ரூ.171½ கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள்:

சென்னை, அக். 12–
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 29 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 171 கோடியே 55 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 29 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வகுப்பறைக் கட்டடங்கள், ஒரு ஆய்வகக் கட்டடம், ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 39 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 54 கோடியே 75 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;
அனைவருக்கும் கல்வி
இயக்கம் கீழ்…
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 68 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 115 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள்;
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம், ஏ.குமாரமங்கலத்தில் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம்;
பொது நூலக இயக்ககத்தின் கீழ் மதுரை மாவட்டம், மேலூரில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம்;
என மொத்தம் 173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் க. நந்தகுமார், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர். இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.