டெங்கு கொசு உற்பத்தியாகும் வீடுகளுக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிப்பு

சென்னை , அக். 12–
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து இன்று இராயபுரம் மண்டலம் புதுப்பேட்டையில் மார்க்கெட் பகுதிகளில் மேற்கொண்ட டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கொசு ஒழிப்புப் பணியில் பயன்படுத்தப்படவுள்ள 14 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 11 கையினால் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 2 வாகனம் மூலம் புகைப்பரப்பும் இயந்திரங்கள், தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியாளர்கள், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ள துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, டெங்கு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளும் டெங்கு கொசு போன்று மாறுவேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோரிடம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி தேவையற்ற பொருட்களான டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், மூடப்படாத டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த வாகன உதிரிப் பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீர் மூலம் உற்பத்தியாகும் கொசுப்புழுக்கள் குறித்தும், அதன் வாழ்க்கை சுழற்சி முறை குறித்தும் எடுத்துக் கூறி அதனைத் தடுத்திடும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆய்வுக்குப்பின் அவர் கூறியதாவது:
18 ஆயிரம் பேர்
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின்படியும், வியாழக்கிழமைதோறும் டெங்கு ஒழிப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்ற அறிவுரையின்படியும், பெருநகர சென்னை மாநகராட்சியும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளையும் 2035 சிறு வட்டங்களாக பிரித்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மலேரியா தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுசுகாதாரத்துறை ஊழியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கொசுவானது 150லிருந்து 200 முட்டைகள் இடுகின்றன. இவை 1.5 அல்லது 3 நாட்களில் முட்டைகளாகவும், 6 முதல் 8 நாட்களில் புழுக்களாகவும் (லார்வா), 1.5 அல்லது 3 நாட்களில் பியூப்பாவாகவும், 21 நாட்களில் வளர்ச்சியடைந்த கொசுவாகவும் மாறுகிறது. அதன்மூலம் அவை பல்கி பெருகி பல்லாயிரக்கணக்கான கொசுக்களாக உற்பத்தியாகிறது. இதனைக் கட்டுப்படுத்திட பொதுமக்கள் தங்களது இல்லங்களில் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்திட வேண்டும் என இரண்டு முறை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை பொருட்படுத்தாமலும், மழைநீர் தேங்கும் வகையிலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள இல்லங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொருட்களை அப்புறப்படுத்தி, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று, அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம்
முதல் முறையாக கண்டறியப்பட்ட இல்லங்களுக்கு ரூ.2000மும், இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட இல்லங்களுக்கு ரூ.5000மும், மூன்றாவதாக ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12.5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது பெருநகர சென்னை மாநகராட்சியின் நோக்கம் அல்ல. இந்த தவறை மீண்டும் தொடராமல் உணர வேண்டும் என்பதே நோக்கம். பொதுமக்களிடையே டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசுக்களை முற்றிலுமாக அகற்றுவதே இதன் நோக்கமாகும்.
இன்றைய ஆய்வின்போது, உபயோகமற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த டயரில் மழைநீரின் மூலம் லார்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டு, அதன் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் தன் தவற்றினை உணர்ந்து இதனை ஏற்றுக்கொண்டு, இனிமேல் இதுபோல் நிகழாவண்ணம் செயல்படுவேன் என்று தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது இல்லங்கள், தெருக்கள் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகளை கொட்டுவதன் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றன. அதன் வாழ்க்கை சுழற்சி முறையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அறிவுரைகளின் மற்றும் வழிமுறைகளின்படியே தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் தான் டெங்கு மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்திட முடியும்.
ஒத்துழைப்பு தாருங்கள்
பள்ளி, கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் டெங்கு மற்றும் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்ளும் கொசு மருந்து தெளித்தல், புகைப்பரப்பும் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) எம்.விஜயலட்சுமி, மத்திய வட்டார துணை ஆணையர் டாக்டர்.சுபோத் குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் மரு.குழந்தைசாமி, பெருநகர மருத்துவ அலுவலர் என்.ஏ.செந்தில் நாதன் உட்பட பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.