நம்பியூரில் புதிய கல்லூரி

கோபி தொகுதிக்கு உட்பட்ட திட்டமலையில், புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர் பேரூராட்சி, திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை, கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொிவித்ததாவது:–

நம்பியூர்ப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதி மக்களின் கோரிக்கையான, அவிநாசி-அத்திக்கடவு திட்டம், 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.250 கோடி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு

கடந்த 4 மாதங்களில், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், அரசு தலைமை மருத்துவமனை அருகே, உயர்மட்ட பாலம், கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் என, பல்வேறு திட்டங்களுக்கு, ரூ.1,400 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும், தாலுக்காவுக்கான அறிவிப்பு, மிக விரைவில், முதலமைச்சரால் அறிவிக்கப்படும்.

18 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி, ஈரோடு மாவட்டத்தில் துரிதமாக நடைபெற்று வருகின்றது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கணினி மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள, வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என தொிவித்தார்.

கல்வித்துறையில் புரட்சிகர மாற்றங்கள்

விழாவில், அமைச்சர் கே.சி.கருப்பணன் தொிவித்ததாவது:–

கோபி தொகுதிக்கு உட்பட்ட, நம்பியூர் பேரூராட்சி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிறப்பான முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதில், ரேங்க் முறையை மாற்றி, மாணவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க, வழிவகை செய்துள்ளது.

இதுபோன்று, பள்ளிக்கல்வி துறையில் நடைபெற்று வரும் மாற்றங்களை பொதுமக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைந்து, பயில கூடிய மாணவ, மாணவிகள் நல்லமுறையில் கல்வி கற்று, சிறந்த கல்வியாளர்களாக திகழ வேண்டும் என தொிவித்தார்.

விழாவில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி, எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன், கோவை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) ச.கலா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆ.சொக்கப்பன் உட்பட கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.