கோவையில் ஐடிசி குழுமம் சார்பில் ‘வெல்கம்’ 5 நட்சத்திர ஓட்டல்

கோவையில் ஐடிசி குழுமம் சார்பில், ‘வெல்கம்’ ஐந்து நட்சத்திர ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையின் மைய பகுதியான ரேஸ்கோர்ஸில், ஐடிசி குழுமம் சார்பில், ‘வெல்கம்’ ஐந்து நட்சத்திர ஓட்டல் துவங்கப்பட்டுள்ளது குறித்து, பொது மேலாளர் ரோஹித் மாலிக் கூறியாதவது:–

தமிழ்நாட்டின் 2வது பெரிய நகரமான கோவை, உடல்நலம் பேணுதல், கல்வி போன்றவற்றிற்குப் பெயர் பெற்றது. ஐடி கம்பெனிகளும் கூட, கோவை நகரை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளன. ஊட்டி, குன்னூர், வால்பாறை தவிர, மலம்புழா, மூனார் போன்ற உல்லாசபுரிகளுக்கும், கோவை நகரம் ஒரு வாசலாக விளங்குகிறது. இந்த வகையில், அனைத்துத் தரப்பினரும் வந்து தங்கிச் செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நட்சத்திர ஓட்டல், அனைத்து வசதிகளையும் குறைவின்றி, நிறைவாக நல்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உல்லாசபுரி, 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட, வெஸ்ட் கிளப் உள்ள சாலையில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து, சுமார் 20 நிமிடங்களில் இந்த இடத்தை அடைந்து விடலாம். எழிலார்ந்த 103 அறைகளும், வர்ண ஜாலமான வடிவமைப்புகளைத் தாங்கிய உட்புறமும், கோவையின் பழம்பெருமையையும், பாரம்பரியத்தையும் பாராட்டும் வண்ணம், இந்த ஓட்டல் அமைந்துள்ளது. விருந்தினர்களை விசேசமாகக் கவனிக்கும், ஐடிசி ஓட்டல்களுக்கே உரித்தான பணிவிடை முறை, இதிலும் உண்டு.

உயர்தரம் கொண்ட அலுவலகச் சந்திப்பிற்கு, உகந்த 5 பெரிய ஹால்கள், உடல்நலம் பேண சிறப்பு பயிற்சிக்கூடம், விதவிதமான உணவகங்கள் என, தொழில்ரீதியாக வருவோருக்கும், ஓய்வு நாடி வருவோருக்கும் உகந்த இடமாக இது திகழும்.

இயற்கை முறையில் உயர்தர விருந்து

பசுமைப் புரட்சியிலும் பங்கு கொண்டுள்ளதன் பிரதிபலிப்பாக, ‘லீட் ப்ளாடினம்’ அங்கீகாரத்தையும் பெறுவதற்கான முயற்சியில் இடம்பெற்றுள்ளது.

‘தி வெல்கம் கேப்’ கோவை, நாள் முழுவதும் உகந்த உயரிய விருந்தளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. ‘காட்டன் பார்’ வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

“கே” எனப்படும் ஸ்பாவில் (காயகல்ப்), உடல்நலம் பேணுவதற்கான வழிமுறைகளை வழங்க வல்ல வழித்தடங்கள் அனைத்தும் நீக்கமற அமைந்துள்ளன. பசுமை புரட்சியைப் பிரதிபலிக்கும் வண்ணம் செயல்படும் இந்நிறுவனம், இயற்கைச் செயல்முறைகளுக்கு ஒவ்வாத முறையில் எதுவுமே இங்கு செயல்படுத்தப்படுவதில்லை என உறுதியளிக்கிறது.

இந்தியாவில், மொத்தம் 70 இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஓட்டல்களை இயக்கி வரும் ஐடிசி குரூப் நிறுவனம், தலையாய ஓட்டல் குழுமங்களில் தனித்து நிற்கிறது. டெல்லி, சண்டிகர், ஜோத்பூர், கிம்சார், முசோரி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே உள்ள வெல்கம் ஓட்டல் குரூப், விரைவில், குண்டூர், புவனேஷ்வர், பஹல்காம், அமிர்தசரஸ் போன்ற இடங்களிலும் புதிய உல்லாச ஓட்டல்களை துவங்க உள்ளது என்று கூறினார்.