பரீட்சை அட்டை

‘அப்பா நான் என்னைக்குப் பரீட்சை அட்டை, பேக், செருப்பு இதெல்லாம் கேட்டேன். நீ இன்னும் வாங்கித் தராமயே இருக்க’ சீக்கிரம் வாங்கித் தாப்பா’ தன் அப்பா கணபதியிடம் கெஞ்சினாள் மலர்க்கொடி.
‘இன்னைக்கு எப்பிடியாவது வாங்கித் தாரேன்மா’
‘ஆமா தெனமும் நீ இப்பிடித் தான் சொல்ற? செல்லமாயக் கோபித்தாள் மலர்க்கொடி.
‘இல்லம்மா நெசம், கண்டிப்பா இன்னைக்கு எப்பிடியாவது வாங்க முயற்சி பண்றேன்’ கணபதி தன் மகளிடம் உத்திரவாதம் தந்தாலும் அதற்குண்டான செலவை மனதற்குள்ளே நினைத்து மலைத்து நின்றான்.
‘இன்னைக்கு எதிர்பார்ப்பேன்’
‘சரி’ வேகமாயத் தலையாட்டினான் கணபதி. அன்று அவனுக்கு கொடுக்கப்பட்டது கண்ணகி தெரு. அதுவரையில் நெடுஞ்செழியன் தெரு, அகிலன் தெரு, நக்கீரன் தெரு’ என குப்பை வண்டியைத் தள்ளினாலும் தன் மகள் கேட்ட பரீட்சை அட்டை, பேக், செருப்பு என எதுவும் வந்து விழுந்தபாடில்லை. இன்று ரொம்பவே நம்பிக்கையோடு கண்ணகி தெருவுக்குள் நுழைந்தான்.
உர்உர்ரென விசிலடித்துக் கொண்டே தெரு முக்கில் உற்சாகமாய் நுழைந்தான். எல்லா வீட்டின் வாசலிலும் குப்பைக் கூடைகள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பு ஓடியோடிப் போய் அவலாய்க் குப்பைகளைத் தூக்கினான். மக்கும் குப்பை – மக்கா குப்பைகளைப் பிரிப்பது போல அதில் பழைய பரீட்சை அட்டை, பழைய பேக், செருப்பு இருக்கிறதா? என்று ஆராய்ந்த பின்னரே குப்பைகளைக் கொட்டினான்.
‘ம்ஹுக்கும்… இதுவரை தெருவின் பாதி வீடு கடந்தாயிற்று. எதுவும் அகப்படவில்லை.
இன்னைக்கும் சாத்தியமில்லையோ? கணபதிக்கு முகம் ஒரு மாதிரியாய் போய்விட்டது.
‘தெருவில் குழந்தைகள் ஸ்கூல் பேக், அட்டை, செருப்பு சகிதம் போய்க் கொண்டிருந்தார்கள்’ அதில் ஒரு பெண் தன் மகளையும் கூட்டிக் கொண்டு தெரு வழியாக சென்று கொண்டிருந்தாள்.
‘அம்மா’
‘ம்… யாரு என்னையவா கூப்பிட்ட? கணபதியை நேரிட்டுப் பார்த்தாள்.
‘ஆமாங்க’
‘என்ன? குப்பையள்ளுபவன் கூட நாம நின்னு பேசணுமா? அந்தப் பெண் தன் குழந்தையை கொஞ்சம் தள்ளி நிறுத்திவிட்டு,
‘என்னங்க என்ன பேசணும்?’ முறைப்பாய்க் கேட்டாள்.
‘இல்லங்க. நீங்க கொண்டு போற பேக்கு என்ன வெல?
‘ம் ரெண்டாயிரத்து ஐநூறு கொஞ்சம் கோபப்பட்டுச் சொல்லிச் சென்றாள்.
‘என்னது… ரெண்டாயிரத்து ஐநூறா? அவ்வளவு துட்டுக்கு எங்க போறது? இதுல பரீட்ச அட்டை, செருப்பு வேற வாங்கணும்னா மூணு, நாலாயிரம் ஆகும் போல’ மனதிற்குள் கணக்குப் போட்டபடியே குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தான்.
கணபதி… கணபதி….
‘ஏய் கணபதி… என்னைய்யா குப்பையள்ளும் போதே பகல் கனவா கண்டுட்டு இருக்க. இவ்வளவு சத்தம் போட்டும் திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிற’
‘இல்லங்க… ஏதோ ஒரு யோசன’
‘அதான் என்ன யோசனைன்னு கேட்டேன்.’
‘ஒண்ணுமில்லீங்க’ உதடு வரைக்கும் வந்த வார்த்தையை உள்நாக்கில் விழுங்கிவிட்டு, எதுவும் தெரியாதது போல் விழித்தான்.
‘அங்க பாரு நீ குப்பையள்ளுன லட்சனத்தை. ஒரு பக்கம் கூட்டியும் கூட்டாம நல்லாப் பாருய்யா’
‘சரி சரி… தவறு நடந்து போச்சு’
ஓடிப்போய் குப்பை கூளங்களை அள்ளினான்.
‘ம்ஹுக்கும் இன்னைக்கு அவ்வளவுதான் போல
ஸ்கூல் முடிஞ்சு, ஸ்கூல் மறுபடியும் தொறந்தாச்சு. யார் வீட்டுலயும் பழைய பழைய அட்டை, பேக்கு இல்லையா? எல்லாம் கஞ்சப் பயக போல’ திட்டிக் கொண்டே முன்னேறினான்.
தெருவின் கடைசி வரை வந்து சேர்ந்தான். எதுவும் அகப்படவே இல்லை.
‘மலர்க்கொடி இன்னைக்கும் கேக்குமே’ என்ன பண்றது குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டே முன்னேறினான். அவன் கண்ணில் விரக்தி விழித்திருந்தது. கண்களில் கண்ணீர் கூடு கட்டியது.
‘குப்பையைக் கொட்டிட்டு இன்னைக்கு வீட்டுக்குப் போகக் கூடாது’ நினைத்துக் கொண்டே தெருவைக் கடக்க முற்பட்டான். அப்போது,
‘ஏய், குப்பை வண்டி… நில்லு …. குப்பை வண்டி… நில்லு’ என்று பெண் கத்தினாள்.
‘ஆமா… குப்ப கொட்டுறதுக்கு மட்டும் ஓடியோடி வாரது. இவங்க கசடுகள அள்ளிப் போட்டுகிட்டுப்போய் நாம என்னத்தக் கண்டோம்’ நிற்காமலே சென்று கொண்டிருந்தான்.
‘குப்ப வண்டி… குப்ப வண்டி… கத்தியபடியே அந்தப் பெண் ஓடி வந்து கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட வண்டியை நெருங்கினாள்.
‘ஏன்பா வண்டிய நிப்பாட்டாமப் போற’ இந்தா குப்ப… என பொதியை நீட்டினாள்.
அலட்சியமாக அதை வாங்கிய கணபதி, மக்கும் குப்பை – மக்கா குப்பை எனப் பிரிக்க ஆரம்பித்தான். அங்கே… அங்கே பரீட்சை அட்டை, பழைய ஸ்கூல் பேக், பழைய செருப்பு சகிதம் எல்லாம் இருந்தன. கணபதிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
‘எல்லாம் போன வருசம் என் பொண்ணு ஸ்கூலுக்கு கொண்டுபோனதுப்பா. இப்ப புதுசா வாங்கிட்டோம்… வீட்டுல சும்மா எதுக்கு கெடக்குதுன்னு தான் என இழுத்தாள் அந்த பெண்மணி.
கணபதி இறக்கை கட்டியது போல குப்பை வண்டிய ஓட்டிக் கொண்டு வீடு நோக்கிப் போனான். வண்டியின் மேலே தன் மகள் கேட்ட ஸ்கூல் பேக், அட்டை, பழைய செருப்பு என எல்லாம் அழகாய் தொங்கிக் கொண்டிருந்தன.

ராஜா செல்லமுத்து