தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை

சென்னை,அக்.12–
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அநேக  இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள்  தெரிவித்தனர்.             தமிழகத்தில்  வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது  வழக்கம். தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை.  தென்மேற்கு பருவமழை தான் பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:–-
தமிழகத்தில்  வட கிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்கியது.  வெப்பச்சலனம் காரணமாக அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 17 செ.மீ. மழை  பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இன்றும், நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–-
ஏற்காடு 8 செ.மீ., ஆம்பூர் 6 செ.மீ., தாமரைபாக்கம், பரமக்குடி, மருங்காபுரி, திண்டுக்கல், பேரையூர் 5 செ.மீ., திருப்பத்தூர், லால்குடி, பாரூர், கோத்தகிரி, தாதையங்கார்பேட்டை, அவினாசி, வாழப்பாடி, பொன்னேரி, பூதபாண்டி, தேன்கனிக்கோட்டை, புள்ளம்பாடி 4 செ.மீ, வால்பாறை, கடலாடி, செங்கம், நிலக்கோட்டை, பேச்சிப்பாறை, சின்னகல்லாறு, பெரியகுளம், உசிலம்பட்டி, தாராபுரம், ஆத்தூர், கமுதி, கடவூர் 3 செ.மீ.,மழை பெய்துள்ளது.