போனஸ் வாழ்க்கை

‘மோகனை ஆஸ்பத்திரிக்கு அவசரமாகக் கூப்பிட்டுக் கொண்டு போனார்கள்.
‘எனக்கு ஒண்ணுமில்லம்மா… ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்கு? வேண்டாமென்றே சொல்லிக் கொண்டிருந்தார் மோகன்.
‘இல்லப்பா… ஒங்களுக்குத் தெரியாது. திடீர்னு கீழே விழுகுறது தப்பு. அது ஒடம்புக்கு நல்லதில்லப்பா’ சொன்னாள் மகள் செல்வி.
‘விட மாட்டியே’
‘பேசாம வாங்கப்பா ஒரு மாஸ்டர் செக்கப் பண்ணிட்டு வரலாம்’
‘எதுக்கும்மா… காசுக்குப் புடிச்ச கேடா என்ன?’
‘இல்லப்பா, நீங்க இன்னும் சின்னப் புள்ளைன்னே நெனச்சிட்டு இருக்கீங்க’. இந்த வயசுக்கு மேல மயக்கம் போட்டு கீழ விழுறது ஏதோ பெரிய நோயோட அறிகுறியா இருக்கும்ப்பா’
ஒரு டெஸ்ட் தான எடுத்துப் பாப்பம். எடுத்தா எல்லாம் தெரிஞ்சு போயிரும்’
மோகன் எவ்வளவு சொல்லியும் செல்வி விடுவதாக இல்லை. அடம்பிடித்துக் கூட்டிக் கொண்டே சென்றாள்.
‘மோகனைப் பரிசோதனை செய்த டாக்டர்களுக்குப் பகீரென்றது.
நீங்க பேசண்டுக்கு என்ன வேணும்?
‘மகள் டாக்டர்’ செல்வி சொன்னாள்.
இவரு இவ்வாளவு வருசம் இருந்ததே பெரிய ஆச்சர்யம்.
செல்வி தலையில் குண்டைத் தூக்கிப் போட்டார் டாக்டர்.
‘என்ன சொல்றீங்க டாக்டர்.’
‘ஆமா… எல்லா டிஸிசும் இருக்கு. கிட்னி இப்பத்தான் பெயிலியராக ஆரம்பிச்சிருக்கு. ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு. ஒடனே பெட்ல அட்மிட் பண்ணுங்க. இல்ல ரொம்ப சீரியஸ் கண்டிசனுக்கு போயிருவாறு’ என்றார் டாக்டர்.
‘சார் வேற வழியே இல்லையா?’
‘ஏம்மா, டிஸிசிஸ் இருக்குன்னு சொல்றேன். வேற வழி இல்லையான்னு கேக்குறீங்க?
சாவுக்கு வழி வந்திருக்கு. பொழைக்க வழி சொன்னா, டாக்டருக்கே பதில் சொல்றீங்களா? கோபமாய் பேசினார் டாக்டர்.
மோகன் மவுனமாய் படுத்திருந்தார். அழுகையை அடக்கிக் கொண்டு அவர் அருகே வந்தாள் செல்வி.
‘என்ன சொன்னாங்கம்மா’
‘ஒண்ணுமில்லப்பா’ கொஞ்ச நாளைக்கு பெட்ல இருக்கணுமாம்.
‘எதுக்காம்’
‘ஒங்களுக்கு ஒடம்பு வீக்கா இருக்காம்’
‘என்னம்மா சொல்ற?’
‘ஆமாப்பா’
‘அவ்வளவு நாள் பெட்ல இருக்க நம்மகிட்ட பணம் ஏதும்மா’
இருக்கு பரிதாபமாயச் சொன்னார் மோகன்.
‘ஆபீஸ்ல கேட்டுப் பாக்கலாம்பா’
‘ஒங்க ஆபீஸ்லயா?
‘ஆமாப்பா’
தருவாங்களா?
‘கேட்டுக் பாக்குறேன்பா’
‘சொன்னதோடு அவள் வேலை பார்க்கும் மேலாளர் சிவராஜுக்கு போன் செய்தாள்’
‘ஹலோ’
‘சார், நான் செல்வி பேசுறேன்’
‘பேசுங்க’
‘சார்… சார்… பேசும்போதே அவளுக்கு உதறல் எடுத்தது.
‘என்ன செல்வி சொல்லுங்க’
‘சார் எங்கப்பாவுக்கு ஒடம்புக்கு முடியல.’
‘அப்படியா? என்னவாம்’
கொஞ்சம் சீரியஸ் கண்டிசன்’
‘ஓ நான் என்ன பண்ணணும்?’
‘கொஞ்ச நாளைக்கு பெட்ல இருந்து ட்ரீட்மெண்ட் குடுக்கணுமாம்’
‘ம்’ எவ்வளவு செலவாகும்னு சொன்னாங்க.
‘ரெண்டு, மூணு லட்ச ரூவா வரைக்கும் ஆகும் போல சார்’
‘ம்… செல்வி ஒங்க அப்பாவுக்கு இப்ப என்ன வயசாகுது?
‘எழுபத்தி அஞ்சு முடிஞ்சு எழுத்தி ஆறு சார்’
‘செல்வி’
‘சொல்லுங்க சார்’
‘நான் சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே’
‘இல்ல சார்’
‘ஒவ்வொரு மனுசனோட சாரசரி வாழ்க்கையே அறுபது வயசு தான். ஒங்கப்பா அதுக்கு மேல பத்து பதினஞ்சு வருசம் சேத்தே வாழ்ந்திட்டாரு. இதுவே அவருக்கு போனஸ் வாழ்க்கை தான், இந்த வயசுக்கு மேல இவ்வளவு செலவு பண்ணி அவரக் காப்பாத்தனுமா? கொஞ்சம் அக்கறை கலந்தது போல கேவலமாகச் சொன்னார் சிவராஜ்.
‘‘இல்ல சார், எத்தன வயசானாலும் அவரு எனக்கு அப்பா. ஒங்ககிட்ட ஹெல்ப் கேட்டது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க.’’ போனைக் கட் செய்தாள்.
இவனெல்லாம் ஒரு மனுசனா.
‘ச்சீ…. இவன்கிட்ட வேலை செய்றோம்னு சொல்லவே கேவலமா இருக்கு’
‘தனக்குத் தானே பேசிக் கொண்டாள். அதன் பிறகு தான் சேத்து வைத்திருந்த நகைகள், சேமிப்பு என அத்தனையும் போட்டு பண்புரட்டிக்கொடுத்துத்  தன் அப்பாவைக் காப்பாற்றினாள்.
சிறிது நாட்கள் கழித்து சிவராஜின் அப்பா, திடீரென குளியலறையில் மயங்கி விழுந்தார். அவரை அவசரம் அவசரமாக தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
சிவராஜ் தன் அப்பாவுக்கு என்னாச்சோ? ஏதாச்சோ என்று தவியாய்த் தவித்தார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் கையை விரித்தனர்.
‘டாக்டர் வேற வழியே இல்லையே’
‘ச்’ கொட்டினார் டாக்டர்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்.
‘அப்பிடியா?’   ‘ஆமா டாக்டர்’
‘இப்ப ஒங்க அப்பாவுக்கு என்ன வயசாகுது’
‘எண்பது டாக்டர்’
‘அடடடே’ மிஸ்டர் சிவராஜ் ஒவ்வொரு சராசரி மனுசனோட வாழ்க்கையே அறுபது வருசம் தான். ஒங்கப்பா அதையும் தாண்டி இருபது வருசம் எக்ஸ்ட்ராவே வாழ்ந்திருக்காரு. இந்த வயசுல இவ்வளவு ரூபா செலவழிச்சுக் காப்பாத்தணுமா? இதுவே அவருக்கு போனஸ் வாழ்க்கை தான்.
‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார். எங்க அப்பாவ எப்பிடியாவது காப்பாத்துங்க’ கதறினார் சிவராஜ்.
அப்போது அந்த மருத்துவமனையில் தன் தந்தைக்காக மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டிருந்தாள் செல்வி.
‘யாருக்கு மருந்து மாத்திரைகள்’
அங்கே செல்வியைப் பார்த்த சிவராஜ் கேட்டார்.
‘எங்க அப்பாவுக்கு,
‘அப்பா இப்ப எப்பிடியிருக்கார்?’
நீங்க சொன்ன போனஸ் வாழ்க்கையைத் தாண்டி நல்லாவே வாழ்ந்திட்டு இருக்கார் சார் என்றாள்.அப்போது  சிவராஜு செருப்பால் அடிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

ராஜா செல்லமுத்து