி. இராமச்சந்திரன், மின்னா ளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு  மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல்அலுவலர் ஆனந்தராவ் விஷ்ணுபாட்டீல்,  தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்  ஆர்.சுடலைகண்ணன், மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.