துணையை இழந்தவர்

ராசய்யா முன்னெப்போதுமில்லாமல் சோகமே உருவாக இருந்தார். அவர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.
‘இருக்காதாங்க, புருசன் பொண்டாட்டின்னு ஒண்ணு மண்ணாத் திரிஞ்சவங்க திடீர்னு விட்டுட்டுப் போனா எப்பிடி தாங்குவாரு மனுசன். அதான் ஒடஞ்சு போய்ட்டாரு.
ஆம்பளை செத்து, பொம்பள உசுரோட இருந்தா, எங்கனயாவது கஞ்சி தண்ணிய வாங்கிக் குடிச்சிட்டு பொழச்சுக்கிருவாங்க . ஆனா பொம்பள செத்து ஆம்பள இருந்தா அவங்க பாடு பெரிய திண்டாட்டம் தான். மக வீட்டுக்கும் போயி நறுக்குன்னு நாலு நாளைக்கு ஒக்காந்து சாப்பிட முடியாது, மகன்க வீட்டுல போயி கூசாம கை நனைக்கவும் முடியாது. நல்ல மகன், நல்ல மருமக வச்சா சரி, இல்ல சாகுற வரைக்கும் லோலோன்னு அலைய வேண்டியது தான்.
பாவம் ராசய்யா இதுல எதுல சிக்கி வேதனைப் படுறாரோ? என்று ராசய்யாவின் நிலையை அக்கு வேறு ஆணி வேராய்ப் பிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் பெருசுகள். எதையோ வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார் ராசய்யா.
அவரின் அருகே பேசிய பெருசுகள் மெல்லப் போனார்கள், அருகே உட்கார்ந்தார்கள்.
‘என்ன ராசய்யா, ஒக்காந்திட்டீங்க? சின்னதாய்ச் சிரித்தார் ராசய்யா.
சாப்பிட்டீங்களா?
‘ஆமா’ என்பது போல் தலையாட்டினார்.
எங்க? மக வீட்டுலயா? மகன் வீட்டுலயா?
‘மக வீட்டுல’ சுருதி கொஞ்சம் விலகியே சொன்னார்.
ஏன் மகன் வீட்டுல சாப்பிடுறதில்லையா? என்றதற்கு அவர் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் தான் பதிலாய் வழிந்து கொண்டிருந்தது.
‘ச்சே… எதுவும் தப்பா கேட்டிருந்தா மன்னுச்சிரு ராசய்யா’ என்று ஒரு பெரியவர் சொன்னதும் அதற்கு ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினார். கண்களிலிருந்து அனிச்சையாக நீர் வழிந்து கொண்டே இருந்தது.
நாம தான் ஏதேதோ பேசி ராசய்யாவ அழுக வச்சிட்டோம்னு நெனைக்கிறேன். எங்கள மன்னிச்சிருப்பா என்று கையெடுத்துக் கும்பிட்டார் பெருமாள்.
ஐயோ நீங்க ஒண்ணு, அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்னோட விதி, நேரம் யாரச் சொல்லி, என்ன குத்தமுங்க எம் பொழப்பு இப்பிடியாகிப் போச்சு. இது மண்டையோட தான் போகுமேயொழிய மாத்தி எழுத யார்னால முடியும்’ எம் பொண்டாட்டி இருக்கிற வரைக்கும் என்னோட வேட்டியப் புடிச்சிட்டே திரியுவா. இன்னைக்கு அவ இல்ல இப்ப பட்டும் படாமத் திரியுறேன். என்னோட நெலம யாருக்கும் வரக் கூடாது. பொண்டாட்டி செத்துப் போயி புள்ளைக கிட்டயும், மருமக கிட்டயும் கஞ்சி வாங்கிக் குடிக்கிற ஈனப் பொழப்பு போதும்பா அப்பிடியே செத்து போகலாம்னு இருக்கு பெருமாளு. என்ன செய்ய கடைசிக் காலம், அப்பிடி இப்பிடின்னு ஏதாவது செஞ்சுக்கிட்டம்னா ஏழேழு தலைமுறைக்கும் கெட்ட பேரு வந்து சுத்தும்.
ம்… பாப்போம். மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த சீவன் கெடக்கட்டும். விதி வரும் போது உசுரு போகட்டும்’ என வௌ்ளந்தியாகச் சொன்னார் ராசய்யா.
‘எவ்வீட்டு பொம்பள கூட அப்பிடித்தாங்க, நான் எந்நேரம் வந்தாலும் அப்பத்தான் சாப்பிடுவா . அது நடுச்சாமமா இருந்தாலும் சரி. நம்மக்கட்டுன பொம்பள கூட இருக்கும் போது அப்பிடியொரு தெம்பு இருக்கும்யா.
ராசய்யா இப்பிடி இருக்கிறதில ஆச்சர்யப்பட ஒண்ணுமில்ல. அவர் எடத்தில இருந்து பாத்தா நெலைம தெரியும். வேடிக்க பாத்திட்டு வெவரம் சொல்ற ஆளுகளுக்கு என்ன தெரியும் . அவரோட வேதன… எல்லாம் பட்டாத் தான் தெரியும்…’ என்றார் ஒரு பெரியவர்.
ராசய்யா
‘ம்’
‘டீ குடிக்கப் போறோம் வாரய்யா’
‘ம்’ என மறுபடியும் உதடு திறக்காமலே பதில் சொன்னார். பெருசுகள் எல்லாம் பொடி நடையாக டீக்கடை வந்து சேர்ந்தார்கள்.
‘காபியா? டீயா… ராசய்யா .
‘ஏதாவது ஒண்ணு… சுரமே இல்லாமல் சொன்னார்.
‘எல்லாருக்கும் டீ குடுங்க’
ஆர்டர் சொல்லிவிட்டு ஆளுக்கொரு திசையில் திரும்பியிருந்தார்கள்.
‘சார் டீ’ குரல் கொடுத்தான் டீக்கரைக்காரன்.
‘ராசய்யா, இந்தாங்க டீ’ டீயைக் கையில் வாங்கிய ராசய்யா உதட்டருகே கொண்டு போனபோது, உதறல் எடுக்க ஆரம்பித்தது. கை நடுங்கியது. டீ கிளாஸை கீழே போடுவது போல் கொண்டு போனார்.
‘ராசய்யா என்னாச்சு?’
‘ஒண்ணுமில்ல’
‘இப்ப கையெல்லாம் நடுங்குச்சே ராசய்யா’
‘இல்ல… எம் பொண்டாட்டி ஞாபகம் வந்துச்சு, அதான்’
‘பொண்டாட்டி… பொண்டாட்டி அதையே நெனச்சிட்டு இருந்தா எப்பிடி? ஒடம்பு கெட்டுப் போகும் ராசய்யா’ என்னைய மன்னிச்சுருங்க . என்னால அவள மறக்க முடியல. சாப்பிட்டா, தூங்குனா, எந்திரிச்சா, டீ குடிச்சா எல்லாமே அவளாத் தான் எனக்குத் தெரியுறா.
‘என்னால மறக்க முடியல’ என்று அழுது புலம்பினார் ராசய்யா.
‘பாவம்ங்க, ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காரு போல’
‘அவருக்கு மட்டுமில்லீங்க. இந்த நாட்டுல பொறந்த எல்லா மனுசனுங்களுக்கும் இதே நெலைம தான்’ என்று ஒரு பெரியவர் சொல்ல அப்போது பெருமாளுக்கு, அவசரமாய் இன்னொரு பெரியவரின் செல்போனிலிருந்து போன் வந்தது.
‘யாருங்க?’
‘நான் பெருமாள் அய்யாவோட உறவுப் பொண்ணு பேசுறேன்’
‘சொல்லுங்க’
‘என்னத்த சொல்றது… அவர சீக்கிரம் வரச் சொல்லுங்க’
‘ஏன்னு சொல்லுங்க’
‘வேணாங்க, ரொம்ப வருத்தப்படுவாரு’
‘அட சும்மா சொல்லும்மா…’ என்று கொஞ்சம் அதட்டியே கேட்டார் அந்தப் பெரியவர்.
‘பெருமாளோட மனைவி எறந்திட்டாங்க… இத எப்பிடித் தாங்கப் போறாருன்னு தெரியல…. கொஞ்சம் நிதானமா எடுத்துச் சொல்லுங்க… மனுசன் இந்த வயசிலயும் அந்த அம்மா மேல அம்புட்டு பாசம் வச்சிருந்தாருங்க’ என்று சொன்னபோது, பெருமாள் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பெருமாளை, தோளோடு தோளாக அரவணைத்துக் கூட்டிப் போனார் ராசய்யா.

ராஜா செல்லமுத்து