வெங்கையா நாயுடு இன்று பதவியேற்றார்

புதுடெல்லி, ஆக. 11–
இந்திய நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு (வயது 68) இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  ஜனாதிபதி மாளிகையில்  பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
துணை  ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்பதற்கு  முன்னதாக  ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை  செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தீன் தயாள் உபத்யாய் சிலையில் மலர் தூவி  மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கார், சர்தார்  வல்லபாய் படேல் ஆகியோர் சிலைக்கும் மாலை அணிவித்து வணங்கினார்.
பிறகு  ஜனாதிபதி மாளிகைக்கு அவர் வந்தார். அங்கு உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று  காலை 10 மணியளவில் நடந்த பதவியேற்பு விழாவில், அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மோடி, எடிப்பாடி
பன்னீர்செல்வம்
விழாவில்,  பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சி  தலைவர்கள், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பாரதீய ஜனதா மூத்த  தலைவர் அத்வானி, அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள்  முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள்  கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து கூறினர். பதவி ஏற்றுக்கொண்டதும் வெங்கையா நாயுடு  உரையாற்றினார். அவர் பேசுகையில், பாராளுமன்ற மாநிலங்களவையை பயமின்றியும்  பாரபட்சமின்றியும் நேர்மையான முறையில் நடத்தப் போவதாக கூறினார்.  மாநிலங்களவை மாண்பை காக்க தனக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதியிடம்
ஆசி பெற்றார்
சிறந்த முறையில் ராஜ்யசபையை வெங்கைய நாயுடு நடத்துவார் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார்.
மாநில  முதல்வர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட வெங்கைய்யா நாயுடு பிறகு தனது  அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.
இன்று பிற்பகல் அவர் ராஜ்ய சபையின் தலைவர் பதவியை ஏற்க உள்ளார்.
வெங்கையா  நாயுடு இன்று பதவி ஏற்பதற்கு முன்னால் நேற்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். வெங்கையா நாயுடு  முகர்ஜியுடன் எடுத்துக் கொண்ட ஒரு சில புகைப்படங்களை அவர் தன் ட்விட்டரில்  வெளியிட்டார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்றுடன் (10–ந்தேதி) முடிவடைந்தது. இதனையடுத்து கடந்த வாரம் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வெங்கையா நாயுடு வெற்றி பெற்று நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் மொத்தம் 98.12 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதுவே துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.
மொத்த பதிவான 750 ஓட்டுகளில் வெங்கையா நாயுடு 516 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கோபால் கிருஷ்ண காந்திக்கு 244 ஓட்டுகள் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம்.