மதம் மாறி காதல்

“மோசஸ்”
நீங்க கிறிஸ்டினா?
” இல்ல”
“அப்பெறம் …மதம் மாறுனீங்களா? ’’இதைக் கேட்டதும் மோசஸ்  சன்னமாகச் சிரித்தான்.
சொல்லுங்க சார் மதம் மாறுனீங்களா?
ஆமா என்பதைப் போல் தலையாட்டினான்.
ஜீசஸ் …. காட்… எது தான் சார் உண்மையான கடவுள். இது எல்லாருக்கும் தெரிய மாட்டீங்குது. நீங்க ஒங்க மனசுக்கு தெரிஞ்சதால மதம் மாறிப்பீங்க.இங்க நெறயா மனுசங்களுக்கு இது தெரியமாட்டீங்குது. ஏசு தான் உண்மையான கடவுள் என அடுக்கிக் கொண்டே போனார் காபிரியேல்.
இது எதற்கும் மோசஸ் பதில் சொல்லவே இல்லை.
என்ன சார் இவ்வளவு சொல்றேன் ;எதுவும் பேசமாட்டீங்கிறீங்க?
ஒண்ணுல்ல சார்,
என்ன சார்… ஏசுவ நம்பித்தான மதம் மாறுனீங்க. அதற்கும் சிரித்தான் மோசஸ்.
என்ன சார் எல்லாத்துக்கும் சிரிப்பு தானா? என்ன, என்ன சார் பண்ணச் சொல்றீங்க?
நீங்க ஒரு மதத்தில இருந்து இன்னொரு மதத்துக்கு மாறுனது பெரிய விசயம் ; ஒரு சாட்சி தான சார்.
ஒங்கள மாதிரி ஆளுக நிறைய மதம் மாறுனா, ஏசு ரொம்ப சந்தோசப்படுவார் என்று எச்சில் வழிய வழியப் பேசிக் கொண்டிருந்தார் காபிரியேல்
சார் நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களா?
இல்லை என்றே தலையாட்டினான்.
நம்ம மதத்தில் நிறை பொண்ணுங்க இருக்காங்க சார். பயப்படாதீங்க ;ஒங்களுக்கு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
“ஐயய்யோ வேணாம் சார்’’
ஏன்?
‘‘எனக்கு கல்யாணமே வேணாம்”
என்ன சார் சொல்றீங்க?
” ஆமா சார்”
“கல்யாணம் பண்ணாத வாழ்க்கை எப்படி சார்.. ’’ஒரு இழு இழுத்தார் காபிரியேல்
இந்த காதல் கல்யாணம் இதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல சார்.
என்ன சார் ரொம்ப அடி பட்டுட்டீங்க போல
இதற்கு மோசஸ் மெல்லச் சிரித்தான்.
எல்லாாத்துக்கும் ஒங்களுக்கு சிரிப்பு தான் சார்
சார் ஒண்ணு சொன்னா சொல்லு வீங்களா?
சொல்லுங்க சார்
நீங்க இதுக்கு முன்னாடி என்ன பேர்ல இருந்தீங்க? பளிச்செனக் கேட்டார் காபிரியேல்
ஏன் சார்?
சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான், சுப்ரமணி, பாலசுப்பரமணி தான் என்னோட ஒரிஜினல் பேர்
ஓ சூப்பர் சார்.
எங்க மதத்த ஏத்திட்டு மாறிட்டீங்களா? என்று  காபிரியேல் சொன்னதும் அதற்கு சிரித்தான் மோசஸ்.
என்ன சார் சிரிப்பு ;உண்மையச் சொல்லுங்க.
நீண்ட பெருமூச்சுவிட்ட மோசஸ் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
நீங்ன நெனைக்கிற மாதிரி மதத்த பாத்து நான் மதம் மாறல சார்.. ஒரு மனசப் பாத்து மதம் மாறுனேன், என்று கொஞ்சம் கண்ணீரோடு பதில் சொன்னான் மோசஸ்.
சார் என்ன சொல்றீங்க?
ஆமா சார் கடவுள் சொல்லாதத காதல் சொல்லுச்சு சார்.
விக்டோரியா என்னோட விக்டர் . என்னோட கல்லூரித் தோழி. அவன்னா எனக்கு உசுரு சார்.
அவள விட்டு ஒரு நிமிசம் கூட நான் பிரிஞ்சிருக்க மாட்டேன் . அவளோட உள்ளங்கை தான் என்னோட ஒலகம். அவளோட கை ரேகை தாான் என்னோட அட்ச ரேகை – தீர்க்க ரேகை . விக்டோரியா இல்லாம என்னோட ஒலகம் கொஞ்சம் கூட நகராது சார்.  மதம் ரெண்டு மனங்களையும் சேத்துச்சு . எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லாம எங்க காதல் வளந்திச்சு . சிலுவையும் சூலமும் எங்க காதலுக்கு குறுக்க வரல . ரெண்டு பேரும் உசுருக்கு உசுரா காதலிச்சோம் சார்.
ஒருதாள்…..
சுப்ரமணி
ம்
நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?
ஆமா … ஏன் இவ்வளவு டவுட்டா கேக்குற?
இல்ல காதலுக்கு மதம் ஒரு தடையில்ல.
ம். கல்யாணத்துக்கு .
அது பெரிய தடையா இருக்கும் சுப்ரமணி .
அதுக்கு?
அதுக்கு நீ மதம் மாறணும் என்ன சொல்ற?ஆமா சுப்ரமணி
நீ மதம் மாறுனாத் தான், நாம ரெண்டு பேரும் எந்த பிரச்சினையுமில்லாம கல்யாணம் பண்ண முடியும்?
என்ன சொல்ற .
‘‘விக்டர் உண்மையச் சொல்றேன். எங்க வீட்டுல இதுக்கு சம்மதிப்பாங்களா?
நான் முக்கியமா ஒங்க வீடு முக்கியமா ? என்றான் சுப்ரமணி.
நீ தான்
அப்படின்னா நான் சொல்றபடி கேளுங்க
சரி
இப்படி என்னோட விக்டருக்காக என்னோட அப்பா அம்மா சம்மதம் இல்லாமக் கூட மதம் மாறுனேன்.
அப்பெறம் என்னாச்சு.
ரொம்பவே ஆவலாய்க் கேட்டான் காபிரியேல் .
அப்பெறம் நான் மதம் மாறவும் விக்டர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு படிக்கப் போனா . அவளுக்காக நான் காத்திருந்தேன்.
அப்புறம்…
அப்புறம் என்னங்க…
பணத்துக்கு முன்னாடி என்னோட காதல் பஞ்சு பஞ்சாப் போச்சு.
என்ன சொல்றீங்க மோசஸ் .
ஆாம சார் வெளி நாட்டுல படிச்சு முடிச்சிட்டு திரும்பி வரும் போது என்னோட விக்டர் ஒரு பணக்கார ஆளோட கல்யாணம் பண்ணிட்டு வந்தா ள்….
‘‘நான் கேட்டேன். என்ன விக்டர் நம்ம காதல் பொய்யா?’’
அட நீங்க ஒண்ணு காதலும் கல்யாணமும் கொஞ்ச நாளைக்குத் தான் சுகமா இருக்கும் .ஆனா பணம் இருந்தா கடைசி வரைக்கும் சந்தோசமா வாழலாம். ஒங்க காதலவிட நான் கட்டிட்ட வரோட பணம் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு .டேக் இட் ஈஸி மோசஸ். ஸாரி சுப்ரமணின்னு சொல்லிட்டு போயிட்டா என்று தான் ஒரு பெண்ணிடம் ஏமாந்த கதையை கொஞ்சம் அழுகையோடு சொன்னான் மோசஸ்
ஸாரிங்க
ஏன்?
நீங்க எங்க மதம் புடிச்சுப் போயி தான் மாறிட்டீங்கன்னு நெனச்சேன் … ஸாரி
என மறுபடியும் காபிரியேல் சொன்னார் .
ஒங்களுக்கு என்ன தெரியுங்க .தெரியாமக் கேட்டுட்டீங்க
சார்….
சொல்லுங்க
நீங்க மறுபடியும் மதம் மாறுவீங்களா? கேட்டார் காபிரியேல் மனுசி பண்ணுன தப்புக்கு மதம் என்னங்க
பண்ணும் . இல்லங்க நான் மறுபடியும் மதும் போறதில்ல. இப்ப எனக்கு எந்த மதமும் எந்தப் பேரும் தனியா இல்ல மனுசன் அப்படிங்கிற ஒரே மதத்தில் தான் இருக்கப்போறேன் என்றார் மோசஸ்
காபிரியேலின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தது போல இருந்தது.

ராஜா செல்லமுத்து