டெபிட் கார்டு

அந்த ஓட்டலில் வியாபாரம் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
“தோச ஒண்ணு”
“எனக்கு இட்லி”
“எனக்கு பூரி”
கொஞ்சம் சாம்பார் குடுங்க வாடிக்கையாளர்களின் குரல் பறந்து கொண்டிருந்தது.
சாம்பார் வாளியும் கையுமாய் ஓடிக்கொண்டிருந்தனர் பணியாட்கள் பவானியும் இதில் சேர்ந்திருந்தாள்.
ஏங்க கொஞ்சம் சட்னி, இந்தா தாரேன் பவானி ஓடிப் போய் சட்னி ஊற்றினாள் பவானி குமாரி வசந்தா மீனா இப்படி எத்தனையோ பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கம்பளத்தை முதலாளி கல்லாவிலும் பாதி டிப்ஸிலும் வைத்திருந்தார்.
இந்தப் பொம்பளைங்க, என்ன வெட்டி முறிக்கிறாங்களா? மூவாயிரத்துக்கு மேல முக்காத் துட்டு கெடையாது அதான் சாப்பிடுற ஆளுக கிட்ட டிப்ஸ் வாங்குறாங்களே, அதுக்கு மேல இனி என்ன சம்பளம் வேண்டிக் கெடக்கு .போதும் போதும். அவ்வளவு தான் குடுக்க முடியும் . முடிஞ்சா இங்க வேல செய்யட்டடும். இல்ல வேற எங்கியாவது போகட்டுமென அதிகாரம் கலந்ததொனியில் பேசுவான் ஓட்டல் முதலாளி. அதனால் சிப்பந்திப் பெண்கள் தங்கள் முதலாளியின் கல்லாவை விட வாடிக்கையாளர்களின் சட்டைப் பையையே அதிகம் நம்பியிருந்தார்கள்.
“ஏம்மா பவானி அந்த கஸ்டமருக்கு கொஞ்சம் சாம்பார் குடு”
“இந்தா” ஓடினாள்.
பவானி ஒன்னோட டேபிளுக்கு ஒரு நல்ல பார்டி மாட்டியிருக்கு போல”
“ஆமா எல்லாத்தையும் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுறாங்க. இன்னைக்கு இவங்க ஒரே ஆளு பத்துப்பேரு குடுக்கிற டிப்ஸ ஒரே ஆள் குடுக்கப் போறாங்க? முகம் மலர்ந்தாள் குமாரி.
பவானிக்கு இருப்புக் கொள்ளவில்லை
அந்த டேபிள் காரர்களுக்கு ஓடோடி வேலை செய்து கொண்டிருந்தாள். அவர்கள் கேட்காமலேயே சாம்பார் சட்னியை அள்ளி ஊற்றினாள். அந்தப் பணக்காரக் குடும்பம் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் தரப் போகும் டிப்ஸை நினைத்து கொஞ்சம் கூட முகம் சளிக்காமல் வேலை செய்து கொண்டிருந்தாள் பவானி.
அவள் வேலை செய்வதையும் அவள் டேபளில் உட்கார்ந்திருக்கும் ஆட்களைப் பார்த்தும் உடன் வேலை செய்யும் பெண்கள் ரொம்பவே பொறாமைப் பட்டார்கள்.
பவானி…. ம்.
ஏய் சும்மா இருங்கடி” ரொம்ப நாளைக்கு அப்பெறம் இப்பத்தான் ஒரு நல்ல வாடிக்கையாளர் வந்திருக்காங்க.
ஆமா
கேக்காமலே எல்லாத்தையும் குடுடி
ம்… பவானிக்குச் சந்தோசம் . தலை முட்டி நின்றது . அவர்கள் கேட்காமலே சட்னி, சாம்பார், குழும்பு என அத்தனையும் கொண்டு வந்து அவர்கள் முன்னால் வைத்தாள் . தானாகவே லேசாக சிரித்துக் கொண்டாள்.
அவர்கள் பவானிவைக் கண்டு கொள்ளாமலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல அவர்கள் கொடுக்கப் போகும் டிப்ஸை மனதில் வைத்துக் கொண்டு தன் குடும்பச் செலவுகளை மனதில் கணக்குப் போட்டாள்.
ஒரு ஜநூறு ரூபா கடன் குதிட்டான்னு பக்கத்து வீட்டுக்காரி என்ன பேச்சுப் பேசுனா? இன்னைக்கு அவ
மூஞ்சிமேல காசத்தூக்கி வீசனும் … கடன் வாங்கிட்டா கேவலமா பாக்குறதா? மொதல்ல அவகடனத் தான் மொதல்ல குடுக்கணும் . மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தாள்.
பில் குரல் கொடுத்தாள் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்.
பில் கவுண்டரில் ஓடிப்போய் பில் வாங்கிகொண்டு ஓடி வந்தாள். முகத்தை ரொம்பவே சிரிப்பாய் வைத்துக் கொண்டு அவர்களிடம் நின்றிருந்தாள்.
அப்படி இப்படித் திரும்பித் திரும்பிப் பார்த்தவர்கள் பை, பர்ஸ் என பார்த்தவர்கள் உடனே கார்டை எடுத்து பில் தட்டில் வைத்தனர். இதைப்பார்த்த பவானிக்கு என்னவோ போலானது
நம்பர் ஈனக்குரலில் கேட்டாள்.
இல்ல நாங்களே வாரோம். சாப்பிட்ட கூட்டம் ஏப்பம் விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். பவானிக்கு நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்க ஆரம்பித்தது.
ச்சே எவன் அவன் இந்த கார்டு கீர்டெல்லாம் கண்டு பிடிச்சது. வாய்விட்டுக் கேட்கவும் அவளால் முடியவில்லை .பில் கவுண்டரில் கார்டைச் சுரண்டிய கூட்டம் மெல்ல வெளியேறியது. பவானிக்கு என்னவோ போலானது
‘‘பவானி அந்தக் கஸ்டமரு சாப்பாடு கேக்குறாரு பாரு ’’குரல் கொடுத்தார் மேனேஜர்.
சுரமே இல்லாமல் சாம்பார் வாளியோடு நடக்க ஆரம்பித்தாள் பவானி.

ராஜா செல்லமுத்து