நிமோனியா: குழந்தைகளை பாதுகாக்கும் ஷாம்பு பாட்டில்!

1996 ஆம் ஆண்டு  டாக்டர் முகம்மது ஜோபெயர் சிஸ்டி, வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவில் பணிபுரிந்தபோது, மூன்று குழந்தைகள் இறந்துள்ளது. இதனையடுத்து நிமோனியாவால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க, இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான  குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் மலிவு விலை சாதனத்தை கண்டறிந்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் நிமோனியா பாதித்த குழந்தைகளின் சுவாசத்திற்கு செயற்கை சுவாச கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி  ஒன்றின் விலை 15,000 டாலர்கள் என்பதோடு, அது சிறப்பு பயிற்சி பெற்ற  ஊழியர்களால் இயக்கப்பட வேண்டும். இவற்றால் வங்கதேசம் போன்ற வளரும்  நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் செலவு மிகவும் அதிகரிக்கும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வேலை செய்யும்போது, டாக்டர் சிஸ்டி, குமிழி CPAP சாதனத்தைப் பார்த்துள்ளார். ஆனால், இதன் விலை அதிகம். டாக்டர் சிஸ்டி, சர்வதேச டயாரியா நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்ற  வங்கதேசம் திரும்பியபோது, எளிமையான, விலை மலிவான குமிழி CPAP சாதனம்  பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.
அவரும், சக மருத்துவரும் இணைந்து  ஐசியூவில் இருந்து தூக்கி எறியப்பட்ட காலி பிளாஸ்டிக் ஷாம்பூ பாட்டிலில்  நீர் நிரப்பி அதன் ஒருபுறத்தில் பிளாஸ்டிக் சப்ளை டியூப்களை  பொருத்தி ஆய்வு செய்தனர். இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தனது ஆய்வு முடிவுகளை டாக்டர் சிஸ்டி வெளியிட்டார்.
குறைந்த  ஓட்ட ஆக்ஸிஜனில் சிகிச்சை பெற்றவர்களிடம் ஒப்பிடும்போது, குமிழி CPAP  சாதனம் மூலம் சிகிச்சை பெற்றவர்களின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதை இந்த  ஆய்வு காட்டுகிறது. வெறும் 1.25 டாலர் மதிப்புடைய இந்த சாதனம், இறப்பு விகிதத்தை 75% வரை குறைத்துள்ளது.
ஆக்ஸிஜனை  மிகவும் குறைந்தளவில் பயன்படுத்தும் இந்த சாதனத்தால், மருத்துவமனையின்  ஓராண்டு ஆக்ஸிஜன் கட்டணம் 30,000 டாலரில் இருந்து 6,000 டாலராகக்  குறைகிறது. இந்த மலிவு விலை உயிர் பாதுகாப்பு சாதனத்தினால் இதுவரை குறைந்தது 600 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.