ஏறும் வழி

‘முனிவேல் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்.’
‘ம்ஹுக்கும் பஸ் வந்த பாடில்லை’
‘வந்தா ஒன்னுக்கு பின்னால ஒன்னா வருவானுக. வரலன்னா சுத்தமான வரமாட்டானு’ என்று புலம்பியவாறே நின்று கொண்டிருந்தார் முனிவேல். அவரால் நிற்கவே முடியவில்லை. அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டும் ஆடிக்கொண்டும் நின்று கொண்டிருந்தார். பெரியவர் என்றும் பாராமல் அவரை உட்காரவிடாமல் ஒரு கூட்டம் பேருந்து நிறுத்த இருக்கையில் இறுக்கமாக, நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள்.
‘இப்பவெல்லாம் வயசுக்கு ஒரு மட்டு மரியாதை இல்லீங்க. முன்னையெல்லாம் பெரியவங்களைப் பாத்தா நாங்கெல்லாம் சட்டுன்னு எடம் குடத்து ஒக்காரச் சொல்வோம். இல்ல பட்டுன்னு எந்திரிச்சிருவோம். ஆனா இன்னைக்குள்ள பசங்க மரியாதைன்னா என்ன வெலைன்னு கேக்குறானுக. காலம் கலிகாலமாயிப்போச்சு. என்றபடியே நின்று கொண்டிருந்தார்.
பஸ் வர நேரமானதால் கூட்டம் மேலும் மேலும் கூடிக் கொண்டே போனதேயொழிய குறைந்தபாடில்லை.
என்னங்க பஸ் வருமா?
‘வரும், ஆனா வராது வடிவேல் காமெடியில் ஒரு பதில் சொல்லிக் கொண்டு நின்றிருந்தார்.
‘கூட்டம் கூடக்கூட முனிவேலுக்கு முட்டி வலித்தது.
‘ம்ஹுக்கும் பஸ் வந்தாலும், நாம ஏற முடியாது போல’ புலம்பியவாறே நின்று கொண்டிருந்தார். ஒரு வழியாக அவர் செல்லும் வழித்தடப் பேருந்து வந்து சேர்ந்தது. கூடவே இன்னொரு பேருந்தும் அதே வழித்தடத்தில் செல்வது வந்து சேர்ந்தது.
ஒரு பேருந்தில் கூட்டம் மொத்தமும் ஏற, இன்னொரு பேருந்து கொஞ்சம் காலியாகவே இருந்தது. பேருந்தின் முன்பாதை வழியாக ஏறி குடுகுடுவென ஓடிப் போய் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
‘டிக்கெட்… டிக்கெட்… கண்டக்டர் கத்தியபடியே இருந்தாரேயொழிய யாரிடமும் வந்து சீட்டு வாங்கவில்லை.
‘டிக்கெட்… டிக்கெட்… மேலும் கூவிக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழாமலே இருந்தார். ஒரு சிலர் தங்களுக்கான டிக்கெட்டை ஆட்கள் மூலமாக பாஸ் செய்து வாங்கிக் கொண்டனர். மூச்சு முட்ட முட்ட நின்று கொண்டிருந்த முனிவேல், பஸ்ஸில் இடம் கிடைக்கவும் ‘உஷ்’ என உட்கார்ந்து கொண்டார்.
அவர் யாரிடமும் கொடுத்து தனக்கான சீட்டை வாங்கவில்லை. கண்டக்டர் முனிவேலைக் குறி வைத்துப் பார்த்துக் கொண்டே டிக்கெட்… டிக்கெட்… டிக்கெட்… எனக் கத்தினார்.
‘ஒரு எக்மோர்’ சீட்டில் உட்கார்ந்தபடியே முனிவேல் குரல் கொடுத்தார்.
‘பாஸ் பண்ணி விடுங்க’ எதிர் குரல் கொடுத்தார் கண்டக்டர்.
‘நீங்க எந்திரிச்சு வாங்க’ கண்டக்டருக்கு எதிர்குரல் கொடுத்தார் முனிவேல்’.
‘ஏன் நீங்க பாஸ் பண்ணி விட மாட்டீங்களோ?’
‘ஏன் நீங்க வந்து டிக்கெட் எடுக்க மாட்டீங்களோ?’ இருவருக்குமான வாக்குவாதம் கூடியது.
பெரியவரே குடுங்க, நான் டிக்கெட் எடுத்துத் தாரேன்’ என்றான் முனிவேல் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இளைஞன்.
இல்ல தம்பி, கண்டக்டர் இங்க எந்திரிச்சு வரட்டும். அவங்களுக்கு அதுக்குத்தான சம்பளம் குடக்கிறாங்க. இந்த டவுன்ல தான் தம்பி, இந்த கண்டக்டர்க இப்பிடி வேல செய்றாங்க. எங்க கிராமத்திலயெல்லாம் எவ்வளவு கூட்டம்னாலும் உள்ள வந்து தான் டிக்கெட் எடுப்பாங்க. அதுக்கு காரணம் பேசன்சர் டிக்கெட் எடுக்கலன்னா கண்டக்டருக்கும் சேத்துதான் பைன் போடுவாங்க. ஆனா, இங்க தான் பேசன்சருக்கு மட்டும் தான் பைன் போடுறாங்க. அதுனால தான் இவ்வளவு தெனாவட்டா ஒக்காந்திருக்காங்க, என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முனிவேல் அருகே வந்தார் கண்டக்டர்.
‘ஏங்க ஒங்களுக்கு மட்டும் தனியா டிக்கெட் எடுக்கணுமா?
‘ஆமா’ என்றார் முனிவேல்.
‘என்ன ரூல் பேசுறியா’
‘ஆமா’ என்று மேலும் பேசினார்.
பெரிய மனுசனா இருக்க. இல்லன்னா நடக்கிறதே வேற’
‘ஏய்யா ரெண்டு, மூணு மணிநேரத்துக்கு ஒரு பஸ் விடுவீங்க. கேட்டா ரூல்ஸ் பேசுவீங்க. பஸ்ல ஆள் கூட்டம் இல்லையில்ல. எந்திரிச்சு வந்து டிக்கெட் எடுக்க மேல் வலிக்குதா? முனிவேல் மேலும் சாடினார்.
‘ஆமா இது என்ன வழின்னு தெரியுமா? எறங்குற வழி. அதுல ஏறி ஒக்காந்திட்டு ரூல்ஸ் பேசுற. நீ நியாயமா ஏர்ற வழியில ஏறி என்கிட்ட டிக்கெட் எடுத்திட்டுத் தான சீட்டுல ஒக்காரணும். நீ பேசாம முன்னாடி ஏறி ஒக்காந்தா என்னா அர்த்தம். டிக்கெட் எடுத்திட்டுத்தான வந்து ஒக்காரணும்’ கண்டக்டர் பேச
ஏய்யா கண்டக்டரே… நீ ஒக்காந்த எடத்திலயே ஒக்காந்திட்டு எந்திரிக்காம டிக்கெட் எடுக்கணும்னா நீ ஒக்காந்திருக்கிற எடத்தில ஒரு ஊனமுற்ற ஆளப் போடலாமே. ஒன்னைய ஏய்யா கண்டக்டரா போடணும் என்று விளாசினார் முனிவேல்.
அந்த ரூல்ஸ் எல்லாம் எங்ககிட்ட பேச வேணாம்.
நாங்க அப்பிடித்தான் ஒக்காருவோம். டிக்கெட் எடுக்கச் சொன்னா எடுத்துத் தான் ஆகணும்’. கண்டக்டரும் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். வாக்குவாதம் முற்றிக் கொண்டே போனது. இருவரும் விடுவதாக இல்லை.
‘சார் விடுங்க… அவரு தான் பெரியவர் பேசுறாருன்னா நீங்களும் பேசணுமா? பேச்ச விடுங்க என்று ஒருவர் சமாதானம் சொல்ல அதையும் கண்டக்டர் எடுப்பதாத் தெரியவில்லை.
முனிவேல் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்.
‘டிக்கெட் எடுக்குறீங்களா?’
‘ம்’
என பணத்தைக் கொடுத்தார். பணத்தை வாங்கிய கண்டக்டர் இறங்கும் வழியில் மல்லாந்து விழப் போனார். அங்கே கூடி நின்றிருந்த ஆட்கள், ஓடிப்போய் கண்டக்டரைத் தூக்கிக் காப்பாற்றினார்கள்.
உயிர் பிழைத்த திருப்தியில் முழியாய் முழித்தார் கண்டக்டர்.
‘ரொம்ப நன்றிங்க’ கையெடுத்துக் கும்பிட்டார்.
நன்றி எங்களுக்கு சொல்லாதீங்க, நீங்க இந்நேரம் வரைக்கும் திட்டிட்டு இருந்தீங்களே, அந்த பெரியவருக்குச் சொல்லுங்க’ என்றதும் கண்டக்டர் பெரியவரைப் பார்க்கத் திராணியில்லாமல் தலையைக் கீழே கவிழ்ந்தார்.
‘தம்பி, எந்தப் பக்கம் ஏறி வாராங்கங்கிறது முக்கியமில்ல. நம்மோட வேலைய சரியாச் செய்றமாங்கிறது தான் முக்கியம். இப்பக் கூட நீங்க இந்தப் பாதை வழியா விழக் கூடாதுன்னு நெனச்சு ஒங்கள காப்பாத்தல ஒரு மனுச தர்மம், இனிமே கூட்டம் இல்லன்னா எந்திரிச்சு வந்து டிக்கெட் குடுங்க. அது தான் ஒங்களோட வேல. அத விட்டுட்டு ரூல்ஸ் பேசாதீங்க. முடியாதவங்க நெறயாப் பேரு பஸ்ல ஏறுவாங்க. இனிமே இந்தத் தப்பச் செய்யாதீங்க என்று ஒருவர் திட்டியபோது கண்டக்டர் பலமாக தலையசைத்து அதை ஆமோதித்தார்.
முனிவேல் பேசாமல் ஒட்கார்ந்திருந்தார். அன்று முதல் கண்டக்டர் இருக்கையில் உட்காருவதைத் தவிர்த்தார் அந்தப் பேருந்தின் கண்டக்டர்.
அவர் இப்போதெல்லாம் ஏறும் வழி, இறங்கும் வழி என்று எதையும் யாரிடமும் சொல்வதில்லை.
பயணிகளைத் தேடிப் போய் டிக்கட் கொடுத்து காசு வாங்குகிறார்.

ராஜா செல்லமுத்து