தானம்

நானும் நண்பர் நடராஜனும் தேனாம்பேட்டை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பினோம்.
சார், சாப்பிட்டுப் போலாமா?
“ம் சாப்பிடலாமே! என்றார் நடராஜன்.
“எங்க சாப்பிடலாம்? யோசித்தோம்.
சார் இங்க நல்ல ஓட்டல் ஏதாவது இருக்கா?
பாக்கலாமே இருவரும் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஏரியாக்களில் தேடினோம்.
ம்ஹுகும் … எதுவும் சரியாக அகப்படவே இல்லை
சார் இங்க சுலப விலைக் கடைன்னு ஒண்ணு இருக்கு போய் பாப்பமா?
பாக்கலாமே?
இருவரும் சுலப விலை ஓட்டலை நோக்கிச் சென்றோம். கடையின் முன்னே ஒரு பெண்மணி உடம்பில் வேர்வை வழிய வழிய கையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு புரோட்டோ போட்டுக் கொண்டிருந்தாள்.
சார், இங்க சாப்பிடலாமா?
“ம்”
இருவரும் ஓட்டலின் உள்ளே போய்ப் பார்த்தோம்.
“கசடு கசடு. கடை முழுவதும் எங்கும் கசடு
ஐயோ இங்க சாப்பிட வேண்டாமே … இருவரும் முடிவெடுத்து ஓட்டலைவிட்டு வெளியேறினோம்.
என்னங்க சாப்பிடலயா? என்றாள், அந்தப் பெண்மணி.
இல்லங்க நேரமாச்சு நாளைக்கு வாரோம் என்றபடியே வெளியேறினோம்.
சார் ரொம்ப நாளைக்கு முன்னாடி சாப்பிட்டமே தி. நகர் பனகல் பார்க் கிட்ட ஒரு கையேந்தி பவன் . அது எப்படி இருக்கும்?
சூப்பர்,
அங்கேயே போவோம் என முடிவு செய்து இருவரும் தி நகருக்கு பஸ்ஸில் விரைந்தோம்.
பனங்கல் பார்க் திருப்பத்தில் இறங்கி சாப்பிடப் போனோம் .கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. சார் ரொம்ப கூட்டமா இருக்குல்ல.
“ஆமா’’
இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சார் ரெண்டு பிளேட்
என்னது? கேள்வி கேட்டார் ஓட்டல்காரர்.
ஒரு பிளேட் இட்லி
ஒரு பிளேட் புரோட்டா
ஒரு ஆம்லேட், ஒரு புல்பாயில் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தோம். அங்கே அழுக்கு படிந்த உடையில் இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.
அவங்களையெல்லாம் ஏன் இங்க நிக்க வைக்கிறாங்க. வெரட்டி விட வேண்டியது தான?
அவங்களை பார்க்க வச்சிட்டு எப்படிச் சாப்பிட முடியும்? என்று நான் சொன்ன போது அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் இவங்க இப்படித்தாங்க.
ஏதாவது வாங்கிக் குடுக்கலாமா?
இவங்களுக்கா வாங்கிக் குடுக்கப் போறீங்க. வாங்குன ஒடனே பையில போடுவாங்க என்றார் அவர்
“அப்படியா? எதுக்கு பையில வாங்கிப் போடுறாங்க’’
” தெரியலையே ’’என்றார்
“ஒருவேள வெளிய கொண்டு போயி விக்கிறாங்களோ?
“அப்பிடித்தான் போல என்றார் நடராஜன்
சிறிது நேரத்தில் எங்கள் கைகளுக்கு உணவு வந்து சேர்ந்தது.
சார் இவங்கள பாக்க வச்சுச் சாப்பிட ஒரு மாதிரியா இருக்குல்ல
“ஆமா “
” என்ன பண்ணலாம்?’’
பரவாயில்ல …. இந்த மனுச வாசன இல்லாத மனுசங்கள மாதிரி நாம இருக்கக்கூடாது.
ஏங்க இவங்களுக்கு ரெண்டு பிளேட் இட்லி குடுங்க ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். இட்லியை வாங்கிய இருவரும் அவர் சொன்ன மாதிரியே தன் பையில் போட்டுக் கொண்டு வெளியேறினர்.
நான் சொல்லல அவங்கெல்லாம் இப்படித்தாங்க. சும்மா ஏமாத்துற ஆளுக . இப்பிடி நெறயாப் பேருக்கிட்ட வாங்கி வாங்கி பையில போட்டுட்டு போய்ட்டே இருக்காங்கஎன்றார் அவர்.
இதுல தானம் தர்மம் வேற இந்த மாதிரி ஆளுகளுக்கு தர்மம் பண்ணக் கூடாதுங்க மறுபடியும் அவரே
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே இட்லியை வாங்கிய இருவரையும் பார்த்தோம் .அவர்கள் இருவரும் விறு விறுவென நடந்து சென்றார்கள்.
கொஞ்சம் தள்ளியிருந்த பிளாட்பார்மில் படுத்திருந்த வயதானவர்களை எழுப்பினர்.
அம்மா …அம்மா….
எழுந்திரிங்க உசுப்பினார்கள் அங்கே படுத்திருந்த நான்னகந்து பேர் எழ முடியாமல் எழுந்தார்கள்.
சாப்பிடுங்க என்று தாங்கள் கொண்டு வந்த இட்லிப் பொட்டலங்களை அவிழ்த்து வைத்தார்கள்.
ஏப்பா கையில காசு இல்லைன்னு சொன்னிங்களே. இது எப்படி? என மெல்லக் கேட்டாள் ஒரு வயதான கிழவி இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
சொல்லுங்கப்பா இந்த இட்லி எப்படி வந்துச்சு? இருவரும் விழித்தார்கள்.
இனிமே அந்த ஓட்டல்ல போயி சாப்பிட்டு இருக்கிறவங்க கிட்ட தொந்தரவு பண்ணி வாங்கிட்டு வராதீங்க. பசிய விட கௌரவம் முக்கியம். ரோட்டுல கெடந்தாலும் மரியாதை வேணும்யா என்றார் ஒரு பெரியவர். இருவரும் சொல்வதறியாது திகைத்தார்கள்.
இதையெல்லாம் நாங்கள் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
அம்மா இட்லி
நாங்க தான் வாங்கிக்கொடுத்தோம் சாப்பிடுங்க என்றேன் நான்.
அது இல்லீங்க இந்தப்பயக தெனமும் இதே வேலையாவே இருக்கானுக .வேலவெட்டிக்குப் போறதில்ல.
இனிமே அப்படிச் செய்ய மாட்டாங்க.
நீங்க வேலைக்குப் போறீங்களா?
இருவரும் பெரிதாகத் தலையாட்டினார்கள்.
மறுநாள் இருவரையும் ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அழைத்து சென்ற வேலியில் சேர்த்துவிட்டேன்.
அந்த நாள் அதே இரவு…
நேற்று யாரிடமோ கையேந்தி நின்றிருந்த அவர்கள்  அதே கையேந்தி பவனில் பணம் கொடுத்து இட்லி வாங்கிக் கொண்டிருந்தனர்.

ராஜா செல்ல முத்து