முருகப்பா ஹாக்கி : பஞ்சாப் தமிழ்நாடு வெற்றி

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில்  நடைபெற்று வரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்று போட்டியில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியை 3–2 என்ற கோல் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.

91-வது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில்  நடைபெற்று வருகிறது.  இதில் மொத்தம் பத்து அணிகள் பங்கு பெற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று  நடைபெற்ற ‘ஏ’ பிரிவின் லீக் போட்டியில் தமிழ்நாடு – பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் மோதின. இப்போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்தில் வங்கி அணியின் ஜஸ்கரண் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
அடுத்த நிமிடமே தமிழ்நாடு அணியின் சரவணகுமார் பதில் கோல் அடித்தார். தமிழக அணியின் வீரத்தமிழன் 26-வது நிமிடத்திலும், 33வது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

41வது நிமிடத்தில் வங்கி அணியின் ககன்பிரித் சிங், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.  அதன்பின்னர் இரு அணியினரும் இறுதிவரைகோல் அடிக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.