தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்த இந்திய பாதுகாப்புத் துறை முடிவு

புதுடெல்லி, ஆக. 12–
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்த இந்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்கள் காரணமாக அவ்வபோது எல்லைப்படையினர் தீவிரவாதிகளிடையேயான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களில் நாட்டிற்காக போராடி ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி சண்டையிடுவதன் அடுத்தகட்டமாக ரோபோக்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட 544 ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
எதிரிகளைக் கையாளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை எளிதில் கண்டுபிடித்துவிடும். இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.
தீவிரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிகளில் மறைந்து வந்து தாக்குதல்களை நடத்துகின்றனர், அந்த சமயங்களில் பள்ளத்தாக்குகளில் இருந்து வந்து ரோபோக்கள் தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.
ஆயுத சண்டை மற்றும் வெடிபொருட்களை கையாள்வதோடு ரோபோக்கள் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிக்கும்.
200 மீட்டர் தூரம் வரையுள்ள தகவல்களை சேகரிக்கும் திறன் படைத்தவைகளாக இந்த ரோபோக்கள் கேமராக்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் பொருத்தப்பட்டு இருக்கும். பாதுகாப்புத் துறையின் கொள்முதல் விதிகள் 2016க்கு உட்பட்டு இவை கொள்முதல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.