3வது டெஸ்ட்: ஷிகர் தவான் அபாரம்

சதம்பல்லேகலே, ஆக. 12–
இந்தியா -–இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகளில் காலேயில் நடந்த முதல்  போட்டியில் 304 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில்  இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று  தொடரை 2–0 கைப்பற்றியது.
3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் இன்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மிகவும் அருமையாக விளையாடிய  லோகேஷ் ராகுல் 85 ரன்கள் எடுத்திருந்தபோது புஷ்பகுமாரா பந்து வீச்சில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அப்போது அணியின் ஸ்கோர் 188 ஆக இருந்தது. மறுமுனையில் ஷிகர் தவான் ரன்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான்  தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
சர்வதேச போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 6 வது சதம்  இதுவாகும்.
இந்திய அணி 48 ஓவர்கள் வரை ஒரு  விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷிகர்  தவான் 118 ரன்களுடனும், புஜரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, அரைசதம்  அடித்த லோகேஷ் ராகுல், தொடர்ச்சியாக 7- அரைசதங்கள் அடித்து புதிய சாதனை  படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.