ரூ.7 கோடியில் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம்:

சென்னை, அக்.12–
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (12–ந் தேதி) காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த ஆண் சிங்கக்குட்டிக்கு ‘‘விஷ்ணு” என்று பெயர் சூட்டினார்.
மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் தெற்கு பகுதியில் கேளம்பாக்கம் சாலையில் 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தை (ஆராய்ச்சி , பயிற்சி மற்றும் கல்வி) திறந்து வைத்தார்.
இந்த உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில், வன உயிரின நலப் பாதுகாப்பு அறிவியல் மையம், வன உயிரின தடய அறிவியல் மையம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு கல்வி மையம் ஆகிய மூன்று ஆராய்ச்சி மையங்கள் செயல்படும்.
அடைப்பிட விலங்குகள் மற்றும் வன விலங்குகளின் நலன்களை உறுதிசெய்யும் வகையில், அழிந்து வரும் விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை மீட்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல், அழிந்து வரும் விலங்குகளை மீட்க தனியாக சிறப்பு இனப்பெருக்க மையங்கள் அமைத்து அவற்றை இனப்பெருக்கம் செய்தல், உரிய பயிற்சிகள் மூலம் எதிர்காலத்திற்கு உண்டான வன உயிரினப் பாதுகாவலர்கள், வன உயிரின நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்களை உருவாக்குதல், மனித-வன உயிரின மோதல்களுக்கு உரிய தீர்வை பரிந்துரைத்தல், பூங்கா மற்றும் அடைப்பிட விலங்கு மேலாண்மை குறித்து உயர்தர பயிற்சி அளித்தல் மற்றும் பூங்கா விலங்குகளுக்கு உயர்தர மருத்துவ வசதியை வழங்குதல் போன்றவை இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 19-வது ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழுக் கூட்டத்தில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சேலம் குரும்பபட்டி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த ரூபாய் 9.12 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களின் வசதிக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ. 3 கோடி செலவில் 40 பேர் இருக்கை கொண்ட 4 சிறிய தொடர் வண்டி   வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், பாராளுமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், கே.என். ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுத்தின்,   கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால், சுற்றுலாத் துறை ஆணையர் வெ. பழனிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, முதனமை தலைமை வனப்பாதுகாவலர் பசவராஜு, முதனமை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் பி.ச.தியாகி, கூடுதல முதனமை தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவ், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல முதனமை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர் சி.யுவராஜ், மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.