ஆக்சிஜன் சப்ளை நின்றதால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கோரக்பூர், ஆக. 12–
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் இன்றோடு 63 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது குறித்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள 2 அமைச்சர்களை நியமித்து, விசாரணைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இந்த மாவட்டத்தில் பெரிய மருத்துவமனையாகவும் இது உள்ளது. இங்கு கடந்த 10ம் தேதி ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், அதிகபட்சமாக ஒரே நாளில் 23 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட 30 குழந்தைகள் பலியானார்கள். அடுத்த சில மணி நேரத்தில் 11 வயது குழந்தை உட்பட மேலும் சில குழந்தைகள் பலியாகினர். பலி எண்ணிக்கை இதுவரை 63 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபரீத சம்பவத்தை அடுத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள 2 அமைச்சர்களை நியமித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவ கல்வி அமைச்சர் அசுதோஷ் டாண்டன் கூறுகையில், ஆக்சிஜன் சப்ளை பிரச்சினை காரணமாக யாரும் இறக்கவில்லை. சம்பவம் குறித்து கோரக்பூர் கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அறிக்கை கிடைக்கும் என்றார்.
சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. அந்த மருத்துவமனைக்கு கடந்த 9ம் தேதி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் புகார் அளவிக்கவில்லை. இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
குலாம் நபி ஆசாத்
இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பாரதீய ஜனதா அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய்
ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் மரணம் நேரவில்லை. நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது என்று கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜீவ் ராட்டெலா தெரிவித்தார்.
இறந்த குழந்தைகளை பெற்றோர்களிடம் கொடுத்து விட்டது நிர்வாகம். பிரேத பரிசோதனை கூட நடத்தவில்லை. இது துரதிர்ஷ்டமே என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்தார்.
சோனியா வலியுறுத்தல்
அப்பாவிக் குழந்தைகள் 60 பேர் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டது தண்டனைக்கு உரியது என்றும் இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தீர்க்கமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார்.