விஜயதசமி வித்யாரம்பம் குழந்தைகளை நெல்மணிகளில் ‘அ’ எழுத வைத்தனர்

சென்னை, செப்.30–
இன்று விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ஓம்’ மந்திரத்தை நாவில் எழுதியும், நெல் தானியத்தில் குழந்தையின் கைகளால் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தும் ஆரம்பக்கல்வி தொடங்கி வைக்கப்பட்டது.
சரஸ்வதி பூஜை முடிந்ததும் இன்று விஜயதசமி நாளில் குழந்தைகளை ஆரம்பப் பள்ளியிலும், வாய்ப்பாட்டு, நடனம், வாத்தியக்கருவிகள் வாசித்தல்-– ஆகிய வகுப்புகளிலும் சேர்க்கும் நன்னாள்.
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தையை மடியில் உட்கார வைத்து ‘ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ’ என்று குழந்தையின் கை பிடித்து அரிசியிலும், நெல்மணியிலும் எழுதினார்கள். ‘ஹரி’ என்றால் அது ஆண்டவனைக் குறிக்கும். ‘ஸ்ரீ’ என்றால் செல்வம். சுபீட்சத்தைக் குறிக்கும். கோவிலின் குரு, குழந்தையின் நாக்கில் மெல்லிய தங்க ஊசியால் ‘அ’ என்றும் ‘ஓம்’ என்றும் எழுதி அட்சராட்பியாசத்தை துவக்கினார்.
புத்தாடை அணிவித்து குழந்தைகளை பெற்றோர்கள் இன்று காலை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.
அதன்பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நிரப்பப்பட்ட நெல்மணிகளில் குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு ‘அ’ என்னும் எழுத்தையும் ‘ஓம்’ என்னும் எழுத்தையும் எழுத வைத்தனர்.