மேட்டுப்பாளையம் விஜயலட்சுமி பள்ளியில் விளையாட்டு விழா:

விஜயலட்சுமி மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழாவில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, சேரர் அணி பெற்றது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகையில் உள்ள விஜயலட்சுமி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், விளையாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காவல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி தலைமை ஏற்று, விழாவினை துவக்கி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டார்.

தமிழக அரசின், கல்வித்துறை தேர்வுகள் பிரிவின் துணை இயக்குனர் திருநாவுக்கரசு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பிரபல தொழில் அதிபரும், கோவை செந்தில் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், பள்ளியின் நிறுவனருமான கல்வித்தந்தை ஆறுமுகசாமி, பள்ளியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் கவிதா தீனதயாளன், கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குநர் ஜோகி, பள்ளியின் முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

முன்னதாக, பள்ளியின் பாடல்குழு மாணவிகளான தர்ஷினி, ஸ்ரீ வர்ஷினி, சிவகோமதி, ஆனி ஆகியோர் அனைத்து சமயப்பொது வழிபாட்டுப்பாடல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை இசைப் பின்னணியுடன் பாடினர்.

சேரர் அணி வெற்றி

பின்னர், பள்ளி மாணவத் தலைவர் பாஷித் வரவேற்றார். பள்ளியின் உடற்பயிற்சி துறை சார்பில், உடற்பயிற்சி இயக்குனர் பிரபு, பள்ளியின் விளையாட்டு சாதனைகளை, ஆண்டறிக்கையாக வாசித்தார்.

விழாவில், மாணவ, மாணவியர்களின், நடனம், யோகா சாகசங்கள், டேக்வோண்டோ தற்காப்புக்கலை சாகசங்கள், பிரமிட் எனப்படும் ஒருங்கிணைந்த வடிவம் காட்டல் உள்ளிட்ட, பல்வகை அம்சங்களுடன் நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. பள்ளியின் ஒட்டு மொத்த சாம்பியனாக, சேரர் அணியினர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, பள்ளியின் வெற்றி வீராங்கனை கீர்த்தனா ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார்.

மாணவி வைஷாலி வேணு நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை, சஜினி மற்றும் இலக்கியா ஆகிய மாணவிகள் தொகுத்து வழங்கினர். விழாவில், ஆசிரியப் பெருமக்களும், மாணவ, மாணவியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு, மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.