‘‘43 அரசு கலை– அறிவியல் கல்லூரிகளில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடங்கள்’’

சென்னை, ஜூன்.19–
தமிழ்நாட்டில் 43 அரசு கலை– அறிவியல் கல்லூரிகளில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடங்கள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பள்ளிக் கல்வித் துறைக்கு அளித்து வரும் அதே அளவு முக்கியத்துவத்தை உயர்கல்விக்கும் புரட்சித் தலைவி அம்மா அளித்து வந்தார். புரட்சித் தலைவி அம்மாவால் கடந்த 6 ஆண்டுகளில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் என 65 புதிய கல்லூரிகளும், ஸ்ரீரங்கத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் தேசிய சட்டப்பள்ளி ஆகியவை துவக்கப்பட்டுள்ளன. எனவே தான் உயர்கல்வியில் தேசிய மாணவர் சேர்க்கை விகிதம் 24.5 என இருந்தாலும் தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 44.3 ஆக உள்ளது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
உயர் கல்வித் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரூ. 210 கோடியில்
கட்டமைப்பு வசதிகள்
* கல்வியின் தரத்தினையும், மாணாக்கர்களின் அறிவுத் திறனையும் உயர்த்தும் பொருட்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இதன் மூலம் 2011–-12–ம் கல்வியாண்டில் 7,17,442 -ஆக இருந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை 2016–-17–ம் கல்வியாண்டில் 9,85,974-ஆக உயர்ந்துள்ளது.
இவ்வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும்.
இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்” என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.
* மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017–-18–ம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்கள், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. மாநிலத்தில் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணாக்கர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணாக்கர்கள் மற்றும் அதிகளவில் மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017–-18-–ம் கல்வியாண்டிலிருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.