சிக்கனம்

காலை டிபன் ரெடியா… என்று சமையல் அறையில் இருக்கும் தனது மனைவி சுகந்தியிடம் கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார் கோபால்.
என்னங்க இன்னைக்கு லீவு தானே. இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் நிதானமா என்னை சமைக்கவிடுங்க. வேலை நாளில் தான் அவசரம் அவசரமா சாப்பாடு செய்ய வேண்டி இருக்குது.
நீங்களும் கொஞ்சம் மெதுவாத்தான் சாப்பிடுறது. வேலைக்கு போற மாதிரியே அவசர அவசரமா சாப்பிட்டு என்ன பண்ண போறேங்க. கொஞ்ச பொறுங்க டிபன் ரெடியான உடனே நானே கூப்பிடுறேன் என்று கொஞ்சம் கோபமாக பேசினார் சுகந்தி.
நீ சொன்ன சரிதான் என்றார் கோபால்…. 9 மணியாகுது ரவி இன்னும் தூங்கி எந்திரிக்கலையா… ராத்திரி முழுவதும் அவன் ரூமில் டி.வி. சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தாதே என்று கல்லூரியில் படிக்கும் தனது மகனை பற்றி கூறினார்.
என்னங்க அவனுக்கு காலேஜ் லீவு தானே. அதான் ராத்திரி டி.வி.யில் சினிமா ஏதாவது பாத்துக்கிட்டு இருந்திருப்பான். சரி உடுங்க அவன் எப்போ எந்திரிகிறானோ அப்பவே எந்திரிக்கட்டும்.
சுகந்தி உன் பையன் ரவி கெட்டுப்போறதுக்கு காரணமே நீ தான். வீட்டு நிலமையை உணராம தாம்… தூம்னு செலவு செஞ்சுகிட்டு இருக்கான். இப்படி இஷ்டபடி சுத்திக்கிட்டு இருக்கான்.
என்னங்க நமக்கு இருக்கிறது ஒரு பையன். நீங்க சம்பாதித்து யாருக்கு சேர்க்கிறேங்க. அவனுக்கு தானே. அப்புறம் அவன் செலவு செய்யாம வேற யாரு செலவு செய்யறது. கொஞ்சம் விட்டுப்பிடிங்க. எதுக்கு எடுத்தாலும் சிக்கனம்… சிக்கனமும் கச்சத்தனமா இருக்காதேங்க.
அதுதான் அவனுக்கும் உங்களுக்கும் அடிக்கடி சண்டை வருது.
இல்ல சுகந்தி நான் எதுக்கு சொல்றேன்னா… இன்னைக்கு சிக்கனமா இருக்க பழகினாதான் எதிர்காலத்தில் அவனுக்கும் ஒரு குடும்பம்னு வரும் போது அவனால குடும்பத்தை சமாளிக்க முடியும்.
சின்ன வயசுல எங்க வீட்டில் எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா?
அந்த கஷ்டத்தில் எங்க அப்பா சிக்கனமா இருந்து இருக்கிறத வச்சு, குடும்பத்தை சந்தோஷமா வச்சிருந்தார்.
அவர் அன்றைக்கு சொல்லிக் கொடுத்தத பின்பற்றி நாங்க வளர்ந்ததால் தான் இன்னைக்கு இவ்வளவு வசதியா இருக்க முடியது.
இருக்குதேன்னு, தாம்… தூம்னு… செலவு செஞ்சா எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டமா போயிடும். அதுதான் அவனுக்கு எடுத்து சொல்லி வளர்க்க நினைக்கிறேன்.
நீயும் அவன் கூட சேர்ந்துகிட்டு பொறுப்பே இல்லாம பேசுற என்றார் கோபால்.
அய்யோ…. சாமி லீவு நாளும் அதுவுமா காலையிலே ஆரம்பிக்காதேங்க. வாரத்தில் ஒரு நாள் தான் வீட்டில் இருக்கேங்க கொஞ்சம் சண்டை போடாமா நிம்மதியா இருக்க உடுங்க. இப்ப டிபன் ரெயடிாயிடுச்சு வாங்க சாப்பிடலாம் என்றார் சுகந்தி.
அதைத் தொடர்ந்து கோபாலும் சுகந்தியும் காலை டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது தூங்கி எழுந்து வந்த அவர்களது மகன் ரவி,
அம்மா உங்க பர்சில் இருந்து 200 ரூபாய் எடுத்துட்டு போறேன் என்றார்.
எதுக்கு தம்பி 200 ரூபாய் என்றார் சுகந்தி.
முடி வெட்ட போறன் என்ற ரவி வண்டி சாவியை எடுத்தான்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த கோபால்….
ஏன்டா முடிவெட்ட எதுக்கு 200 ரூபாய் என்றார்.
அப்பா நீங்க எந்த காலத்துல இருக்கேங்க. நான் முடிவெட்டும் கடையில் 200 ரூபாயிலிருந்து 500 ருப।ய் வரைக்கும் முடி வெட்டாலம். நான் தான் கம்மியா வெட்றேன்.
ஏன்டா… கொஞ்சம் சின்ன கடைக்கு போனா 10 ரூபாய், 100 ரூபாய்க்கே முடி வெட்டலாமே.
காசோட அருமை தெரியாம, இப்படி கண்டபடி செலவு செய்ற.
எந்த நேரமும் உன் ரூமில் லைட் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. டி.வி.யும், ஏ.சி.யும் ஓடிக்கிட்டே இருக்கு. செல்போனில் பேசிக்கிட்டு இருப்பதும் பாட்டு கேட்பதுமா இருக்க. அடிக்கடி வீட்டில் சாப்பிடமா ஓட்டலில் சாப்பிடுற… பக்கத்து தெருவுக்கு போறதுக்கு கூட வண்டியை எடுத்துக்கிட்டு போற.
பெட்ரோல் விக்கிற விலைக்கு நீ காசோட அருமை தெரியாம இப்படி சுத்திக்கிட்டு இருக்க…
ஏதாவது ஒரு பொருள் வாங்கனும்னா   என்கிட்ட வாங்கிட்டு போகிற காசு வைச்சுக்கிட்டு பொருள் வாங்குன. அதனால காசுக்கு தகுந்த மாதிரி பொருள் வாங்கின.
ஆனா இப்ப ஏடிஎம். கார்டு எடுத்துட்டு போயிட்டு உனக்கு தேவையானத வாங்கிட்டு வந்துடுற.
அது போதாதுன்னு… அமேஷன்,  பிலிப்கார்டுன்னு உனக்கு தேவையானதை ஆன் லைன்ல  வேற  புக்கிங் செய்துட்டு போற.
அவன் வந்து பொருளை கொடுத்துட்டு காச வாங்கிட்டு போறான்.
இப்படியே போச்சுன்னா ரொம்ப கஷ்டம்.
காச செலவு செய்றது சுலபம்… ஆனால் அந்த காசை சம்பாதிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
நீ சம்பாதிக்கும் போது தான் அது உனக்கு தெரியும்.
கொஞ்சம் சிக்கனமா இருந்து பழகு…. அவ்வளவு தான் சொல்லுவேன்.
அப்பா அதெல்லாம் எனக்கு தெரியும். சிக்கனம்…. சிக்கனம்… என்று சொல்லிக் கொண்டு கருமியா இருக்காதேங்க… என்று கூறிய ரவி வேகம் வேகமாக தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
உடனே சுகந்தியை பார்த்த கோபால்… அடுத்த தெருவில் இருக்கும் முடிவெட்டும் கடைக்கு போகுறதுக்கு வண்டியில் போறான் உன் பையன். நடந்து போனா கால் வலிக்குமா என்று கேட்டார்.
ஐயோ… சாமி கொஞ்சம் சும்மா இருக்கேங்களா? இந்த காலத்து பசங்க அப்படி தான்… சும்மா எதுக்கு எடுத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கக்கூடாது என்று கொஞ்சம் அதட்டல் தோரணையில் கூறினார் சுகந்தி.
இதைத் தொடர்ந்து அமைதியான கோபால் காலை டிபனை முடித்துவிட்டு, வீட்டை சுத்தும் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
2 மணி நேரத்திற்கு பின்னர் வெளியே சென்ற ரவி வீட்டுக்கு வந்து, தனது அறைக்குள் சென்று குளித்து விட்டு பின்னர் காலை டிபன் ரெடியா என்று தனது அம்மாவிடம் கேட்டான்.
தனது மகன் பசியோடு வருவான் என்பதை உணர்ந்த சுகந்தி, அவனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுக்க ரவியும் அதை விரும்பி சாப்பிட்டான்.
அப்போது அங்கு வந்த கோபால், சுகந்தியிடம் நான் மார்க்கெட்டு போயிட்டுவறேன் என்று கையில் பையை தூக்கிவிட்டு கிளம்பினார்.
உடனே சுகந்தி, என்னங்க… பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் காய் வாங்கிட்டு வாங்களேன் என்றாள்.
இல்ல… சுகந்தி மார்க்கெட்டில் போய் வாங்கி வந்துடுறேன்…
சரி வண்டியில் போங்க, அல்லது ஆட்டோவில் போயிட்டு சீக்கிரம் வாங்க. நீங்க வந்த பின்னர் தான் சமைக்க முடியும் என்றாள் சுகந்தி.
நான் நடந்தே போறேன் என்று கோபால் கூறினார்.
ரவி குறுக்கிட்டு… அப்பா மார்க்கெட் 2 கி.லோ மீட்டர் தூரத்தில் இருக்கு. அதுக்கு நடந்து போகனும்னா 20 நிமிஷம் ஆகும். அதுக்கு வண்டியில் போகலாம் அல்லது ஆட்டோவில் போனா சீக்கிரம் வாங்கிட்டு வந்திடலாம் என்றான்.
ஆட்டோவில் போனா போக 20 ரூபாய், அங்கிருந்த இங்கு திரும்பிவர 20 ரூபாய் என 40 ரூபாய் செலவாகும். அந்த 40 ரூபாயை மிச்சப்படுத்ததான் நான் நடந்தே போறேன்.
அந்த காலத்துல நாங்க 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு கூட நடந்த தான் போவோம். 5 கி.லோ மீட்டர் தள்ளி இருக்கும் உறவினர்கள் வீடு அல்லது வேற வேலையா போக வேண்டுமானால் பஸ்சில் போனால் 2 ரூபாய் செலவாகும்னு நடந்து போவோம் அல்லது சைக்கிளில் போவோம்.
அப்படி சிக்கனமா வளர்ந்தவங்க நாங்க.
இந்த காலத்துல எதுக்கு எடுத்தாலும் வண்டி, ஆட்டோ, கார்னு எடுத்துக்கிட்டு சுத்துறீங்க. யாரும் நடக்கிறதேயில்லை. நடந்து போனா உடலுக்கும் நல்லது. காசும் மிச்சமாகும்.
எங்களுக்கு எதுக்கு செலவு செய்யனும். எதை மிச்சப்படுத்தனும்னு தெரியும். அந்தந்த சமயத்தில் அதை கண்டிப்பா நான் செய்வேன் என்று கூறினான் ரவி.
உடனே சுகந்தி… ஏங்க குறை சொல்ல ஆரம்பிச்சா எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்க.
இந்த வயசுல சின்ன பசங்க அப்படித்தான் செய்வாங்க. உங்க வயசுல அவனும் சிக்கனத்தை கத்துக்கிடுவான்…
இப்ப நீங்க சீக்கிரமா போய் காய் வாங்கிட்டு வாங்க. சமையல் செய்யனும் என்று கூறினார்.
அப்பா உங்க காலத்தில் உங்களுக்கு வண்டி, ஆட்டோ, கார்னு எந்த வசதியும் கிடையாது. அதனால அப்படி இருந்தீங்க.
ஆனா இந்த காலத்தில் எல்லா வசதியும் இருக்கு. அதை நாம பயன்படுத்திகிடனும்.
அந்த காலத்தில் 2 ரூபாயை மிச்சப்படுத்துறேன்னு 2 மணி நேரம் நடந்து போனீங்க.
ஆனா இந்த காலத்துல நாங்க 20 நிமிஷத்தை மிச்சப்படுத்த 20 ரூபாய் செலவு செய்றோம். அதனால எதை மிச்சப்படுத்துறோம்ங்கிறது முக்கியம் என்று மகன் சொன்னதைக் கேட்டதும் தனது வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றார் அப்பா.
இப்போது அவருக்கு சிக்கனத்தின் அர்த்தம் தெளிவாகப் புரியத் தொடங்கியது.