மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

மதுரை, ஆக. 12–
மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளுக்காக ௫௫ லட்சத்து ௬௦ ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டெங்கு ஒழிப்பு மருந்து கொள்முதல் செய்ய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூட்டத்தில் கமிஷனர் அனீஷ் சேகர் தலைமையில் சிறப்பு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை கமிஷனர் ப.மணிவண்ணன், நகரப் பொறியாளர் மதுரம், உதவி கமிஷனர் கருப்பையா, நகர்நல அலுவலர் சதிஷ்ராகவன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச் சாமி, கௌசலாம்பிகை, செல்லப்பா, செயற் பொறியாளர்கள் சந்திரசேகர், சேகர், ராஜேந்திரன், உதவி ஆணையாளர் ஆர்.ரெங்க ராஜன், உதவி செயற்பொறியாளர் செந்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற செயலாளர் ராஜகோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஆயுள் காப்பீட்டுக் திட்டம் செயல்படுத்தவும் இதனை மாநகராட்சி பொது நிதியிலிருந்து செலவு செய்யவும் அரசுக்கு உரிய பிரேரணை அனுப்பி வைக்கவும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கழிவறைகள் எங்கெங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ள டாய்லெட் லொக்கேட்டர் வசதி ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 9 ஆண்டுகள் முடிவுற்ற இனங்களுக்கு தற்போதைய அங்காடி மதிப்பீட்டின்படி வாடகை மறு நிர்ணயம் செய்திடவும், மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களின் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் மருந்து சுமார் 55 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கும் இதற்கான செலவினத்தை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து வழங்குவதற்கும், மதுரை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் நிரந்தரம், தொகுப்பூதியம், தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் 2413 நபர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு எண்ணம் வீதம் ஒளிரும் பட்டையுடன் கூடிய டி.சர்ட் 4ஆயிரத்து 826 ரூபாய் , 20 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.