3000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அறை

சென்னை, ஜூன்.19–
அரசு உயர்நிலை – மேல்நிலை பள்ளிகளில்   440 கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், 3000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘சமுதாயத்தின் விளிம்பில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதார வளர்ச்சி பெற்று ஏனையோருக்கு இணையாக உயர்வடைய வேண்டும் என்றால் அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவேண்டும். மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி அளிக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி, அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும். எனவே தான் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் புரட்சித் தலைவி அம்மா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில், மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடை, விலையில்லா பாட நூல்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை, விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்கள், ஒரு இணைக் காலணிகள், விலையில்லா மிதி வண்டிகள், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு போன்ற பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
மேலும், மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மொத்தம் 5,000 ரூபாய் கல்வி உதவித் தொகை போன்ற உன்னதத் திட்டங்களும் புரட்சித் தலைவி அம்மாவால் செயல்படுத்தப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
* வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா
10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
100 ஆண்டு
டி.பி.ஐ. வளாகத்தில்….
* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் அறை ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.
* பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.