மேல்நிலைப் பள்ளிகளில் ‘வை–பை’ வசதி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 19–
‘‘மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி செய்து தரப்படும்’’ என்று சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தென்காசி உறுப்பினர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார். தென்காசி நகரத்தில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்றார்.
அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.
தென்காசி கிளை நூலகம் எண்.31 மட்டப்பா தெரு, திருநெல்வேலி மெயின்ரோடு, தென்காசி என்ற முகவரியில் 21 ஆயிரத்து 880 ரூபாய் மாத வாடகையில் 3 ஆயிரம் சதுரஅடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு கோரப்பட்டத்தை தொடர்ந்து மேற்படி நூலகத்திற்கு தரைதளம் மற்றும் முதல் தளத்தினை அமைக்க தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளரிடமிருந்து சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் மதிப்பீடு பெறப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் சொந்த கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே இருந்த தென்காசி கிளை நூலக கட்டிடம், ரெயில்வே மேம்பால பணிக்காக இடிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 320 நூலகங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட 37 அறிவிப்புகளில் 11 அறிவிப்புகள் நூலகம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
அதை தொடர்ந்து வேடச்சந்தூர் உறுப்பினர் பரமசிவம் துணை கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி நூலகங்களை மாவட்ட நூலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பள்ளி கல்வித்துறையிடம் அதனை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அனைத்து நூலகங்களிலும் கம்ப்யூட்டர் வசதி, வைபை வசதி, இ–ரீடிங் மையம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், உள்ளாட்சி நூலகங்களை பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வர உள்ளாட்சி அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் வைபை வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.