‘‘முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது’’: கவர்னர் மாளிகையில் திருவள்ளூவர் சிலை திறந்து வைத்து வித்யாசாகர் ராவ் பெருமிதம்

சென்னை, ஜூன்.19-–
முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது என்று சென்னை கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலையை கவர்னர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்து பேசினார்.
சென்னை கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை நிறுவவேண்டும் என்று தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, கவர்னர் மாளிகை வளாகத்தில் 4 அடி உயரம், 4½ அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், ஜார்கண்ட் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்திய செஞ்சிலுவை சங்க (தமிழ்நாடு கிளை) துணைத்தலைவர் டாக்டர் வடிவேல் முகுந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னரின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா வரவேற்று பேசினார். துணை செயலாளர் முரளிதரன் நன்றி கூறினார்.   நிகழ்ச்சியில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசுகையில் கூறியதாவது:–
தெய்வப் புலவரும், உலகின் மிகப்பெரிய தத்துவ ஞானியுமான திருவள்ளு வரின் சிலையை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டைய காலங்களில் புத்தகம் அச்சிடுவதும், அதற்கான காகிதங்களும் இல்லை. ஆனால், வேதங்கள், உபநிடதம், புராணங்கள் எல்லாம் நம் முன்னோர் மனதில் பதிய வைத்து பாதுகாத்துள்ளனர்.
இந்த உலகத்துக்கு, இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் புனித நூல்கள் கிடைத்துள்ளது. அதில் செம்மொழியான தமிழில் இருந்து திருக்குறள் உலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது. மனித இனம் எப்படி ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை போதிப்பதுடன் ஒரு வழிகாட்டி புத்தகமாகவும் திகழ்கிறது. 83 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
திருக்குறள் நூலை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ‘இது கிறிஸ்து பிறப்புக்கு முன்பு அதாவது கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும், 1-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டு இருக்கலாம்’ என்று கூறுகின்றனர். திருக்குறள் அன்பு, கண்ணியம், மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை போதிக்கிறது.
இப்படி ஒரு புகழ்பெற்ற புலவரின் (திருவள்ளுவர்) திருவுருவ சிலையை கவர்னர் மாளிகையில் ஏன் திறக்கக்கூடாது? என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். அதன்படி இந்த சிலை திறக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கவர்னர் மாளிகை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் குழந்தைகள் திருவள்ளுவரின் அறிவுரைகளை நிச்சயம் கற்றுக்கொள் வார்கள் என்று நம்புகிறேன். திருவள்ளுவரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு குழந்தைகள் மற்றும் மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை மட்டுமல்லாது, அவ்வையார் சிலையையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வையார் சிலை விரைவில் திறக்கப்படும்.
அதேபோல நான் சென்னை வந்தபோது, இங்குள்ள வெப்பத்தை உணர்ந்தேன். இத்தகைய சூரியசக்தியை நல்ல முறையில் எப்படி பயன்படுத்தலாம்? என்று யோசித்தேன். அதன்படி சென்னை மற்றும் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சூரிய சக்தி உற்பத்தி மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த மையங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுகையில், “கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது திருக்குறள். பண்டைய கால கல்விக்கும், இப்போது உள்ள கல்விக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் கல்விதான் ஒருவனது அறிவுக்கண்ணை திறந்து, ஒழுக்கத்துடன் வாழவைக்கும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதி வைத்தி ருக்கிறார். கவர்னர் மாளிகை யின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் விதமாக இந்த திருவள்ளுவர் சிலை அமைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.