தமிழகம் வருகிறது மத்திய மருத்துவ குழு

புதுடெல்லி,அக்.12–
தமிழக டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமரை நேரில் சந்தித்த பின்னர்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது. அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. முதல்வர் பழனிசாமி தமிழக வளர்ச்சிகள் குறித்த கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார். அதை பிரதமரிடம் கொடுத்துள்ளேன். தமிழக மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிலக்கரி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. டெங்கு பிரச்சினை குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன். பரிசோதனைகள், செவிலியர்கள் நியமனம், மருத்துவ குழுக்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினேன். தமிழக மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
என்னை தவிர பிற யாரையும் சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார் என்பது மீடியாக்களின் கருத்து. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், நானும் மத்திய மின் துறை அமைச்சரை மதியம் சந்திக்க உள்ளோம். பிரதமருடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. தர்ம யுத்தம் முடிந்ததால் தான், இரு அணிகளும் ஒன்றாக இணைந்துள்ளன. முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது உங்கள் பார்வையில் உள்ள குறைபாடுதான். இரண்டு பேரின் நோக்கமே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நோக்கங்களை நிறைவேற்றுவதுதான்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கும், டெங்கு ஒழிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய, மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனக்கும், சேகர்ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல், கீழ்மட்டத்தில் இருந்து உழைத்தால் தான் கட்சியில் சேர்க்கப்படுவார்கள். தினகரனுக்கு இனி அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை. முதல்வர் பழனிசாமி அனைவருடனும் கலந்து ஆலோசித்து தான் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.