வாழ்க்கை பயணம்

அவசரமாக சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டியிருந்தது. தனது துணிகளை சூட்கேசில் எடுத்து வைத்து கொண்டிருந்தார் 70 வயது தனசேகரன்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் பிரபு.
அப்பா… உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்து வைச்சுக்கோங்க. மாத்திரை எடுத்துக்கிட்டீங்களான்னு செக் பண்ணிக்கோங்க என்றான் பிரபு.
எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு இருக்கேன். எத்தனை மணிக்கு தம்பி ட்ரெயின் என்று கேட்டார் தனசேகர்.
இரவு 9 மணிக்கு தான் ட்ரெயின் 7.30 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்புவோம். நான் காரில் உங்களை கொண்டு வந்து ரெயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்துடேறன் அப்பா என்றான் பிரபு.
தம்பி ட்ரெயின்ல கீழ் படுக்கையா… அப்பாவுக்கு ராத்திரி சரியா தூங்கலைன்னா கஷ்டம்.
இல்ல அப்பா… கீழ் படுக்கை கிடைக்கலை. நடுவில் தான் படுக்கை.
என்ன தம்பி இப்படி சொல்ற? இது ரொம்ப கஷ்டமே. என்னால ஏறி படுக்க முடியாதே. ராத்திரி சரியா தூக்கலைன்னா அப்பாவுக்கு ரொம்ப கஷ்டம் என்றார் தனசேகர்.
கீழ் படுக்கை கிடைக்கலை. ரெயிலில் பக்கத்து சீட்டில் இருக்கிற யாருக்கிட்டையாவது சொல்லி மாத்திக்கிடலாம்.
அப்பா டிபன் ரெடியா இருக்கு. இங்கேயே சாப்பிட்டு கிளம்பிடலாம் என்று பிரபு கூறினார்.
அதைத் தொடர்ந்து தனசேகர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தனது மகனுடன் காரில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக் சென்றார்.
பிரபு தனது காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உடன் வந்தார்.
அங்கு பிளாட்பாரத்தில் இருந்த அறிவிப்பு பலகையில் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் எந்த பிளாட்பாரத்தில் இருக்கிறது என்பதை பார்த்தனர்.
5வது பிளாட்பாரரத்தில் ட்ரெயின் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து பிரபு தனது தந்தையின் பெட்டியை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல தனசேகர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்.
தனசேகருக்கு ஒதுக்கப்பட்டிருந்த எஸ் 11 கோச் வந்ததும் பிரபு அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சார்ட்டில் தனது தந்தை பெயர் இருப்பதை உறுதி செய்து கொண்டு பெட்டிக்குள் சென்றான்.
அவனுக்கு பின்னால் ஏறிய தனசேகரும் தனக்கு உரிய இடத்தில் அமர்ந்தார்.
தனசேகருக்கு அருகில் உள்ள சீட்டில் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இருந்தனர்.
அதில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கீழ் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்ததை தெரிந்து கொண்ட பிரபு, அந்த மாணவர்களிடம் தனது தந்தைக்கு உடும்பு சரியில்லை என்றும் வயதான காலத்தில் அவருக்கு நடு படுக்கையில் ஏறி படுக்க முடியாது என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கீழ் படுக்கையை அவருக்கு விட்டுக் கொடுப்பதாக கூறினர்.
தனசேகர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ரெயில் கிளம்பம் நேரம் நெருங்கியதால் பிரபு தனது தந்தையிடம் அப்பா… டி.டி.ஆர். வந்தவுடன் டிக்கெட்டை காட்டிட்டு அப்புறம் படுத்து தூங்குங்கள், காலையில் கோவைக்கு சென்றதும் போன் செய்யுங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து ட்ரெயின் கிளம்பியது.
தனசேகருடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.
டி.டி.ஆர். வழக்கும் போல் டிக்கெட்டுக்களை சரிபார்த்து சென்றார்.
சிறிது நேரம் ஆனதும் தூங்க வேண்டும் என்று நினைத்த தனசேகர் அந்த மாணவர்களிடம் தனது விருப்பத்தை கூறினார்.
அந்த மாணவர்கள் 4 பேரும் மேல் படுக்கைக்கு சென்றனர்.
தனசேகரும் அவருடன் இருந்த மற்றொரு பயணியும் கீழ்படுக்கையில் படுத்திருந்தனர்.
நீண்ட நேரமாகியும் மாணவர்கள் லைட்டை அணைக்காமல் சிரித்து பேசிக் கொண்டே இருந்தனர்.
லைட் எரிந்ததால் தூக்கம் வராமல் தவித்த தனசேகரன், அந்த மாணவர்களிடம் விளக்கை அணைக்கும்படி கூறினார்.
அவர்களும் அணைத்து விட்டு தங்களது பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
இரவு 10.30 மணியனது. அப்போதும் அந்த மாணவர்கள் தொடர்ந்து சிரித்து பேசிக்கொண்டே இருந்தனர்.
அவர்களின் அந்த சத்தம் கீழ் படுக்கையில் படுத்திருந்த தனசேகர் மற்றும் சக பயணிகளுக்கு இடையராக இருந்தது.
இதைத் தொடர்ந்து தனசேகர், நான் வயசானவன், என்னால் உங்கள் சத்தத்தில் தூங்க முடியவில்லை, தயவு செய்து சத்தம் போடாமல் படுத்து தூங்கும்படி கூறினார்
அதை அந்த மாணவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர்.
தனசேகர் அமைதியாக படுத்துக் கொண்டார்.
ஆனால் அந்த மாணவர்கள் சிரித்து பேசிக் கொண்டு வந்தது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருந்தது.
ஒருகட்டத்தில் பயணிகள் இரண்டு, மூன்று பேர் ஒன்று சேர்த்து அந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த மாணவர்களும் பதிலுக்கு வாக்கவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் சண்டை நீண்டு கொண்டே போனது.
அப்போது மற்றொரு பெட்டியில் இருந்த டி.டி. ஆர். விரைந்து வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சாமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது பேசிய அவர், நீங்க எல்லோரும் கொஞ்ச நேரம் தான் பயணம் செய்யப் போறீங்க. அந்த நேரத்தில் எதற்கு இந்த பிரச்சனை என்று கூறி,
அந்த மாணவர்களிடம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று சத்தம் போட்டார்.
அதன் பின் சாமாதானம் ஆன மாணவர்கள் அவரவர் படுக்கையில் படுக்கத் தொடங்கினர்.
அப்போது தனசேகர்,
‘‘ தம்பி உங்க வயதில் ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம் தான். அதில் தவறு இல்லை.
ஆனால் நம்மால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும்’’ என்று அமைதியாக கூறினார்.
அப்போது தனசேகருடன் பயணித்த மற்றொரு பயணி,
‘‘என்ன சார் இவ்வளவு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு நீங்க அமைதியாக பேசுகிறீர்கள். நீங்கள் தான் தூக்கம் வராமல் அவதிப்பட்டீர்களே. அந்த மாணவர்களை சத்தம் போட வேண்டியது தானே’’ என்று கூறினார்.
அதற்கு தனசேகர் சிரித்துக் கொண்டே
இந்த ரெயிலில் நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்பது சிறிது நேரம் தான்.
அந்த சிறிய நேரத்தில் சின்ன சின்ன விஷயத்திற்காக ஒருவர் மற்றொருவரை திட்டுவதும் சண்டை போடுவதும் தேவையற்றது.
ஒவ்வொரு ரெயில் நிலையம் வந்தவுடன் அந்த ஊருக்கு செல்பவர்கள் இறங்கி சென்றுவிடுவார்கள். அதற்கு பின் அவர்களை நாம் பார்க்கப் போவதில்லை.
இருக்கும் கொஞ்ச நேரத்தில் எதற்கு மற்றவர்களுடன் சண்டை போட வேண்டும்.
அவர்கள் கொஞ்ச நேரம் ஜாலியாக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய கஷ்டத்தை அவர்கள் உணர மாட்டார்கள். அதை நாம் ஏன் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
எதற்கு எடுத்தாலும் சண்டை போடக் கூடாது.
நாம் விட்டுக் கொடுத்து போவதால் எந்த தப்பும் கிடையாது.
இதே போல் தான் வாழ்க்கை பயணமும்.
நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்ந்தால், வாய் சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காண்பது, நமது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயலாகும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள். வாழ்க்கை பயணம் குறுகிய காலமே.
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே.
வாழும் சிறிது காலத்தில் உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம். மன்னிப்போம்… மறப்போம்… நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியை கடைபிடிக்க வேண்டும்.
அதை விடுத்து ஒருவாருக்கு ஒருவர் சண்டை போட்டு அவரையும் துன்பப்படுத்தி, நாமும் துன்பப்பட்டு வாழ வேண்டியது தேவையற்றது என்று தனசேகர் கூறினார்.
அந்த பயணியும் தனசேகரன் கூறிய கருத்துக்களை யோசித்து பார்த்தார். அதுவும் நியாயமாக தோன்றியது.
அதன் பின் அவர்கள் இரண்டு பேரும் தூங்கச் சென்றனர்.
நேரம் செல்ல செல்ல அவரவர் ரெயில் நிலையம் வந்ததும் இறங்கிச் சென்றனர்.
கோவை வந்தவுடன் தனசேகரனும் ரெயிலை விட்டு இறங்கி, தனது மகனுக்கு போன் செய்து நல்லபடியாக வந்த தகவலை தெரிவித்துவிட்டு தனது அடுத்த வேலையை தொடர்ந்தார்.

 துரை. சக்திவேல்