பெங்களூரிலிருந்து சென்னை வந்த சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது

சென்னை, ஆக. 12–
பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த கர்நாடகா அரசு பஸ், பூவிருந்தவல்லி அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 44 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ்சை பெங்களூரைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதரா ஓட்டினார். இன்று காலை 8.20 மணிக்கு சொகுசு பஸ், திருமழிசை சிக்னலில் நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியே வந்தது. இதை பஸ் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே டிரைவரிடம் புகை வெளியே வருவது குறித்து தெரிவித்தனர். அவர் பயணிகளை உடனடியாக பஸ்சை விட்டு வெளியேறுமாறு கத்தினார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் தங்களது பெட்டி, பைகளை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சிறிது நேரத்தில் என்ஜின் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்து பஸ் முழுவதும் பரவ தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.
ஆனால், பெரும்பாலான பயணிகளின் உடமைகள் பேருந்தின் உள்ளே மாட்டிக்கொண்டதால், முக்கிய ஆவணங்களை சிலர் இழந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அது வெடிக்கும் சூழ்நிலை நிலவியது. இதையடுத்து 50 மீட்டருக்கு சாலையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இந்த விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.