டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தில் ‘துல்லிய நீரிழிவு சிகிச்சை துறை’ துவக்கம்

சென்னை, அக். 12–
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தில்  ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நோய் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை செய்யும் ‘துல்லிய நீரிவு சிகிச்சை முறை’யை துவக்கியுள்ளது என்று மைய தலைவரும் தலைமை நீரிழிவு நோய் மருத்துவ வல்லுநருமான வி.மோகன் தெரிவித்துள்ளார்.
இத்துறை, சென்னை, பிரிட்டிஷ் துணை தூதரகத்தின், துணை தூதரான .பரத் ஜோஷி மற்றும் ஸ்காட்லாந்து, தண்டீ பல்கலைக்கழகத்தில் பார்மகோஜெனோமிக்ஸ் துறையின் தலைவர் பேராசிரியர் காலின் பாமர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.
பிரெசிஷன் என்பது, தனிப்பட்ட நோயாளி அளவில் அவருக்கு உகந்த மருத்துவ நடைமுறைகள், பரிசோதனை முடிவுகள் மற்றும் சிகிச்சைகளைக் கொண்டு  உடல்நல பராமரிப்புக்கு வழிவகுக்கும் ஒரு மாடல் ஆகும். பொதுவான அறிகுறிகளின் அடிப்படையில் மட்டும் நோய்கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேர்வு செய்யப்படுவதில்லை.  மரபணு அல்லது மருத்துவ ஆய்வு விவரங்களிலிருந்து பெறப்பட்ட உடல்நல வரலாறு ஆகியவற்றிலிருந்தும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேர்வு செய்யப்படுகின்றன.
நீரிழிவு நோய் என்பது, உடல் ஆரோக்கியத்தில் ஒரு சிக்கலான நிலை ஆகும். இதில் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் மற்றும் அவ்வாறே நோய் கண்டறியும் பரிசோதனையும் மாறுபடும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சீராக்கங்கள் மற்றும் மரபியல் மற்றும் இதர துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நீரிழிவு நோய்களில் குறைந்தபட்சம் 20 வகைகள் உள்ளன என்பதை நிரூபித்துள்ளன. இந்தப் ‘பிரெசிஷன் டயாபிட்டிஸ்’ கோட்பாடுகளை பயன்படுத்துவதன் மூலம், ஒரு நோயாளியை துல்லியமாக வகை பிரித்து, அவர் எந்த வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை தீர்மானித்து, அதற்கேற்ப அந்த நோயாளிக்கு சிகிச்சை வகுத்துரைப்பது சாத்தியமாகிறது.
இத்துறையின் துவக்கம் குறித்து டாக்டர். வி. மோகன் பேசுகையில்,  இந்தியர்களுக்கு நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள சூழலில், நோய்கண்டறியப்பட்ட ஒவ்வொரு நோயாளியின் நோய் விவரக்குறிப்பு மாறுபடுகின்ற நிலையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை நாம் பின்பற்ற முடியாது. மோகன்’ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தில், நாங்கள் தொடர்ந்து புதிய வழிமுறைகளை கண்டறிய முற்படுவதுடன், எங்களுடைய நோயாளிகளுக்கு சிறந்த நீரிழிவு நோய் சிகிச்சையையும் வழங்கி வருகிறோம் என்றார்.
ஒற்றை மரபணு நீரிழிவு நோய் குறித்து மரபணு ஸ்கிரீனிங் பரிசோதனை செய்வதற்கு கிளை மையமாக ஐசிஎம்ஆர்ல் நாங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பிறக்கின்ற பச்சிளங்குழந்தைகளின் நீரிழிவு நோய்க்கும் மற்றும் இளைஞர்களில் இளவயதிலேயே நீரிழிவு நோய் முதிர்ச்சியடைந்திருப்பதற்கும்  மரபணுவே காரணம் என்று நாங்கள் கண்டறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.
இந்த நிலைகளிலுள்ள பல நோயாளிகளுக்கு வகை 1 நீரிழிவு நோய் இருப்பதாக தவறாக கருதப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் இஞ்ஜக்ஷன் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், நீரிழிவின் வகை சரியாக அறியப்பட்டிருப்பதனால், இன்சுலின் மருந்திலிருந்து இவர்கள் வாய்வழி சல்போனிலூரியா மருந்துக்கு மாற்றப்பட்டு, இப்போது இவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இது வியத்தகு சாதனையாகும். நீரிழிவு நோயில் இது போன்ற பல திருப்புமுனைகளை இந்த துறையின் மூலம் சாதிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அணுகுறை துல்லியமான மற்றும் உரிய சிகிச்சையை மட்டும் வழங்குவதோடு மட்டுமில்லாமல், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு ஆகக்கூடிய செலவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.