சுடிதார்

‘ராஜேஸ்வரிக்கு வயது 28, 29 இருக்கலாம்’ ஆனால் அவள் 18 ஐ எட்டாத பருவ மங்கையாகவே இருப்பாள். அவள் உடை, நடை, பாவனை எல்லாம் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும்.
‘ஏலோவ் ராஜேஸ்வரி.., நீ கல்யாணம் பண்ணுனவ கணக்காவா இருக்கே… ஒன்னோட டிரஸ்ஸும் நடையும் எனக்குப் பாத்தாலே புடிக்கலடி. இதுல பச்சப் புள்ளைய வேற கையில வச்சிருக்க. சுடிதாரோ? கொடிதாரோ இதெல்லாம் போட வேணாமுடி. நல்லா சீலையா பாத்துக் கட்டு, நானெல்லாம் பின்கொசுவம் வச்சு, கண்டக்காலுக்கு மேல சீலய ஏத்திக்கட்டிட்டு டங்கு டங்குன்னு நடந்தேன்னா படுத்திருக்கிற பாம்பு கூட எந்திரிச்சு நின்னு வழி விடும்டி’ இந்தக் காலத்து பொம்பளைங்கள நெனச்சாலே கொமட்டிக்கிட்டு வருது. சுடிதாரு, மிடின்னு என்னத்தையோ தூக்கிப் போட்டுட்டுத் திரியுறாளுக… சீமைச் சிறுக்கிக என்று விளாசினாள் ராஜேஸ்வரியின் பாட்டி அழகம்மாள்.
‘இல்ல பாட்டி, இது நல்ல டிரஸ். இதப் போட்டுக்கிட்டா வசதியா இருக்கு. அதான் அத்தோட கவர்ச்சியாவும் இருக்காதே’
‘எதுடி கவர்ச்சிங்கிறது இடுப்புல இம்புட்டுண்டு தெரியுறதா கவர்ச்சி. மேலு காலுல காத்தோட்டம் இருக்கணும்னு தான், அங்கங்க இடைவெளி வச்சு துணி மணிய தச்சுப் போட்டாங்க. இப்பிடியா ரோதையில அரிசியறைக்கிற மிசின்ல வர்ற துண்டுத் துணி மாதிரி கழுத்துல இருந்து காலு வரைக்கும் ஒண்ணா போட்டுட்டு, ச்சீ… எனக்கென்னமோ இது புடிக்கல தாயி, புருசனும் பொஞ்சாதியும் சேல, வேட்டி கட்டி நடந்து போனா, இப்பிடியொரு அம்சமான சோடியப் பாத்ததில்லன்னு ஊரே மெச்சி வாயில கைய வைக்கணும். அத விட்டுட்டு சுடிதாரு போடுறாளாம் பெரிய சுடிதாரு கொஞ்சம் சூடாகவே பேசினாள் அழகம்மாள்.
‘இப்ப என்னங்கிற. இது மாடர்ன் உலகம்; மாடர்ன் டிரஸ் தான் போடுவோம். சீலை, பாவாடையெல்லாம் அந்தக் காலம். இப்ப எல்லாரும் இதத் தான போடுறாங்க’ இது அப்பிடியொன்னும் தப்பான டிரஸ் இல்ல’ ராஜேஸ்வரியும் விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.
‘என்னடி பெரிய மாடர்ன் டிரஸ், மறைக்கிறத மறைக்காம அப்பிடியே …. என் வாயில என்னமாவது வந்திரப் போகுது, நெஞ்ச மறைக்க துணி குடுத்தா அதக் கழுத்துல சுத்திப் போட்டுக்கிறீங்க. இல்ல பெட்டியில மடிச்சு வச்சுக்கிறீங்க. இதுவா மாடர்ன் டிரஸ்’ ம்ஹுகும் நான் நம்ப மாட்டேன். இந்த டிரஸ் எனக்குப் புடிக்கல . அதுலயும் நீ புள்ள பெத்தவ இந்த டிரஸ் எல்லாம் போடக் கூடாது’
‘பாட்டி… நீ இன்னும் அந்தக் காலத்திலயே இருக்க. இந்தக் காலத்துக்கு வா. பொம்பளைங்க என்னென்னமோ செஞ்சிட்டு இருக்காங்க. இந்த டிரஸ் போட்டது ஒனக்கு குத்தமா போச்சா? நான் அப்பிடித்தான் போடுவேன்.
‘எனக்கென்னடி வந்திருச்சு. ஏதோ என்னோட மனசுல உறுத்துன விசயத்த பட்டுன்னு சொல்லிட்டேன். சின்னஞ்சிறுசுகன்னாக் கூட பரவாயில்ல. நீ கல்யாணம் பண்ணி புள்ளயப் பெத்தவ. நாலு எடத்துக்குப் போகும் போது, நாகரீகமா சீலையக் கட்டிட்டுப் போறதில ஒரு கவுரதி இருக்குமே’
‘எனக்கு கவுரதியெல்லாம் வேணாம். எனக்கு இந்த டிரஸ் புடிச்சிருக்கு’
‘அப்ப நீ மாத்த மாட்ட’
‘ஆமா’
‘போடி இவளே… கெழவி சொல்றது ஒனக்கு சுருக்குன்னு வலிக்கும் போது தான் தெரியும். நான் சொல்றதோட பெருமை. அது வரைக்கும் நான் சொல்றது ஒனக்கு கிண்டல் கேலியாத் தான் தெரியும்’ என்ற அழகம்மாள் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
நாட்கள் சில சென்றன.
ராஜேஸ்வரியும் கணவன் கோவிந்தும் ஒரு நாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
‘அதே சுடிதார், கழுத்தில் தொங்காத டாப் சகிதம் மாடர்ன் உடையில் கிளம்பினாள். இடுப்பில் குழந்தை.
‘ம்க்கும்… இன்னைக்கும் இதே டிரஸ் தானா? ராஜேஸ்வரியைப் பார்த்த அழகம்மாள் முகத்தைச் சுழித்துக் கொண்டு வேறு திசை திரும்பினாள்.
‘என்னவாம்? கோவிந்தன் கேட்டான்.
பாட்டிக்கு நான் மாடர்ன் டிரஸ் போடுறது பிடிக்கலையாம்’
‘என்னவாம்?’
‘தெரியலையே’ என்றாள் ராஜேஸ்வரி.
இருவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ராஜேஸ்வரியின் குழந்தை ‘வீல்’ என அழுதது.
‘சரி… சரி… அழாதே…
சரி… என வாயாலே சமாதானம் செய்தாள்.
குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தது.
‘ஏம்மா கொழந்த அழுகுது,
‘அமத்தும்மா’
‘பால் கொண்டு வந்தீங்களா?
‘இல்லையே’
‘வேற’
‘தாய்ப்பாலாவது குடுக்கச் சொல்லுங்க’ இந்த வார்த்தையைக் கேட்டதும் ராஜேஸ்வரி விழித்தாள்.
‘எப்பிடிங்க?’
‘உங்க பாட்டி சொன்னது இப்பத்தான் வலிக்குது’
குழந்தை அழுதபடியே இருந்தது.
ராஜேஸ்வரியால் சுடிதாரைக் கழற்றி விட்டு குழந்தைக்குப் பால் கொடுக்க முடியவில்லை.
அவஸ்தையும் அவமானமும் அவளை ஒரு சேரக் கொன்றது.
‘இந்தாம்மா இந்தப் புட்டிப்பாலாவது குடு’ என்று ஈரமுள்ள ஒருத்தி பால்ப் புட்டியை நீட்டினாள்.
அவமானத்தோடு பால்ப் புட்டியை வாங்கிய ராஜேஸ்வரி குழந்தைக்குக் கொடுத்தாள்.
அது பால்ப்புட்டியைத் தள்ளிவிட்டு, அவளின் மார்பில் முகம் புதைத்தது.
சுடிதாரைக் கழற்ற முடியாமல் திண்டாடினாள்.
‘ஏம்மா கைப்புள்ளைய வச்சிட்டு. இந்த மாதிரி டிரஸ் எல்லாம் ஏன் போடுறீங்க’
புள்ளைக்கு பால் குடுத்திட்டு அடுத்த பஸ்ல வாங்க.
திட்டி இறக்கி விட்டார் நடத்துனர்.
அழுது கொண்டே பஸ்ஸை விட்டு இறங்கினாள் ராஜேஸ்வரி.
‘இந்தக் கெழவி சொல்றது சுரீர்ன்னு ஒரு நாள் ஒனக்கு ஒறைக்கும்’ என்று அழகம்மாள் பாட்டி சொன்னது ராஜேஸ்வரியின் கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

ராஜா செல்லமுத்து