எழுத்து, பேச்சு, கவிதையில் வலம் வரும் நிபுணர்

‘பன்முகக் கலைஞன்’ மன்னை பாசந்தி

எதிரில் நின்று பேசுகிறபோதே, மெனக்கெட வேண்டும் என்பதேயில்லை, எதுகையும், மோனையும் சர்வசாதாரணமாக வந்து விழக்கூடிய நல்ல கவிஞர் – கட்டுரையாளர் – ஆன்மீக சொற்பொழிவாளர் – கணினி கையாளும் நிபுணத்துவம் பெற்றவர். எல்லாம் தெரியும், ஆனால் எதுவுமே தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் சுபாவக்காரர்.
காலம் தவறாமை, கண்ணியம், கடின உழைப்பு ஆகியவற்றிக்கு பெயர் பெற்றுத் திகழ்வது, ஆலமரமாய் உலகளாவிய அளவில் உயர்ந்து நிற்பது, டி.வி.ஸ் நிறுவனம். அதன் சார்பு நிதி நிறுவனத்தின் (சுந்தரம் பைனான்ஸ்) கணிப்பொறி அமைப்பில் தனிப்பெரும் பங்கேற்று நல்லுழைப்பு நல்குபவர் பா. சந்தானம்.
“நாணயம்” சார்ந்த நிறுவனத்தில் நற்பணியாற்றும் இந்த இலக்கிய அன்பரின் உரையாடல்களில் “நா” நயம், எழுதும் எழுத்தில் கவிநயம், இதுவே இவரின் தனிச்சிறப்பு பெறும் சிறப்பு.
இவர் எழுதும் எழுத்தில் எளிமை, புலமை, வளமை, இதுவே இவரது மகிமை, இவருக்கென்றே அபிமான வாசகர் வட்டமும் உண்டு.
எழுதிவரும் “பாப்பா பாட்டு”, சொல்லுக்குள் சொல், “துளிப்பா” ஆகியவை அனைவராலும் பாராட்டப்படுபவை. இவர் எண்ணங்களில் உதித்த அற்புத ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் வெகுச்சிறப்பான (ஹைக்ளாஸ்) கவிதைகள் என்று இலக்கிய வட்டாரத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் ‘பன்முகக் கலைஞர்’ மன்னை பாசந்திதான் ‘மக்கள் குரலின்’ இன்றைய சிறப்பு விருந்தினர்.
* மன்னை பாசந்தி என்ற புனைப்பெயர் எப்படி?
மன்னார்குடி பார்த்தசாரதி சந்தானம் (ஊர் பெயர், – அப்பா பெயர் – என் இயற்பெயர்) – இம்மூன்றும் சேர்ந்தது தான் மன்னை பாசந்தி என்ற எனது புனைப்பெயர்.
* ஆன்மீகம், இலக்கியப் ப்ரவேசம் பற்றி….
மயிலை இராமகிருஷ்ண மாணவர் இல்லத்தில் 1971 முதல் -1975 வரை படித்தபோது எனக்குள் தோன்றிய கருத்துக்களை மனப்பந்தல் வரிகளாக எழுதி வந்தேன். படிக்கும் காலத்தில் நான் கவிஞனாவேன் என்று நினைக்கவில்லை. எனது தகப்பனார் சங்கீத சாகித்ய வித்வான் – 500 பாடல்களை ஒன்பது நூல்களாக வெளியிட்டுள்ளார். அவர் பாடிய பல பாடல்களைக் கேட்ட அனுபவமும் கூட. என்றென்றும் பசுமை நினைவுகள். இலக்கிய உலகில் எழுத்தாளனாக,- மேடைப் பேச்சாளனாக,- கவிஞனாகக் – கட்டுரையாளாக வலம் வருவது எனது குருவருள், திருவருள்.
மானசீக குருவாக மறைந்த எனது தகப்பனார் ரா.பார்த்தசாரதி அய்யங்காரும் – வளர்த்த குருவாக அமரர் ஸ்ரீரங்கம் பல்லவி நரசிம்மாசாரியாரும், – அபிமான குருவாக உள்ளகரம் கோபாலகிருஷ்ண பாகவதரும், எனது படைப்புக்களுக்கு பக்காபலம்.
2010ல் இலக்கிய குரு புதுக்கோட்டை பி.வெங்கட்ராமன் (பி.வி) தான் என்னுள் இருந்த ஆன்மீக இலக்கிய பண்புகளை மற்றும் ஆற்றலைக் கண்டுபிடித்து அதனை இலக்கிய உலகம் அறியும்படி பிரபல்யமாக்கியவர். பி.வியின் மாணவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். கலைமாமணி நாவேந்தர் நாகை முகுந்தன் ஆன்மீககக் குருவாக என்னை வழி நடத்துகிறார். இதுவே எனது இலக்கியப் பிரவேசத்திற்கு முக்கியத் தூண்டுகோலாய் அமைந்தன.
சென்னையில் கவிமாமணி இளையவனது இலக்கியச் சாரலில் 2009ல் இணைந்தேன். 2010 பிப்ரவரியில் நங்கநல்லூர் டாக் என்ற வார இதழில் என்னைப் பற்றி அறிமுகம் முதன் முதலில் வெளிவந்தது. 2010 மார்ச் மாதம் பாரதியார் பற்றிய எனது கவிதை – 80 வருடத்திற்கும் மேலான பாரம்பரியமிக்க கலைமகள் மாத இதழில் வெளி வந்தது. கலைமகள் ஊக்கப் பரிசும் கிடைத்தது. சென்னையில் உள்ள பல இலக்கிய அமைப்புகளில் கவிதை வாசிக்கும் பழக்கம் உண்டானது. பல இலக்கிய நண்பர்களுடன் தொடர் நட்பும் உருவானது.
பாசந்தி இராமாயணம், – பாசந்தி பாகவதம் – நூற்றியெட்டு திருத்தல மணிமாலை-, பாசந்தி கோபாலம் (மன்னார்குடி) திருவடிசூலம் போன்ற ஐந்து ஆன்மீக நூல்களை அடுத்தடுத்து வெளியிட்டேன். அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது. மலேசியா திருப்பீடம் – ஆத்ரேயா, ஜனக்கல்யாண் செய்தி மடல் போன்ற தான இதழ்களில் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது.
மரபுக் கவிதை, புதுக் கவிதை, தொடர்ந்து தற்போது மிகவும் பிரபல்யமாகி வரும் ஹைக்கூ என்கிற துளிப்பாவில் துளித்துளி நிலா, மின்னல் துளிப்பா, சிறு துளியில் சிகரம் போன்ற மூன்று நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டேன். இந்த மூன்று நூல்களுக்கும் பரிசு கிடைத்ததது மட்டுமல்லாது சிறந்த ஹைக்கூ கவிஞர் விருதும் கிடைத்தது. இந்த மூன்று நூல்களும் முனைவர் மரியா தெரசாவால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் ஆன்மீகத்தில் யதிராஜர் துளிப் பாமாலை (அவரது 1000ம் ஆண்டையொட்டி) வெளியிட்டேன். வெளியிட்டதும் இராமானுஜர் விருதும் கிடைக்கப்பெற்றேன். ஆன்மீகத்தில் முதல் துளிப்பா நூல் மற்றும் யதிராஜருக்கு முதல் துளிப்பா நூல் என்ற பெருமை கிடைத்தது.
* இதுவரை கிடைத்த விருதுகள் பற்றி…
கவிஞனுக்கும் கலைஞனுக்கும் பாராட்டு என்பது தாலாட்டு. விருது என்பது விழுது மென்மேலும் படைப்புகளைப் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதால் கவிஞனும் கலைஞனும் பாராட்டப் படுகின்றனர்.
2001ல் கவிநயச் செல்வர் என்ற விருது கிடைக்கப் பெற்றேன். 2010ல் வண்ணப் பூங்காவின் பைந்தமிழ் பாவலர், தென்னிந்திய கல்சுரல் அகாடமியின் சேவா ரத்னா மற்றும் ஆன்மீகத் திலகம், கார்முகிலோனின் சிறந்த ஹைக்கூ கவிஞர், கலைமாமணி ஏர்வாடியார் கவிதை உறவின் மனித நேயச் செல்வர், கவிமாமணி எதிரொலி விசுவநாதன் பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் நாநய மாமணி, 2014ல் கார்முகிலோனின் சிறந்த ஹைக்கூ நூல் விருது, கவி ஓவியாவின் படைப்பாளி விருது மற்றும் பைந்தமிழ் கவி 2015ல் தமிழ் இலக்கிய மாமணி, இலக்கியச் சாரல் அமரர் லட்சுமி ரமணாவின் சிறந்த நிறுவனர் விருது 2016ல் சிவநேயப் பேரவையின் நற்கருணை மாமணி, 2017ல் ப்ரத்யங்கரா அமைப்பின் இராமானுசர் விருது போன்ற 25 விருதுகள் பெற்றுள்ளது எனது இறைப்பணி -– இசைப்பணி -– இலக்கியப்பணி –- இதழியில் பணி, இனிய சமுதாயப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள்.
* தங்களுடைய அமைப்பு பற்றி…
என்னுடன் படித்த மயிலை இராமகிருஷ்ண இல்லத்து சக மாணவர்கள் உதவியுடன் எனது தகப்பனார் பெயரில் மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட்டினை 2010ல் ஆரம்பித்து இதுவரை 50க்கும் மேற்பட்ட பல்துறை சான்றோர்களுக்கு விருதுகள் அளித்துப் பாராட்டியுள்ளோம். மேலும் ஐந்து வாழ்நாள் சாதனையாளர்களையும் கவுரவித்துப் பாராட்டியுள்ளோம். டிரஸ்டின் சார்பாக ஆன்மீக மற்றும் இலக்கிய நூல்களை இலவசமாக வெளியிட்டு வருகிறோம். பல எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், கவிதையாளர்களையும், கட்டுரையாளர்களையும் இனம் கண்டு இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்யும் பணியும் தொடர்கின்றன.
பாரதிக் கலைக்கழகத்தின் நிறுவனர் சொல்லின் செல்வர் பாரதி சுராஜின் அன்பு கட்டளைக்கிணங்கி விருதுகள் பெறுவதை குறைத்துக் கொண்டு நிறைய படைப்புக்களை வெளிக்கொணர வேண்டுமென்பதே எனது அவா.
வருகின்ற நவம்பரில் எனது முதல் இலக்கியத் தொகுப்பாக முக்கனிகள் (கதை- – கவிதை- – கட்டுரை) வெளிவர இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு நூல்கள் வீதம் (ஆன்மீக மற்றும் இலக்கியம்) வெளியிட இருக்கிறேன். தேசிகர் துளிப்பாமாலை, கம்பர் துளிப்பாமாலை, – திருவள்ளுவரும் திருக்குறளும், – பாப்பா பாட்டு, மனப்பந்தல் ,- சொல்லுக்குள் சொல், கர்நாடக இசை நூல் போன்ற கைவசம் உள்ள பத்துக்கும் மேற்பட்ட படைப்புக்கள் வெளிவர உள்ளன.
எனது தகப்பனார் சாகித்ய கலா பூஷணம், – சுநாதகான – சங்கீத சாகித்ய வித்வான் அமரர் மன்னார்குடி ரா.பார்த்தசாரதி அய்யங்காரது நெடுநாளைய கனவைப் பூர்த்தி செய்யும் விதமாக அவரது 500 இசைப் பாடல்களையும் ஒரே நூலாகத் தொகுத்து வருகிறேன். அவரது இசை நூல்களை ரம்யா சுரேஷ் ஆய்வு செய்து வருகிறார்.
எனது மூத்தமகன் கார்த்திக் சந்தானம் டெல்லி பி.சுந்தர்ராஜிடம் இசை பயின்று வருவதுடன் எனது தகப்பனார் பாடல்களையும் பாடி வருவது உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி. எனது தகப்பனாரின் கர்நாடக இசைப் பாடல்களை இசை விற்பன்னர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் பாடி மகிழ வேண்டுமென்பதே அவரது ஆசை. என்னுடைய அவாவும் கூட. அதற்கான முயற்சியினை தற்போது தீவிரமாக மேற்கொண்டுள்ளேன்.
2027ல் அவரது நூற்றாண்டு விழாவிற்குள் அன்னாராது பாடல்கள் எல்லோராலும் பாடப்பெறும் என்பது உறுதி.
இறைப்பணி, – இசைப்பணி, – இலக்கியப்பணி, – இதழியல் பணி, – இனிய சமுதாயப் பணி இவ்வைந்தும் இனிதே தொடர்ந்திடுமென் இறுதி மூச்சுவரை’’ சொல்லி நிறுத்தினார் மன்னை பாசந்தி.
” ஜன்னலைப் போன்ற திறந்த மனது. மின்னலைப்போன்ற ‘பளிச்ச்சிடும்’ எழுத்து’’ என்று இரட்டை வாக்கியத்தில் மன்னை பாசந்தியை அறிமுகப்படுத்தினாரே ‘குழந்தை இலக்கியச் செல்வர்’ பி. வெங்கட்ராமன், அவர் எப்படி, எழுத்து எப்படி என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டார்.
– வீ.ராம்ஜீ