தேசிய கீதம்

அந்தப் பிரதானத் திரையரங்கில் புதுப்படம் ரிலீஸ் ஆனதால் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.
ஹவுஸ்புல்… என்ற வார்த்தை ரசிகர்களையும் பார்வையாளர்களையும் அலைக் கழித்தது.
‘சார் ஒரு டிக்கெட் கெடைக்குமா?’
‘இல்லங்க எல்லாம் ஹஸ்புல்… போர்டு பார்த்தீங்கள்ல’ என்று கொஞ்சம் கடினமாகச் சொன்னான் டிக்கெட் கிழிப்பவன்.
‘ஒண்ணே ஒண்ணு சார்…’
‘இல்லன்னு சொல்றேன்… பெறகு எப்பிடிங்க குடுக்க முடியும்’ மேலும் சீறினான்.
டிக்கெட் கவுண்டரை விட்டு கீழே இறங்கினான் பரத்.
‘சார், எந்தப் படத்துக்கு எத்தன டிக்கெட் வேணும்? என்றான் டிக்கெட் கவுண்டரைத் தாண்டி வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்பவன்.
‘ஒங்களுக்கு டிக்கெட் எப்பிடி கெடச்சது?’ பரத் குழம்பினான்.
‘இல்ல அங்க ஹவுஸ்புல்லுன்னு போர்டு போட்டிருக்கு. நீங்க எந்தப் படத்துக்கு எத்தன டிக்கெட் வேணும்னு கேக்குறீங்க’ அதான் கொழப்பமா இருக்கு!
‘இதெல்லாம் இங்க இப்பிடித்தான் நடக்கும்.. பொழைக்க வேணாமா சார்… அதுவும் இந்த ரிலீஸ் டைமுக்குத்தான் கொஞ்சமாவது காசு சம்பாரிக்க முடியும். இதுல ரூல்ஸ் பேசிட்டு இருக்கீங்க… டிக்கெட் வேணுமா? வேணாமா? பயமுறுத்தினான் பிளாக்கில் டிக்கெட் விற்பவன்.
‘ம்ம்… வாங்குவமா? வேணாமா? … முதல் காட்சி, ரிலீஸ் படம் பாக்குறது ஒரு சூப்பர் அனுபவம். சரி போனாப் போகட்டுமென முடிவு செய்து ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றான் பரத்…
‘சார் …. எல்லாரும் வரிசையா நில்லுங்க’
‘எதுக்கு? பரத் கேள்வியாய்க் கேட்டான்
‘எல்லாம், பீடி, சிகரெட், தம்… பிராந்தி குடிச்சிருக்காங்களான்னு செக் பண்ணி அனுப்புறாங்க’
‘ம்க்கும்… அனுப்பிட்டாலும் ஏங்க வாசல்ல அப்பிடி இப்பிடின்னு தொட்டு அனுப்பிச்சிர்ராங்க… இன்டர்வல் பிளாக்ல வந்து பாருங்க பொகை வண்டி மாதிரி புகுபுகுன்னு பொகையை விட்டுட்டு இருப்பானுக… இதுல செக்கப் பண்றாங்களாம். பெரிய செக்கப்பு… கடிந்தான் ஒரு சிகரெட் பிடிக்காத ரசிகன்.
வரிசையில் நின்று கொண்டிருந்த ஆட்களை செக்கப் செய்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பரத் தன் இருக்கையைத் தேடி உட்கார்ந்தான். சலசலவென்ற சத்தம் தியேட்டரை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது.
‘இங்க பாருங்க, செல்போனக் கண்டுபுடிச்சது கொடும… அதுல செல்வியக் கண்டுபுடிச்சது அதவிடக் கொடுமைங்க… எங்கயெல்லாம் செல்பி எடுக்குறானுகன்னு பாருங்க. இவனுகளுக்கு ஏதோ ஒரு சீக்கு இருக்குமுன்னு நெனைக்கிறேன். இல்லன்னா எந்நேரமும் செல்போன்லயே கெடப்பானுகளா? முட்டாப் பயக’ என்றான் ஒரு அறிவுஜீவி’
வெண் திரை விலகி விளம்பரங்கள் விரியத் தொடங்கின.
அவரவர் இருக்கைகளைச் சரிசெய்து உட்கார ஆரம்பித்தனர்.
“National Antham’ என்ற வார்த்தை வந்தபோது படபடவென ஆட்கள் எழ ஆரம்பித்தனர். ஒரே ஒருவன் பரத் மட்டும் தன் இருக்கையை விட்டு எழமலே உட்கார்ந்திருந்தான். எல்லோரும் தேசிய பக்தியயோடு ஒழுக்கமாக நின்றிருந்தார்கள். பரத் மட்டும் எழவே இல்லை.
தேசிய கீதம் முடியவும் ஒரு பெரியவர் பரத்தை எழுப்பினார்.
‘தம்பி… நீங்க என்ன தேசியத்துக்கு எதிரானவரா?
தேசிய கீதம் பாடும்போது எந்திரிக்க மாட்டீங்கிறீங்க. தப்பு தம்பி… தேசிய கீதம் பாடும்போது எந்திரிச்சு நிக்கிறது நம்ம நாட்டுக்கு செய்ற மரியாதை. நீங்க எந்திரிக்காம இருக்கிறது நம்ம நாட்டுக்கு செய்ற அவமரியாதை என்ற அவர் பேசிக் கொண்டிருந்தபோது முழு நீளத் திரைப்படம் ஓட ஆரம்பித்திருந்தது.
யோவ், ஒங்க நாட்டுப்பற்ற வேற எங்கயாவது போய்க் காட்டுங்க. நாங்க படம் பாக்கணும்ல என்றான் ஒருவன், ‘யோவ், இவன் தேசிய கீதம் பாடும்போது எந்திரிக்காம ஒக்காந்திட்டு இருக்கான். அவன கேள்வி கேட்டா, நீங்கெல்லாம் இதுக்கு சப்போர்ட் பண்ணனும்யா அத விட்டுட்டு, சினிமா அது இதுன்னு, வெறும் வேடிக்கையப் பாத்தே நாம ஒண்ணுமில்லாமப் போயிட்டோம்’ என்றார் பெரியவர்.
அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட ஆட்கள் எழ ஆரம்பித்தனர்.
‘யோவ் பேசாம படம் பாக்க மாட்டீங்களா?
‘முடியாதுய்யா’ முறுக்கினார் பெரியவர்.
‘ஒனக்கு என்னய்யா வேணும்?’
‘எனக்கு ஒண்ணும் வேணாம்யா. ‘இந்த நாட்டுக்கு மரியாதை வேணும்… தேசிய கீதம் பாடும்போது இவன் எந்திரிச்சு நிக்காம இருக்கான். அதக் கேட்டா இப்பிடிக் கோவிச்சுட்டு இருக்கீங்க’ என அந்தப் பெரியவர் பேசப் பேச திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
‘யோவ், ஏன்றா படத்த நிப்பாட்டுனீங்க? என்ற கூச்சல் குழப்பம் திரையரங்கை நிறைத்துக் கொண்டிருந்தது.
‘பரத் பாவமாக விழித்துக் கொண்டிருந்தான்’
‘முழிக்கிறான் பாரு செய்றதும் செஞ்சிட்டு, இவனையெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில உள்ள தள்ளணும்ங்க’ என்று அந்தப் பெரியவர் கத்தக் கத்த தியேட்டர் உள்ளே போலீஸ் உள்ளே நுழைந்தார்கள்.
‘என்னங்க இங்க பிரச்சனை?’
‘இவன் தாங்க தேசிய கீதம் பாடும்போது எந்திரிச்சு நிக்காம இருந்தது’ என பரத்தைக் காட்ட பரத் எழுந்தான்.
‘ஆமாங்க, நான் எந்திரிக்கல தான் . இந்த நாட்டுல எது சார் சரியா நடக்குது, எல்லாமே தப்பு தப்பாதான் நடக்குது.
‘ஹவுஸ்புல்லுன்னு போட்டுட்டு ப்ளாக்குல டிக்கெட் விக்கிறான். உள்ள வரும்போது செக்கப் பண்றாங்க. இன்டர்வல்ல சிகெரட் குடிக்கிறான். குடிக்கிறது தப்புன்னு சொல்லி சப் டைட்டில் போட்டுட்டு எல்லா அட்டூழியமும் பண்றானுக. நாடு எனக்கு என்ன பண்ணிச்சு சார்’ எல்லாமே பிராடு, பித்தலாட்டம் என்றான் பரத்.
போலீஸ் அவனை எதுவும் செய்யவில்லை.
‘தம்பி, தேசிய கீதம்ங்கிறது நம்ம நாட்டப் பத்தி உயர்வா பாடுறது. இது நம்ம நாட்ட யாரு ஆட்சி செய்றாங்கன்னு நெனச்சிட்டு, அவங்க மேல வெறுப்புக் காட்டுறதில இல்ல’ இனிமே தேசிய கீதம் பாடும்போது எந்திரிச்சு நில்லுங்க’ எல்லாரும் ஒக்காருங்க, படத்தப் போடுங்க’ என்று போலீஸ் சொல்லவும் மீண்டும் படம் ஆரம்பமானது.
அந்தப் பய சொல்றது சரிதான், ஆனா, நடைமுறைக்கு எதுவும் ஒத்து வராது. தேசிய கீதம்ங்கிறது நம்ம நாட்டோட உரிமை, பெருமை’ என்று சொல்லிக் கொண்டிருந்த போது அந்த இன்ஸ்பெக்டரின் மொபைல் அலறியது.
‘ஹலோ’
‘இன்ஸ்பெக்டர் சாருங்களா?’
‘ஆமா’
‘சார் வெற்றித் தியேட்டர்ல ரெண்டு பேரு, தேசிய கீதம் பாடும்போது எந்திரிச்சு நிக்கிலன்னு பிரச்சனை வருது சார்’ சீக்கிரம் வாங்க என்ற செய்தி வரவும் இன்ஸ்பெக்டர் தலையைச் சொறிந்து கொண்டு வெற்றித் தியேட்டரை நோக்கி விரைந்தார்.

ராஜா செல்லமுத்து