ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து தெரியவில்லை: இந்திய தூதர்

புதுடெல்லி, ஜூலை 21–
மோசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என ஈராக்கிற்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மோசூலை கடந்த 2014ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். மோசூல் நகரை மீட்க அந்நாட்டு ராணுவம் கடந்த 3 ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டது.
அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன் மோசூல் நகரை முழுமையாக மீட்டது. தீவிரவாத எதிர்ப்பு படையினர் வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வீடுகளில் வசிப்பவர்களின் அடையாள ஆவணங்களை பரிசோதனை செய்தனர். மேலும், வெளிநாட்டினர் பற்றிய தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஈராக் நாட்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு மருத்துவமனை கட்டுமான பணிக்காகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் 39 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பது குறித்து உறுதியாக தெரியாமல் இருந்துவந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதூஷ் நகரில் உள்ள சிறைச்சாலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் சிறை வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான ஈராக் நாட்டு தூதர் பக்ரி அல் இசா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகை யில், மோசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.