அனைத்து வண்டிகளும் இனி பெட்ரோல் மாடல்:

சென்னை, அக். 11–
சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் தனது அனைத்து வாகனங்களையும் பெட்ரோல் மாடலாக மாற்ற மகேந்திரா திட்டமிட்டு வருகிறது. இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அதாவது 2020-க்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ரகமான கேயுவி 100 என்எக்ஸ்டி மாடலை  அறிமுகப்படுத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது–
கே2, கே 2 பிளஸ், கே4 பிளஸ், கே6 பிளஸ் மற்றும் கே 8 ஆகிய 5 மாடல்களில் இது அறிமுகமாகியுள்ளது. இதன் மும்பை விற்பனையக விலை ரூ. 4.43 லட்சம் முதல். –   தற்போது அறிமுகமாகியுள்ள மாடல்களில் பேட்டரி மாடல் கார்களையும் அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது. பாரத் 6 மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2020-முதல் அமலுக்கு வருகிறது. அதற்குள்ளாக அனைத்து வாகனங்களையும் பெட்ரோல் என்ஜின் கொண்டவையாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாடல்களும் பெட்ரோல் என்ஜினை கொண்டதாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மாடல் 5% அளவுக்கு தேவையை ஏற்படுத்தினாலே மகிழ்ச்சியடைவோம் என்றார் பவன் கோயங்கா.
2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் பேட்டரி வாகனமாக மாற்ற முடியுமா என்று கேட்டதற்கு நிறுவனத்தின் 20% தயாரிப்புகள் பேட்டரி வாகனமாக மாறியிருக்கும் என்றார். ஓராண்டுக்குள் கேயுவி 100 மாடலின் பேட்டரி மாடல் கார் சந்தையில் விற்பனைக்கு நிச்சயம் வரும் என்றார்.
வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு 21 மாதங்களில் அதன் மேம்படுத்தப்பட்ட ரகம் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய மாடலைக் காட்டிலும் 40 விதமான சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.
டிரைவர் தேவைப்படாத வாகனங்கள் தயாரிப்பு நுட்பத்தை தங்களின் டிராக்டர் தயாரிப்பு மூலம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் பவன் கோயங்கா குறிப்பிட்டார்.