திருச்சி நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டிடங்கள்

திருச்சி, அக்.9–
திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகாலெட்சுமி நகர் மற்றும் ஜெகநாதபுரம் நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டடங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நியாய விலைக்கடைக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஆட்சியை மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார். முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டார். அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் சம்பா சாகுபடிக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சம்பா தொகுப்புத் திட்டத்திற்காக ரூ. 41 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். பயிர்கடன் வழங்க ரூபாய் 7 ஆயிரம் கோடி வழங்க ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
இதுவரை ரூபாய் 1,792 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் உரம் வழங்க போதுமான இருப்பு உள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் உரம் மேலும் வழங்கப்படும். தரமான விதைகள் வழங்கப்படுகிறது. அம்மாவின் அரசு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பொது விநியோகத்திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் 32,579 நியாய விலைக்கடைகள் உள்ளன. மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் அனைத்து விதமான பொருட்களும் வழங்கப்படுகின்றன.
முதலமைச்சர் கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததன் காரணமாக அனைத்து குளங்கள், ஏரிகள் நிரம்பி உள்ளன. தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு கூடுதலாக 29 சதவீதம் பெய்துள்ளது. இதன்காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் 32 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 2,247 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளுக்கு பயிர்கடன் அதிகமாக வழங்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மணிகண்டன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் தஞ்சாயி பாலசுப்பிரமணி, கயல்விழிசேகர், மகாலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பத்மநாதன், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.