எண்டோஸ்கோப்பி மூலம் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன்

சென்னை, செப். 24–
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட 7 பேருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் காது கேட்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறையில், காது கேட்கும் திறனை இழந்தவர்களுக்கு எண்டோஸ்கோப்பி என்ற உள்நோக்கி கருவி மூலம் அறுவைச் சிகிச்சை செய்து மீண்டும் காது கேட்கும் திறன் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இஎன்டி துறையின் கருத்தரங்கம் மருத்துவமனையில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட இஎன்டி படிக்கும் மாணவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில் மரபணு பிரச்சினை, விபத்து மற்றும் சீழ் வடிதல் போன்ற காரணத்தால் காது கேட்கும் திறனை இழந்த 3 பெண்கள், 4 ஆண்கள் என 7 பேருக்கு எண்டோஸ்கோப்பி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக காது, மூக்கு, தொண்டை துறையின் தலைவர் எம்.என்.சங்கர், டாக்டர்கள் ஆண்டனி, முத்துசெல்வி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
ஒரே நாளில் 7 பேருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் திறன் கொண்டு வரப்பட்டுள்ளது. எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் காதில் தழும்பு இருக்காது. அறுவைச் சிகிச்சைக்கான நேரமும் குறைவு. விரைவில் வீடு திரும்பலாம். இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ஒருவருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 7 பேருக்கும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.