‘‘வண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே’’

சென்னை, ஜூன் 19–
வண்ண மீன் உற்பத்திக்காக நாட்டிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைத்தது ஜெயலலிதா மட்டுமே என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதத்துடன் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேட்டார்.
அதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து கூறியதாவது:–
தமிழகத்தின் வண்ண மீன் வளர்ப்பு, பண்ணையாளர்களுக்கு அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் அளித்து வண்ண மீன் உற்பத்தியை மேம்படுத்திட தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் விதி எண் 110ன்கீழ் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின், மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் ரூ.10 கோடியே 30 லட்சம் நிதி உதவியுடன் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. எனவே கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைப்பதற்கான செயற்குறிப்பில் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கூறும்போது, கொளத்தூர் பகுதி வண்ண மீன் வளர்ப்பு மையமாக விளங்குகிறது. அங்குள்ள நிலத்தடி நீர் வண்ண மீன்கள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. அப்பகுதியில் 200க்கு மேற்பட்டோர் வண்ண மீன் வளர்ப்பு மையங்கள் உள்ளன. 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நேரடி வருவாய் பெறுகிறார்கள். ரூ.30 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே அங்கு வண்ண மீன் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நிலமிருந்தால்
நடவடிக்கை
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், எதிர்க்கட்சி தலைவரின் கூற்றில் மாறுபட்ட கருத்து இல்லை. அங்கு வண்ண மீன் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் அவசியம், நிலம் இருந்தால் அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். நாட்டிலேயே வண்ண மீன்களுக்காக தொழில் நுட்ப பூங்கா அமைத்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்பதை பெருமை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மாதவரத்தில் அமைக்கப்பட்டுவரும் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாதவரம் பகுதியில் வண்ண மீன் தொழில்நுட்ப பூங்காவில் கொளத்தூர் பகுதி வண்ண மீன் உற்பத்தியாளர்களுக்கும் இடம் வழங்க முடியும். வண்ண மீன் உற்பத்தியில் கேரளா முன்னணியில் உள்ளது. மாதவரத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்ட பிறகு வண்ண மீன் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும். அங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வண்ண மீன் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
மீன் உணவு தயாரிக்கும்
ஆராய்ச்சி மையம்
மு.க.ஸ்டாலின் கூறுகையில், வண்ண மீன்களுக்கான இயற்கை தீவனம் மற்றும் மீன் உணவு தயாரிக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்க முன்வருமா? வண்ண மீன் ஏற்றுமதி மையம், வண்ண மீன்களுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், கொளத்தூர் பகுதியில் இருக்கும் வண்ண மீன் உற்பத்தியாளர்களிடம் கருத்து கேட்டுதான் மாதவரத்தில் வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கொளத்தூரில் இட வசதி இருந்தால், இயற்கை தீவனம், மீன் உணவு ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார்.