பானை

சிறுகதை (ராஜா செல்லமுத்து)

கிருஷ்ணசாமி மண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார்.
‘ம்… இந்த மண்ணு பானையாகி என்னத்துக்கெல்லாம் போகப் போகுதோ என்று மனதில் நினைத்தபடியே சதக்… சதக் என மிதித்துக் கொண்டிருந்தார்.
மண் ஒரு கட்டத்தில் மாவாய்  மாறியிருந்தது.
‘இது சரியா இருக்குமுன்னு நெனைக்கிறேன்’ என்றபடியே பானை செய்ய ஆரம்பித்தார். மண், பானையாய் உருவம் மாறிக் கொண்டிருந்தது. மண் பிள்ளைகள் பானை உருவமாய் மாறியதில் கிருஷ்ணசாமியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி அப்பிக் கிடந்தது.
எவ்வளவோ வருடங்களாய் பானை செய்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாள் பானை செய்யும்போது ஒவ்வொரு விதமாய் பிறவி எடுப்பார் கிருஷ்ணசாமி.
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளை உருவம் செய்து நெருப்பில் இட்டார். பச்சை மூச்சைச் சுமந்திருந்த பானைகள் தீயில் வெந்து சுவாசிக்க ஆரம்பித்தன.
‘என்ன கிருஷ்ணா பானைகள் எல்லாம் எப்பிடி வந்திருக்கு… ச்சீ… எப்படி வெந்திருக்கு…’ என்றார் நண்பர் சீனிவாசன்.
‘பத்துக்குப் பத்து பாதகமில்ல’ என்றார் சிரிப்பு கலந்த முகத்தோடு’
‘ஏன் கிருஷ்ணா’
‘சொல்லு சீனி’
‘நீ தான் கல்யாணம் பண்ணலையே’
‘ஆமா… சாகப் போற வயசு வரைக்கும் இதையே தான் கேட்டுட்டு இருப்பியா?
‘இல்ல வயசான காலத்தில இருக்கிறத வச்சு சாப்பிட்டுட்டுப் போகாம, ஏன் இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்க’
‘யாரு நானா? ஏன் சீனி நான் கல்யாணம் தான் பண்ணல. ஆனா கொழந்த குட்டிகளோட தான் வாழ்ந்திட்டு இருக்கேன்’ என்ற பூடகம் போட்டார் கிருஷ்ணசாமி.
‘என்ன கிருஷ்ணா சொல்லவே இல்ல’ எவ்வளவு நாளா இது நடந்திட்டு இருக்கு’ என நாசுக்காகக் கேட்டார் சீனி.
‘என்ன பேச்சு ஒரு மாதிரியா இருக்கு’
‘ம்… நீ சொன்னதச் சொன்னேன்.’
‘எப்பிடி?’
நீ தான கிருஷ்ணா கல்யாணம் பண்ணல. குழந்தைகளோட வாழ்ந்திட்டு இருக்கேன்னு சொன்ன?’
‘நம்ம ஆளுகளுக்கு எப்பவுமே கிறுக்கத்தனமான புத்தி தான்.’
ஏதாவது ஒண்ணு சொன்னா ஒடனே தப்பா நெனைக்க வேண்டியது.
நான் புள்ளைகளோட வாழ்ந்திட்டு இருக்கேன்னு சொன்னது நான் செய்ற பானைகள தான் சொன்னேன். அது என்னோட மண் புள்ளகள்யா. நான் சுட்டுப் பெறக்க வைக்கிற பானைப் புள்ளைகள், என்னோடு புள்ளைகள் தான்’ என்று கிருஷ்ணசாமி சொன்னபோது கிறுகிறுத்துப் போனார் சீனிவாசன்.
‘என்ன கிருஷ்ணா ஒன்னோட சிந்தனை வித்யாசமா இருக்கு’
‘ஆமா சீனி… நாம எத செய்றமோ அதையே உசுரா நெனச்சுச் செஞ்சம்னா, அது தான நம்மோட புள்ளைகள்’ என உருகிச் சென்னபோது, சீனிவாசனுக்கு என்னவோ போலானது.
‘தப்பு தான் கிருஷ்ணா, நான் சொன்னது தப்பு தான்.. என்னை மாதிரி சின்னப்புத்தி உள்ள ஆளுகளுக்கு பெருசா சிந்திக்க வராது. ஒரு வட்டத்துக்குள்ளயே சிந்தன சிக்கி வட்டமடிச்சிட்டு கெடக்கு’ என்ன பண்றது, ஒங்கள மாதிரி யோசிக்க வர மாட்டேங்குது’ என்ற சீனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணசாமி வெந்துபோன பானைகளை வேறு இடத்திற்கு மாற்றி வைத்துக் கொண்டிருந்தார்.
‘கிருஷ்ணா’
‘ம்’
‘இந்த பானைகள் என்னென்னத்துக்கு உபயோகப்படும் போது ஒங்க மனசு சாந்தியடையும்’
‘என்ன திடீர்னு இப்பிடியொரு கேள்வியக் கேக்குறீங்க சீனி’ என்று கொஞ்சம் மரியாதை கலந்தே பேச ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.
‘நீ கேக்குறதும் நல்ல கேள்வி தான்’ என்னோட பிள்ளைகள் இல்லையா? அதுக சந்தோசமா இருந்தா நல்லதுக்கு உபயோகப்படுத்துனா மனு நெறையும் அதையே கெட்டதுக்கு பயன்படுத்துனா கொஞ்சம் கசுமாலமாத்தானிருக்கும்.
இத விட. ஒண்ணு சொல்றேன் கேளு. யாராவது பானைய ஒடச்சாங்கன்னா, அம்புட்டுத்தான் யாராயிருந்தாலும் பாக்க மாட்டேன். படீர்ன்னு திட்டிப்புடுவேன்.
படச்ச எனக்குத்தான தெரியும் பானையோட அரும’ என்று கிருஷ்ணசாமி சொன்னபோது சீனிவாசனுக்குச் சிலிர்த்தது.
உசுரோட இருக்கிறங்களையே இங்க என்னா ஏதுன்னு கேக்காத இந்த ஒலகத்தில மண்ணு மேல இவருக்கு இம்புட்டு மரியாதையா’ கிருஷ்ணசாமியின் உயர்ந்த எண்ணங்களை வியந்து பாராட்டினார் சீனிவாசன்.
நாட்கள் நகர்ந்தன, அன்று ஒரு நாள், ஊரில் திருவிழாவுக்கான பாட்டுக் கச்சேரி, நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அது முழுக்க முழுக்க கடம் (பானை) இசைக் கச்சேரி.
கச்சேரிக்குப் போகும்வரை கிருஷ்ணசாமிக்கு என்ன நடக்கப் போகிறதென்று தெரியாது.
மேடையிலிருந்த திரை விலகவும் மேடையில் பானையுடன் உட்கார்ந்திருந்தனர் இசைக் கலைஞர்கள்.
இதைப் பார்த்த கிருஷ்ணசாமிக்கு அவ்வளவு ஆச்சர்யம். பாடிக் கொண்டே பானையில் இசையைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆகா… பானையில இருந்து இவ்வளவு இசையா? ஆராதித்தார், அதிசயித்தார்.
பானையிலிருந்து வரும் ஒவ்வொரு இசையும் கிருஷ்ணசாமிசயைப் புகழ்வதோகவே நினைத்துக் கொண்டார். கடைசி வரை பானைக் கச்சேரியைக் கேட்டுவிட்டுப் போன கிருஷ்ணசாமி, ஓடிப்போய் பத்துப் பானைகளைத் தூக்கி வந்தார்.
‘சாமி, நீங்க நல்லா பானையில வாசிச்சீங்க. என்னோட அன்பளிப்பு, இந்தாங்க என்று ஆவலாய்க் கொடுத்தார்.
‘இது எதுக்குங்க’ என்றார் கடம் வாசித்தவர்.
‘இது என்னோட பிள்ளைகள், நீங்க வச்சுருக்கிற பானைகள் மாதிரி தான், என்னோட பானைகளும் . வாசிச்சுப் பாருங்க. நல்ல சத்தம் வரும்’ என்றார் கிருஷ்ணசாமி.
இல்லங்க இது வேற என்று ஒருவர் சொல்ல வாய் எடுத்தபோது, கடம் வாசிப்பவர் அதை அன்போடு வாங்கிக் கொண்டார்.
‘கிருஷ்ணசாமிக்கு அப்படியொரு சந்தோசம். அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.
‘அங்கே ஒரு குடும்பத் தகராறில் ஒரு பெண், தன் கணவனை பானையைத் தூக்கி வீதியில் எறிந்து, அதை உடைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.
‘வந்தது, கிருஷ்ணசாமிக்கு கடுமையான கோபம்’ அது முதல், மனிதத் தேவைகளுக்கு அவர் பானை செய்வதை விட்டுவிட்டு, இசைக்கான பானை செய்வதிலேயே ஆர்வம் காட்டினார்.
ஒரு நாள் இரவு பானையைத் தீயில் இட்டபோது, மயங்கிக் கீழே விழுந்தார். அங்கேயே மரணமடைந்தார்.
அடுக்கி வைக்கப்பட்ட பானைகள் எல்லாம் கீழே உருண்டு விழுந்து இரங்கல் சத்தம் போட்டது.
கடம் பானைகள் தீயில் எரிந்து முழுமையடைந்து கொண்டிருந்தன.